சூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 26, 2019

சூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு முன் நான் அரிதாக எழுந்து பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் சென்ற ஒரு அதிகாலையில் நிகழ்ந்தது. நள்ளிரவில் மீன்பிடிக்குச் சென்றுவிட்டு படகில் திரும்பிவந்த கடலோடிகளின் குழுவில் அவன் இருந்தான். முந்தைய இரவின் நட்சத்திர ஒளியை உடலிலிருந்து உதிர்த்திராத நல்ல பொடி மீன்கள் அவர்களுடைய வலையில் இருந்தன. மீன் வாங்குவதற்காக நான் அங்கு செல்லவில்லை; அந்த நேரத்தில் அப்படி ஒரு படகே ஆச்சரியம் என்றாலும், சிறுவனின் துறுதுறுப்பும் வலையிலிருந்து மீன்களை அவன் கொய்த லாகவமும் படகை நோக்கி என்னை இழுத்தன. துடுப்புபோல இருந்தவனுடன் பேசலானேன்.
அவனுக்குத் தந்தை இல்லை. தாய் மனநலம் குன்றியவள். ஒரு தங்கை இருக்கிறாள் படிக்கிறாள், வீட்டு வேலைக்கும் செல்கிறாள். குப்பத்திலிருந்து நள்ளிரவில் சில மைல்கள் தொலைவை சைக்கிளில் கடந்து கடற்கரைக்கு வந்தால், சிறுவன் இந்த மூவர் குழுவில் சேர்ந்துகொள்ளலாம். உடன்கடல் மீன்பிடிக்கு இரவு இரண்டு மணி வாக்கில் கடலுக்குள் சென்று, ஆறு மணி வாக்கில் திரும்பிவிடுவது அவர்களுடைய வழக்கம். வீட்டுக்குச் செல்ல எட்டு மணி ஆகும். நூறு ரூபாய் கிடைக்கும். அப்புறம் பள்ளிக்கூடம் போக வேண்டும். மருத்துவர் ஆகி சேவை புரிய வேண்டும் என்றான். வியர்வையில் நனைந்துவிட்டிருந்தவனைக் கை குலுக்கி அனுப்பிவைத்தேன். எப்போது தூங்குவான்? ஓராண்டுக்கு முன் அவனை மீண்டும் பார்த்தேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘அகரம் கல்வி அறக்கட்டளை’ சார்பில் நடத்தப்பட்ட ‘அறம் செய்ய விரும்புவோம்’ நூல் வெளியீட்டு விழாவுக்கு அந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்காகச் சென்றிருந்தபோது, கூட்டத்தில் ஒருவனாக அவன் முகத்தைப் பார்த்தேன். எனக்கு அப்போது அவன் அந்தப் புத்தகத்துக்குள் இருப்பவர்களில் ஒருவனாகத் தெரிந்தான். என்னை நிலைகுலையச் செய்த புத்தகங்களில் ஒன்று அது. சமூகத்தின் கீழ்த்தட்டிலிருந்து கல்வி உதவி பெற்று மேல் நோக்கி வருபவர்கள் எந்த மாதிரியான பின்னணியில் இருந்தெல்லாம் வருகிறார்கள், அவர்களுடைய வீடுகள் எப்படி இருக்கின்றன, அவர்களுடைய குடும்பச் சூழல் என்ன, அவர்களுடைய வாழ்க்கை பிற்பாடு எப்படி மாறுகிறது, அவர்கள் என்னென்ன தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைப் புகைப்படங்களோடு சொல்லும் அந்தப் புத்தகம், மனசாட்சியுள்ள எவருடைய நெஞ்சத்தையும் குமுறச் செய்யும்.
நம்முடைய அகராதியிலிருந்து அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பிள்ளைகளின் குடியிருப்புகள் எதையும் நாம் வீடுகள் என்று குறிப்பிடவே முடியாது. வெறும் நூறு சதுரடி அல்லது இருநூறு சதுர அடிக்கு உட்பட்ட குடிசைகள்; கீழே மண் தரை, மேலே கீற்றுக்கூரை, சுவர்களாகச் சாக்குத் துணி; நான்கு பேர், ஐந்து பேர் கொண்ட குடும்பம் அதற்குள் வசிக்கிறது. அவர்களுடைய உடைமைகள், சமையல், படுக்கை, வாழ்க்கை சகலமும் அதற்குள்தான். பொருளாதார அழுத்தம் மட்டுமல்ல அது; நெஞ்சத்தில் ஒரு பெருமூட்டைபோல ஒட்டுமொத்த சமூக அழுத்தத்தையும் தூக்கிச் சுமந்துகொண்டுதான் பள்ளிக்கூடங்களை நோக்கி மூச்சிரைக்க அவர்கள் ஓடி வருகிறார்கள். அவர்களைத்தான் நாம் சொல்கிறோம், “இது ஒரே நாடு பன்னிரண்டு ஆண்டுகள் படித்து நீ எடுத்த உன் பள்ளிக்கூட மதிப்பெண்கள் போதாது; நான் வைக்கும் இன்னொரு தேர்வில் நீ டெல்லியிலும் சென்னையிலும் வருஷத்துக்கு பத்து லட்சம் வரை கட்டி சிறப்புப் பயிற்சி எடுக்கும் மாணவர்களுடன் மோதி ஜெயிக்க வேண்டும்; நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்குப் போ! இன்னும் ஓடு!”
இந்த 10 வருஷத்தில் ‘அகரம் அறக்கட்டளை’ மூலம் சுமார் 3,000 மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்; அவர்களில் 1,169 பேர் பொறியாளர்கள்; 54 பேர் மருத்துவர்கள். இவர்களில் 90% பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகள். சூர்யாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “நம் கண்ணுக்குப் புலப்படும் தூரத்தில் இருப்பது மட்டும் உலகம் அல்ல என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்தது இந்தக் கல்விப் பணி” என்றார். “பெற்றோர் இறந்துவிட்டார்கள். விண்ணப்பம் வாங்கக்கூட அந்த மாணவியிடம் பணம் இல்லை. நாம் செய்தது சின்ன உதவி. ஆனால், அது இன்று இந்திய ராணுவத்தில் அவரை மருத்துவராக ஆக்கியிருக்கிறது. கல் உடைக்கிற தொழிலாளியின் மகனும், ஆடு மேய்ப்பரின் மகனும் மருத்துவர்கள் ஆகியிருக்கின்றனர். கல்வி ஒரு சமூக அறமாக இருக்க வேண்டும். ‘பணம் இருந்தால் விளையாடு’ என்கிற சூதாட்டமாக அது மாறக் கூடாது இல்லையா?”
சூர்யா நிறுவியது என்றாலும், ‘அகரம் அறக்கட்டளை’ என்பது சூர்யா மட்டும் அல்ல; இப்படி ஒரு அமைப்புக்கு கருத்துருவம் கொடுத்த எழுத்தாளர் ஞானவேல், செயலுருவம் கொடுத்த கல்வியாளர் கல்யாணி, அமைப்பைச் சுமந்து பொறுப்பேற்று நடத்தும் ஜெயஸ்ரீ, தங்களுடைய பணிகளுக்கு அப்பாற்பட்டு எளியோரின் கல்விக்காகச் சேவையாற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், ஏழை மாணாக்கரின் எதிர்காலத்துக்காக நிதியளிக்கும் கொடையாளர்களின் கூட்டுச் சேர்க்கை அது. “உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களை நேரில் பார்க்கச் செல்லும்போது, நல்ல உடைகூட இல்லாத நிலையில் வெளியே வர சங்கடப்பட்டு கூனிக்குறுகி நிற்கும் பிள்ளைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களை அடுத்தகட்டத் தேர்வுக்காக அருகில் உள்ள நகரத்துக்கு அழைத்தால் பலரிடம் பஸ் செலவுக்குக்கூடப் பணம் இருக்காது. பெண் பிள்ளைகளின் எல்லா படிப்புச் செலவையும் நாம் ஏற்றுக்கொண்டாலும்கூட, சமூகச்சூழல் சார்ந்து பெற்றோர்கள் யோசிப்பார்கள். உயர்கல்வி படித்துவிட்டால் அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுவது, திருமணச் செலவு என்று எல்லாமே மாறிவிடும் என்று அஞ்சுவார்கள். ஏழ்மை என்றால் அப்படி ஒரு ஏழ்மை இங்கே இருக்கிறது; நாம் கிராமங்களிலிருந்து நிறைய தூரமாகிவிட்டோம்” என்றார் ஞானவேல்.
நான் ‘அகரம்’ அமைப்பின் மீது கொண்டிருக்கும் பெருமதிப்பு அது தன்னிடம் உதவி கோரும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க உருவாக்கிக்கொண்டிருக்கும் தேர்வு முறையில் இருக்கிறது. வெறும் மதிப்பெண்களை மட்டும் கொண்டு மாணாக்கர்களை அது வரிசைப்படுத்துவதில்லை. உயர்கல்விக்கு உதவி கேட்டு விண்ணப்பிப்பவர்களைத் தேர்ந்தெடுக்க ‘அகரம்’ கையாளும் முறைமை இது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 150 புள்ளிகள், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 50 புள்ளிகள். அரசுப் பள்ளி மாணவர் என்றால் 15 புள்ளிகள். மாற்றுத்திறனாளி என்றால் 20 புள்ளிகள். தலித்துகள் அல்லது பழங்குடியினர் அல்லது இலங்கை அகதிகள் என்றால் 25 புள்ளிகள். மலைக் கிராமத்தில் வசிக்கும் மாணவர் என்றால் 25 புள்ளிகள். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத குக்கிராமத்தினர் என்றால் 20 புள்ளிகள். மின் வசதி இல்லாத வீட்டில் வசிப்பவர் என்றால் 10 புள்ளிகள். தாயை இழந்த அல்லது அவருடைய அரவணைப்பை இழந்த மாணவர் என்றால் 20 புள்ளிகள். தந்தையை இழந்த அல்லது அவருடைய அரவணைப்பை இழந்த மாணவர் என்றால் 10 புள்ளிகள். குடிநோய்க்கு ஆளாகி குடும்பத்தைக் கவனிக்காதவராகத் தந்தை இருந்தால் 5 புள்ளிகள். குடும்பத்தில் முதல் தலைமுறையாகக் கல்லூரிக்கு வரும் மாணவர் என்றால் 10 புள்ளிகள். பெற்றோர் பத்தாம் வகுப்பு வரைகூடப் படித்திராதவர்கள் என்றால் 10 புள்ளிகள். தன்னார்வலர்கள் ஒவ்வொரு மாணவரின் வீட்டுக்கும் நேரில் செல்கிறார்கள். உண்மையை உறுதிசெய்கிறார்கள். அவர்களுடைய கள நிலவர அறிக்கைகளிலிருந்தே ‘அகரம்’ தன்னுடைய செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. எளியோர் கல்விக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்ட பேராசிரியர் கல்யாணி வகுத்தளித்த முறைமை இது. “ஏன் தந்தையில்லாக் குழந்தைக்கு 10 புள்ளிகள் என்றும் தாயில்லாக் குழந்தைக்கு 20 புள்ளிகள் என்றும் பிரித்திருக்கிறீர்கள்? பொதுவாக, தந்தையில்லாக் குழந்தைகள்தானே பொருளாதாரரீதியாக அதிகம் பாதிக்கப்படும் சாத்தியம் நம் சமூகத்தில் இருக்கிறது?” என்று பேராசிரியரிடம் கேட்டேன். “அந்தப் பொதுப்பார்வை தவறு என்பதையே எங்கள் களப்பணி அனுபவத்தில் உணர்ந்துகொண்டோம். தந்தையில்லாக் குழந்தைகள் எப்படியோ தாயால் படிக்கவைக்கப்பட்டுவிடுகிறார்கள். ஆனால், தாயில்லாக் குடும்பங்களோ சீரழிந்துவிடுகின்றன. அந்தக் குடும்பங்களில் விழும் முதல் அடி குழந்தைகளின் படிப்புக்குத்தான்” என்றார் கல்யாணி.
அடிப்படையில், நம்முடைய சமூகம் தாய்வழிச் சமூகமாக இருக்கிறதா, தந்தைவழிச் சமூகமாக இருக்கிறதா என்ற கேள்வியை நீங்கள் சொல்லும் கள உண்மைகள் எழுப்புகின்றன என்று சொன்னேன். “இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன” என்றார் கல்யாணி. “தமிழ்நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளில் குடிநோயானது குடும்பங்களைச் சீரழிக்கும் பெரும் சமூக அவலமாக மாறியிருப்பதை எங்களுடைய இந்தப் பயணத்தில் பல குடும்பங்களின் நிலையிலிருந்து உணர்ந்தோம். அதனால்தான் அப்படிப்பட்ட குடிநோயாளிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 5 புள்ளிகளைக் கூடுதலாகக் கொடுக்கிறோம். நன்றாகப் படிக்கும் ஒரு நல்ல மாணவர் பன்னிரண்டாம் வகுப்பின்போது உடல்நிலை அல்லது குடும்பச் சூழல் பாதிக்கப்பட்டு கொஞ்சம் மதிப்பெண் குறைகிறார் என்று வைத்துக்கொள்வோம்; அதன் பொருட்டில் அவர் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது. அதனால்தான் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் கொண்டுவருகிறோம். எப்படியும் ஒரு நல்ல மாணவர் படிக்கும் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது; அதற்கு நம்முடைய அமைப்பு முறை காரணமாகிவிடக் கூடாது!” நூற்றுக்குத் தொண்ணூறு சத மதிப்பெண்களை எடுப்பவர்களுக்கு மட்டும் ‘அகரம்’ உதவவில்லை; நாற்பது சத மதிப்பெண்களைப் பெறுபவர்களுக்கும் அவர்களுக்குரிய உயர்கல்வி வாய்ப்பைப் பெற உதவுகிறது. “நம்மூரில் ஒரு வழக்கம் உண்டு. கல்விக்கு உதவுகிறேன் என்ற பெயரில் முதல் வரிசை மதிப்பெண்கள் எடுத்தவர்களை அழைத்து பணத்தைக் கொடுப்பார்கள். ஆனால், ஒரு மலைக் கிராமத்தில் கல்வியறிவில்லாத தாய் - தகப்பன்களுக்குப் பிறந்து, ஏழ்மையை எதிர்கொள்ள காட்டு வேலைக்குப் போய்க்கொண்டே படித்து அறுபது சத மதிப்பெண் பெறும் ஒரு மாணவி, நகரத்தில் எல்லா வசதிகளோடும் படித்து தொண்ணூறு சத மதிப்பெண் பெறும் ஒரு மாணவருக்குச் சளைத்தவர் இல்லையே? முன் வரிசையில் வருபவர்களுக்கு உதவத்தான் அரசாங்கமே இருக்கிறதே; பின்னே நிற்பவர்களையும் அல்லவா முன்னுக்குத் தள்ளுவது உண்மையான உதவி?”
இந்திய அரசும் பொதுச் சமூகமும் பெற வேண்டிய முக்கியமான பார்வை மாற்றம் இது. இந்திய அரசு இன்று உருவாக்கியிருக்கும் வரையறைகளுக்கும் பேராசிரியர் கல்யாணி உருவாக்கியிருக்கும் வரையறைகளுக்கும் மிக முக்கியமான ஒரு வேறுபாடு இருக்கிறது. நம்முடைய அமைப்பின் தேர்வு முறை கூடுமானவரை மாணவர்களை வெளித்தள்ளுகிறது. கல்யாணியின் வரையறைகளோ கூடுமானவரை மாணவர்களை உள்ளிழுக்கிறது. ஊர் கண் விழிக்கும் வேளையில், சூரியனுக்கு முன் கடலிலிருந்து வெளிப்பட்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடி வரும் ஒரு சிறுவனிடம் உள்ள கல்வித் தேட்டத்தை உணரும் நிலையில் ஒரு அரசும் அமைப்பும் இல்லை என்றால், அவை உயிர்த்தன்மையை இழந்துவருகின்றன என்று பொருள். தம்மை விமர்சிப்போர் மீது பாய்வதை நிறுத்திவிட்டு நம்முடைய அமைப்புகள் முதலில் தன்னிலை உணரட்டும்; ஏனென்றால், ஜடங்களால் எதிர்காலத்தை உருவாக்க முடியாது! - சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews