👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லுாரிகளில் விண்ணப்பித்த 13 ஆயிரம் மாணவர்களில், 4 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. எனவே, மாணவர்கள் நலனை கருதி, மாவட்டத்தில், கூடுதல் கல்லுாரிகளை துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார் மாவட்டத்தில், கடலுார், வடலுார், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட நான்கு கல்வி மாவட்டங்களில், 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 15 மாணவர்களில் 26 ஆயிரத்து 548 பேர் தேர்ச்சி பெற்றனர். இளங்கலை பட்டப் படிப்பிற்கு மாவட்டம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட தனியார் கல்லுாரிகள் உள்ள நிலையில், அரசு கல்லுாரிகளில் சேர மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்திருந்தனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள 5 அரசு கல்லுாரிகளில் 14 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதன்படி, கடலுார் பெரியார் அரசு கல்லுாரியில் தற்போது 4,600 பேர் படிக்கின்றனர். நடப்பு கல்வி ஆண்டில் 4,500 விண்ணப்பங்கள் வரப்பெற்று, 1,200 பேர் சேர்க்கப்பட்டனர். மற்றவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் 4,350 பேர் படிக்கின்றனர். நடப்பு ஆண்டு 4,250 விண்ணப்பங்கள் வரப்பெற்று, 1,200 பேர் சேர்க்கப்பட்டனர். சி.முட்லுார் தேவி கருமாரியம்மன் அரசு கல்லுாரியில் 3,500 பேர் படிக்கின்றனர்.
2,900 விண்ணப்பங்கள் வரப்பெற்று 1,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். காட்டுமன்னார்கோவில் எம்.ஜி.ஆர்., அரசு கல்லுாரியில் 850 பேர் படிக்கின்றனர். நடப்பாண்டு 800 விண்ணப்பங்கள் வரப்பெற்று, 300 பேர் சேர்க்கப்பட்டனர். திட்டக்குடி அரசு கல்லுாரியில் 1,286 பேர் படிக்கின்றனர். 600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்று 517 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் உள்ள 5 அரசு கல்லுாரிகளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், வெறும் 4 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. மீதம் உள்ள 9 ஆயிரம் பேருக்கு இடம் கிடைக்கவில்லை.
அரசு கல்லுாரிகளில் கடந்தாண்டு மாணவர்கள் சேர்க்கையின்படி, ஆண்டுக்கு 20 சதவீதம் பேர் மட்டுமே கூடுதலாக சேர்க்கப்படுவர். அதன்படி, அனைத்து இடங்களும் பூர்த்தியாகி விட்டது.மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், ஆண்டு தோறும் 26 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று வெளியே வருகின்றனர். அவர்கள் இளங்கலை உள்ளிட்ட மேல் படிப்பில் சேர்வதற்கு மாவட்டத்தில் உள்ள 5 அரசு கல்லுாரிகள் போதுமானதாக இல்லை. எனவே, மாவட்டத்தில் கூடுதல் கல்லுாரிகளை துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில், ஏழை மாணவர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் தனியார் கல்லுாரிகளை விட அரசு கல்லுாரியில் சேர விண்ணப்பிக்கின்றனர். கல்லுாரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கவும் போதிய வகுப்பறை வசதி இல்லை. பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, பண்ருட்டி அல்லது குறிஞ்சிப்பாடி, வேப்பூர் பகுதிகளில் கூடுதல் அரசு கல்லுாரிகளை துவக்கினால் மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U