Breaking

Friday, April 24, 2026

மாணவர்களுக்கு வழங்க 4.11 கோடி பாடநூல்கள்: பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்



மாணவர்களுக்கு வழங்க 4.11 கோடி பாடநூல்கள்: பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்

2026-27-ம் கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, 4.11 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பும்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ், 44 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 70 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இவர்களுக்கான பாடநூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, வரும் 2026-27-ம் கல்வியாண்டில் மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் அச்சிட்டு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 88 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 2.71 கோடி புத்தகங்கள், விற்பனைக்காக 1.4 கோடி புத்தகங்கள் என மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படவேண்டும். இதில் 1, 2, 3-ம் வகுப்பு தவிர, இதர வகுப்புகளுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு,அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

1, 2, 3-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அவற்றின் பாடநூல்கள் தயாரிப்பு முடியும் தருவாயில் உள்ளது. எனினும், அந்தப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.

இதுதவிர, தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள் விற்பனை ஏப்.10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog