உதவிப் பேராசிரியர் தேர்வு: சிறப்பு ஏற்பாடு செய்ய TRB திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 12, 2019

உதவிப் பேராசிரியர் தேர்வு: சிறப்பு ஏற்பாடு செய்ய TRB திட்டம்

??Join Our??WhatsApp??Group??Click Here ??Join Our??Telegram??Group??Click Here??Join Our??Facebook??Page??Click Here??Join Our??Twitter??Page??Click HereAdd 9361194452 To Ur Groups
சிறப்பு ஏற்பாடு செய்ய டி.ஆர்.பி. திட்டம் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில், கல்லூரி கல்வி இயக்குநரகம் நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு பணி அனுபவச் சான்று மேலொப்பமிட்டுத் தராமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, தகுதியுள்ள பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியிருப்பதாக, விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, விண்ணப்பதாரர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, பணி அனுபவச் சான்று தொடர்பாக சிறப்பு ஏற்பாடு செய்ய டி.ஆர்.பி. அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) அண்மையில் வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 15 கடைசி நாளாகும். இந்த நேரடி நியமனம், பணி அனுபவம், கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் பணி அனுபவத்துக்கு ஓராண்டுக்கு 2 மதிப்பெண்கள் என அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். உரிய கல்வித் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், முழு கல்வித் தகுதியைப் பெற்ற பிறகான கலை-அறிவியல் கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்த அனுபவம் மட்டும் கணக்கில் கொள்ளப்படும். உரிய கல்வித் தகுதி பெறுவதற்கு முன்பான, பணி அனுபவம் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. மேலும், இந்தப் பணி அனுபவத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, விண்ணப்பதாரர்கள் பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்திருந்தால் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலும், கலை-அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்திருந்தால் அந்தந்த மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்திலும் மேலொப்பம் (சான்று) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதவிப் பேராசிரயிர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு சென்னை, கோவை, மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரகங்கள் சார்பில் பணி அனுபவச் சான்றில் மேலொப்பமிட்டுத் தரப்படவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து சென்னை தனியார் கல்லூரி பேராசிரியர் ரவீந்திரன் கூறியது: எங்களுடைய கல்லூரியில் பணிபுரியும் 14 பேராசிரியர்கள், டி.ஆர்.பி. தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளோம் அதற்காக பணி அனுபவச் சான்றில் மேலொப்பம் பெறுவதற்காக 14 பேரும் ஒன்றாக சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 17- ஆம் தேதி விண்ணப்பித்தோம். இதுவரை எங்களுக்குப் பணி அனுபவச் சான்றில் மேலொப்பமிட்டு தரப்படவில்லை. எங்கள் கல்லூரியைப் போன்றே மாதவரம், பெரம்பூர் மற்றும் கொரட்டூரில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர்களும் 15 பேர் முதல் 20 பேர் வரை ஒன்றாக இணைந்து விண்ணப்பித்தனர். அவர்களுக்கும் இதுவரை மேலொப்பமிட்டுத் தரப்படவில்லை. டி.ஆர்.பி.க்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில், பணி அனுபவச் சான்று கிடைக்காததால் விண்ணப்பிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எங்களுடைய நிலையை உணர்ந்து, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டி.ஆர்.பி. மேலும் நீட்டிக்க வேண்டும் என்றார். இதுகுறித்து கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் கூறுகையில், அலுவலகத்தில் ஆள்பற்றாக்குறை இருக்கிறபோதும், இருக்கும் ஊழியர்களை வைத்து இரவு வரை பணியாற்றி வருகிறோம். விரைந்து மேலொப்பமிட்டுத்தர முயற்சித்து வருகிறோம் என்றார்.
டி.ஆர்.பி. சிறப்பு ஏற்பாடு: இதுகுறித்து டி.ஆர்.பி. அதிகாரி ஒருவர் கூறியது: பணி அனுபவச் சான்று மேலொப்பமிட்டுத் தருவதில் தாமதம் ஏற்படுவதாக டி.ஆர்.பி.க்கும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதற்காக, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த உதவிப் பேராசிரியர் காலியிட தேர்வுக்குத்தான் முதன்முறையாக 45 நாள்கள் விண்ணப்ப கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், விண்ணப்பதாரர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, பணி அனுபவச் சான்று தொடர்பாக சிறப்பு ஏற்பாடு ஒன்றை மேற்கொள்ள டி.ஆர்.பி. திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு வரும் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்றார் அவர்.
??Join Our??Facebook??Page??Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews