👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உதவிக்கரம் நீட்டிய ஊர்மக்கள்...
அரசுப் பள்ளிகள் தரம் உயர திட்டமிட வேண்டியது அரசாக இருந்தாலும், அதை செயல்படுத்த வேண்டியது ஆசிரியர்கள்தான். பள்ளியின் தரத்துக்கும் மாணவர்களின் கல்வித் தரத்துக்கும் அரசே திட்டமிடாவிட்டாலும் தன்னார்வத்தோடு பல திட்டங்களை செயல்படுத்தும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் கரூர் மாவட்டத்தில் மாயனூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் குணசேகரன்.
குணசேகரன் ஆசிரியராக 2002ல் வரகூரில் பணியைத் தொடங்கி 2004-ல் மாயனூர் பள்ளிக்கு மாறுதலில் வந்தபிறகு அரசு தொடக்கப் பள்ளி என்பதால் 2006-லேயே அதே பள்ளிக்கு தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றுவிட்டார். இன்றுவரை அதே பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர் இப்பள்ளிக்கு வந்தபோது 190 மாணவர்களும் ஒரே ஒரு ஆசிரியருமே இருந்துள்ளனர்.
இந்த நிலையில் 2006-ல் இவருக்கு தலைமையாசிரியர் பொறுப்பு கிடைத்ததும் ஓர் உத்வேகம் அடைந்து, பள்ளியை பல்வேறு வகையிலும் சிறப்பாக நடத்த முயற்சி எடுத்து சாத்தியப்படுத்தியிருக்கிறார். அவர் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து நம்மிடம் பேசியபோது…‘‘கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மாயனூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக இருக்கும் நான் 2002-ல் வரகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியைத் தொடங்கினேன்.
2004 ஆம் ஆண்டில் அரசு தொடக்கப்பள்ளி மாயனூர் பள்ளிக்கு மாறுதலில் வந்தேன். 2010ஆம் ஆண்டுக்கு முன் ஊராட்சி பள்ளி, நகராட்சி பள்ளி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி என தனித்தனி விதிகளோடு செயல்பட்டன. அதன்படி சில தனி விதிகளோடு செயல்பட்ட அரசுப் பள்ளியாக இது இருந்ததால் இப்பள்ளிக்கு எவரும் பணி மாறுதலில் வர விரும்பவில்லை. புதியதாகவும் நியமிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் 190 மாணவர்களுடன் ஒரே ஒரு ஆசிரியராக பணியாற்றிவந்தேன்.
ஒரே கட்டடத்தில் இடவசதி குறைவு, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற இக்கட்டான சூழலில் 2006 ஆம் ஆண்டில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றேன். இருந்தபோதும் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல் மாற்றுப்பணியில் அருகில் உள்ள பள்ளியிலிருந்து சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். பெற்றோர் ஆசிரியர்கழகம் வழியே இரு ஆசிரியர்களைப் பணியமர்த்தி சமாளித்து வந்தேன். இந்த நிலையில் தலைமை ஆசிரியராகப் பெற்ற பொறுப்பு எனக்கு உத்வேகம் வழங்கியது.
பள்ளியை சிறப்பாக நடத்த பல முயற்சிகளை மேற்கொண்டேன்’’ என்றவர் படிப்படியாக பள்ளி வளர்ச்சிக்கு பணியாற்றிய விதத்தையும் விவரித்தார்.
‘‘ஒரே கட்டடத்தில் இயங்கிவந்த பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் மூன்று கட்டடங்கள், சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய நிதி மூலம் முழுமையாக கட்டப்பட்டது. பள்ளியைச் சிறப்பாக நடத்த பல முயற்சிகளை மேற்கொண்டாலும் நிரந்தர ஆசிரியர் நியமனம் இல்லாதது பெரும் சிக்கலை உருவாக்கியது.
ஊர்மக்களின் உதவியுடன் பள்ளியை மூடி அரசின் கவனம் பெறச் செய்து புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்ய வழிவகுத்தோம். இந்தப் பயணத்தில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என எல்லாரும் இப்பள்ளியை வளமாக்க உதவிபுரிந்தனர். அதன் மூலம் வகுப்பறையை மாணவர்களுக்கு பிடித்தமான வகையில் மாற்றி கற்பித்தல் சூழலை ஏற்படுத்தினோம். மக்களோடு மக்களாக வாழ்ந்து ஊர்மக்களின் கவனமும் ஒத்துழைப்பும் பெற வேண்டும் என்பதற்காக எனது குடியிருப்பையும் நகரத்திலிருந்து மாற்றி இக்கிராமத்திற்கு வந்தேன்.
இடையில் பெற்றோரின் தனியார் பள்ளி ஈர்ப்பினாலும் ஆசிரியர் ஒத்துழைப்பு இல்லாமையாலும் வருடம் பத்து மாணவர்கள் என்ற கணக்கில் குறைந்து மாணவர்களின் எண்ணிக்கை 55 ஆக குறைந்தது. இச்சூழலில் பெற்றோரின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை புரிந்துகொள்ள சுயபரிசோதனை செய்தோம். ஆசிரியர் பாடச்சூழலை தாண்டி சமுதாயத்தில் எவ்வாறு பயணிக்கவேண்டும் என்பதை புரிய ஐந்தாண்டு காலம் ஆயிற்று. பிரச்னைகள் எல்லாருக்கும் பொதுவானது. ஆனால், அதை தீர்க்கும் வழிமுறைகள்தான் நம்மை தனியே அடையாளம் காட்டுகிறது என்பதை உணர்ந்தேன்.
பிரச்னைகளை தீர்க்க நாம் முயற்சி எடுத்தாலும் உடன் பணிபுரியும் ஆசிரியர்களின் புரிதலில் முரண்பாடுகள் இருக்க அவர்களை ஒன்றிணைக்கவும் அவரவர் தனித் திறன்களைப் பள்ளியின் வளர்ச்சிக்கு மாற்றவும் பல்வேறு உத்திகளை மேற்கொண்டேன்.’’ என்றார். மேலும் தொடர்ந்த குணசேகரன், ‘‘அரசு கூறும் கற்பித்தல் முறைகளையும் தாண்டி குழந்தைகளுக்காக வாசிப்பு, நாடகம், Science Lab for primary, யோகா, நடனம் போன்ற பல்வேறு அணுகுமுறைகளை உள்கொண்டுவந்தோம்.
கடந்த வருடம் மழலையர் வகுப்புகளையும் SMC உதவியுடன் ஆரம்பித்து 55ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கையை 120 ஆக மாற்றினோம். பெற்றோர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்பதை ஏற்படுத்தினோம். மேலும் எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் 24 மணிநேரமும் இப்பள்ளியிலேயே தங்கி மாணவர் குடும்பம் சார்ந்த பிரச்னைகளையும் அறிந்து கூற அதற்கேற்ப அவற்றை தீர்க்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறோம்.
ஊர்மக்களிடம் சமுதாயம் சார்ந்த செயல்பாடுகளுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டதால் கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திரதின விழாவில் 15 பெண்கள் மற்றும் பெற்றோர்கள் ரத்ததானம் வழங்கினார்கள். பள்ளி மேலாண்மைக் குழுவின் சிறப்பான வழிகாட்டுதலால் கல்விக்கு சீர் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இப்பள்ளியை மக்கள் பள்ளியாக மாற்றியுள்ளதோடு பெற்றோர் தங்கள் வாழ்வின் மேம்பாட்டுக்கு வழிகாட்டும் சமுதாய மன்றமாக இப்பள்ளியை மாற்றியுள்ளோம்’’ என்றார் தலைமை ஆசிரியர் குணசேகரன்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U