👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை: கல்விக் கடன் வசூலிப்பிற்காக ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004 இல் ஆட்சி அமைத்தவுடன் மருத்துவம், பொறியியல்படிப்பு படிக்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்குகிற திட்டத்தை அன்றைய மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகள் மிகச் சிறப்பாக செயல்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டில் கல்விக் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 24 லட்சம் பேர். கல்விக்கடன் வழங்கப்பட்ட தொகை ரூபாய் 56 ஆயிரம் கோடி. இதில் ஐந்தில் ஒருபங்கு பயனாளிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆனால், 2014 ஆம் ஆண்டில் மத்திய பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன், காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அந்த வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக்கடன் பெறுவதற்காக மாணவர்கள் கடும் அலைச்சலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது. கல்விக்கடன் வழங்குவதை அதிகப்படுத்துவதற்கு மாறாக கல்விக்கடன் பெற்றவர்கள் கடுமையான துன்பத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்கள் கல்விக்கடனாக ரூபாய் 17 ஆயிரம் கோடி பெற்றிருக்கின்றனர். இதில் ரூபாய் 1875 கோடியை பாரத ஸ்டேட் வங்கி வாராக் கடன் என்று குறிப்பிட்டு ரூபாய் 847 கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டது. இதில் ரூபாய் 381 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் வசூலித்து பாரத ஸ்டேட் வங்கிக்கு திரும்ப வழங்க வேண்டும். மீதி தொகையை வசூல் கட்டணமாக ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்துக் கொள்கிற வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி வசூலாகிற பணத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு 55 சதவீதம், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீதம் என்று பிரித்துக் கொள்ளப்படும். இத்தகைய கொடூரமான ஒரு ஒப்பந்தத்தை பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் செய்து கொள்வதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேசிய வங்கிகளில் கல்விகடன் பெற்ற மாணவர்கள் கடுமையான மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக்கடன் பெற்றவர்கள் தங்கள் படிப்பை முடித்துவிட்டு வேலை வாய்ப்பை பெற்று சம்பாதிக்கிற வரையிலான காலத்திற்கான வட்டியை மத்திய அரசே செலுத்தும் என்று அன்றைய காங்கிரஸ் கூட்டணி அரசு சலுகை வழங்கியது. ஆனால், தற்போதுள்ள பா.ஜ.க. ஆட்சியில் அந்த சலுகை பறிக்கப்பட்டு, படிப்பு முடிந்தவுடன் வேலை வாய்ப்பு பெற்றார்களா, இல்லையா என்பது பற்றி சிறிதும் கவலைப்படாமல் கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டியது. இந்த கடனை வசூலிக்கிற பொறுப்பை ரிலையன்ஸ் என்கிற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து அவர்கள் மூலம் வசூலிப்பதை விட ஒரு மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை வசூலிப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கான அடியாட்களை நியமித்துள்ளது. இப்படி நியமிக்கபட்டவர்கள் மாணவர்களிடமிருந்து கடனை வசூலிப்பதற்காக பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஏவிவிடுகின்றனர். இத்தகைய அணுகுமுறையின் மூலம் மாணவர்கள் படுகிற துன்பத்திற்கு அளவே கிடையாது. இத்தகைய கொடிய அடக்குமுறையை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
ஏற்கனவே, 2016 இல் மதுரையை சேர்ந்த லெனின் என்கிற பொறியியல் மாணவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடக்குமுறையை தாங்க முடியாமல் தற்கொலை செய்த கொண்ட சோக நிகழ்வை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இதை தவிர்க்கும் வகையில் ஆக்கப்பூர்வமாக பயன் தருகிற வகையில் கணிசமான மாணவர்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனமே வேலை வாய்ப்பை வழங்கலாம். மேலும், கடனை வசூலிப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிற 45 சதவீத கட்டணத்தை மாணவர்களின் கல்விக் கடனில் தள்ளுபடி செய்து விட்டு, மீதம் உள்ள 55 சதவீத கடன் தொகையை மட்டுமே மாணவர்களிடமிருந்து கடனை வசூலித்துக் கொள்ளலாம். இத்தகைய அணுகுமுறையை கடைப்பிடிப்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எனவே, சமூக நோக்கத்தின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விக் கடன் திட்டத்தை சீர்குலைக்கிற வகையில் தனியார் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு பாரத ஸ்டேட் வங்கி செய்து கொண்ட ஒப்பந்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தனியார் நிறுவனத்தின் மூலமாக கடன் பெற்ற மாணவர்கள் மீது ஏவிவிடப்படுகிற அடக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். இனியும் இத்தகைய அடக்குமுறைகள் கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் மீது தொடர்ந்தால் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U