ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 23, 2020

Comments:0

ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பயிற்சியும் முயற்சியும் இருந்தால் வானம் கூட வசப்படும் என்பது உண்மை. அந்த வகையில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருபால் ஆசிரியப் பெருமக்களுக்குப் பணியிடைப் பயிற்சிகள் என்பன அத்திப் பூத்தாற்போல் கல்வித் துறையால் எப்போதாவது வழங்கப்படும். அனைவருக்கும் அல்ல. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே தொலைவில் ஆசிரியர் பயிற்சி நிலையம் அமைந்திருக்கும் இடங்களில் நடைபெறும். ஏனையோர் அந்த வரங்களுக்காகப் பல்லாண்டுகள் தவமிருந்த கதைகள் உண்டு. குறிப்பாக உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி வகுப்பாசிரியர்களுக்குப் பயிற்சிகள் என்பவை எட்டாக்கனிகளே! தொடக்க நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் புதிய பாடநூல்கள் சார்ந்த வலுவூட்டும் பயிற்சிகள் முதற்கொண்டு குறைந்த பட்ச கற்றல் இலக்குகள், கற்றலில் இனிமை முதலான பயிற்சிகள் பரவலாக அனைத்துத் தொடக்கக்கல்வி ஆசிரியர் பெருமக்களுக்கு அவர்கள் பணிபுரியும் ஒன்றியங்களில் தலைசிறந்த கருத்தாளர்களைக் கொண்டு சிறப்பாக வழங்கப்பட்டன. இப்பயிற்சிகள் அனைத்தும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தாரால் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு கட்டுக்கோப்புடன் நடத்தி முடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. வழங்கப்பட்ட அனைத்து பயிற்சி முகாம்களிலும் பயிற்சியின் இறுதி நாளின் பிற்பகலில் பயிற்சியில் பெற்ற புதிய கருத்துக்கள், சிந்தனைகள், அனுபவங்கள் போன்றவற்றின் அடிப்படையில் அனைத்து ஆசிரியர்களும் குழு வாரியாக தத்தம் கற்றல் மற்றும் கற்பித்தல் சார்ந்த ஆக்கங்களையும் படைப்புகளையும் காட்சிப்படுத்துவது என்பது விழாக்கோலம் போல காட்சியளிக்கும். எல்லா வகைப் பயிற்சிகளும் ஆசிரியப் பெருமக்கள் மனநிறைவு கொள்ளத்தக்க வகையில் இருந்தது மற்றுமொரு சிறப்பாகும்.
அதன்பின், 2002 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்ந்த தொடர் பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களிடையே ஒருவித சலிப்பைத் தோற்றுவித்துவிட்டது வேதனைக்குரியது. அந்தந்த வட்டாரங்களில் தோற்றுவிக்கப்பட்ட வட்டார வள மையங்கள் பயிற்சிகளை ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து அளித்து வரத் தொடங்கின. நாளடைவில் இது அனைவருக்கும் திகட்டப் பெற்றதன் விளைவாக பயிற்சி என்றாலே காத தூரம் ஓடும் நிலைக்கு ஆசிரியர்களின் மனநிலை மாறத் தொடங்கிவிட்டது. இத்தகு சூழலில் கற்றல் கற்பித்தலில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகள் புகுத்தப்பட்டது என்பது காலமாற்றத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்ள அறிவுறுத்திய நல்லதொரு நடைமுறை எனலாம். எனினும், அப்பயிற்சிக்குத் தேவையான கருவிகள் பற்றாக்குறை மற்றும் தாமே செய்து கற்க போதிய கால அவகாசம் இன்மை காரணங்களாலும் வழக்கமான விரிவுரை முறைகளாலும் போதிய தாக்கங்களை ஏற்படுத்த இயலாத அவலநிலை இப்போதும் இருப்பது கண்கூடு. கணினி மற்றும் இணைய வழியிலான பயிற்சிகள் வழக்கமான வகுப்பறையில் நடத்தும் நோக்கும் போக்கும் மாற்றம் பெற வேண்டும் என்பது தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. ஆளுக்கொரு மடிக்கணினி திட்டம் தற்போது தான் மேனிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களை எட்டியுள்ளது. இது தொடக்கப்பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்குக் கிட்டும் நாள் எந்நாளோ?
இதுபோன்ற சூழ்நிலையில் தான் தன்னார்வ பயிற்சிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தன்னெழுச்சியும் ஆர்வமும் ஒருங்கே நிறைந்த தகவல் தொழில்நுட்ப அறிவைத் தேடி வளர்த்துக் கொண்ட ஆசிரியர்கள் சிலர் சக ஆசிரியர் சமூகத்திற்கு தாம் பெற்ற தொழில்நுட்பம் சார்ந்த அறிவைத் தன்னார்வ பயிற்சிகள் மூலமாக உடல் உழைப்பு மற்றும் பொருள் செலவு ஆகியவை குறித்து கவலைப்படாமல் முழுமையாகத் தர முன்வருவது அறியத் தக்கது. குறிப்பாக ஆசிரியர்கள் மத்தியில் இதுபோன்ற தன்னார்வப் பயிற்சிகள் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தொலைதூரம் பற்றி சிறிதளவும் கவலை கொள்ளாமல் இருபால் ஆசிரியர்களும் ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் திரளாகக் கலந்து கொள்ள முனைவது என்பது பாராட்டத்தக்கது. இப்பயிற்சிகள் அனைத்தும் கணினி வசதிகள் நிரம்பிய கல்லூரிகளிலும் சொந்தமாகக் கொண்டு வரப்படும் மடிக்கணினிகள் நிறைந்த வகுப்பறைகளிலும் அரசு விடுமுறை நாளில் நடைபெற்று வருகின்றன. தேநீர் மற்றும் உணவு ஆகியவை பல நேரங்களில் பயிற்சியாளர்களால் ஈடுசெய்யப்பட்டோ, புரவலர்கள் யாரேனும் மனமுவந்து அளிக்கும் உதவியுடனோ வழங்கப்படுவது நடைமுறையாக உள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் அடோப் ஆகியவை வழங்கும் கல்வி சார்ந்த ஆசிரியர்கள் தொழில்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் வகுப்பறைகளில் பயன்படும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த எளிதில் கையாளுதல் பயிற்சிகள் ஆகியவை இத்தகைய தன்னார்வ பயிற்சிப் பட்டறைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இப்பயிற்சியின் மூலம் மேற்கண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள முதன்மையான பெருநகரங்கள் மற்றும் அயல்நாடுகளில் நடத்தப்படும் கல்வித் திருவிழாக்களில் திரளாகப் பங்கேற்கவும் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் ஐந்து அல்லது ஏழு நட்சத்திர சொகுசு விடுதிகளில் தங்க வைத்து விமானப் பயணச் செலவினைத் தாமே ஏற்பதும் என்பது ஆசிரியர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
இதுபோன்ற தன்னார்வப் பயிற்சிகள் வழங்கி வரும் ஆசிரியப் பெருமக்களை அரசு ஊக்குவித்து உதவிட முன்வரவேண்டும். மேலும், மாநிலம் முழுவதிலுமுள்ள வட்டார வள மையங்களைக் கணினிச் செயல்வழிக் கற்றல் மையங்களாக்குதலும் இணையவழியிலான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதலும் இன்றியமையாததாகிறது. ஆளுக்கொரு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் விரைந்து விரிவுப்படுத்தி நடைமுறைப்படுத்துவது என்பது உடனடி நற்பலனை விளைவிக்கும் என்பது உறுதி. - முனைவர் மணி கணேசன்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews