முதல்வர் மாவட்டத்திலேயே மூடிக்கிடக்கும் அறிவியல் காட்சிக்கூடம்: கல்வி அதிகாரிகள் அலட்சியம் காரணமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

முதல்வர் மாவட்டத்திலேயே மூடிக்கிடக்கும் அறிவியல் காட்சிக்கூடம்: கல்வி அதிகாரிகள் அலட்சியம் காரணமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவிலேயே முதன்முறையாக வான் அறிவியல் தொழில்நுட்பக் காட்சிக்கூடம், முதலமைச்சர் மாவட்டமான சேலத்தில் திறக்கப்பட்டு, ஆறு மாதங்களாகப் பயன்பாட்டுக்கு வராததால், மாணவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். சேலம், எடப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, ரூபாய் 2.5 லட்சம் மதிப்பீட்டில் வான் அறிவியல் தொழில்நுட்ப மாதிரி ராக்கெட் மாதிரிகள், ஹெலிகாப்டர் மாதிரிகள், தொலைநோக்கி உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய வான் அறிவியல் தொழில்நுட்பக் காட்சிக்கூடம், ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம், பெங்களூருவின் இந்திய விண்வெளி மையம் சார்பில் வழங்கப்பட்டது. இதை விஞ்ஞான் பிரசார் தலைமை விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் மற்றும் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமையேற்று கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10-ம் தேதி திறந்துவைத்தனர். திறக்கப்பட்ட அடுத்த நாளே மூடுவிழா கண்டுள்ளது என்ற தகவல் கிடைத்ததையடுத்து கள ஆய்வு மேற்கொண்டோம். பள்ளியின் முன்னாள், இந்நாள் மாணவர்களிடம் விசாரித்தோம். அவர்கள், ``அந்த லேப் திறந்து வெச்சதோட சரி. அதுக்கப்புறம் ரெண்டுநாள் கழிச்சி உள்ள டேபிள் எடுக்க மட்டும் திறந்தாங்க. அதுக்குப்பிறகு திறக்கவே இல்ல" என்றனர். ``மாணவர்கள் பார்வையிடுவதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்களே" என அவர்களிடம் கேட்டதற்கு, ``இல்ல. அதெல்லாம் பொய். நாங்க இன்னமும் அதே பள்ளியிலதான் படிச்சிட்டிருக்கோம். திறந்த அன்னைக்கே, எல்லாத்தையும் மேலோட்டமா மட்டும்தான் பார்க்க விட்டாங்க. தலைமையாசிரியர் பூட்டுப்போட்டு சாவிய வெச்சிருக்காங்க. அவங்களும் திறக்க மாட்டேங்குறாங்க, வேறு யாரையும் திறக்கவிடுறதும் இல்ல” என்று பதிலளித்தனர். சேலம் (முதலமைச்சர் மாவட்டம்) அறிவியல் காட்சிக்கூடம் இதுகுறித்துப் பள்ளியின் தலைமையாசிரியர் முருகம்மாளிடம் பேசினோம், ``ஆய்வகம் பயன்பாட்டில்தான் உள்ளது. தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்கிறோம்” என முடித்துக்கொண்டார். ஆனால் பள்ளி நிர்வாகம் மட்டுமே பயன்படுத்திக்கொள்வதற்காக ஆய்வகம் அமைக்கப்படவில்லை. அந்தப் பகுதியில் கல்வித்தேடல் உள்ள அனைவருக்கும் பொதுவான பயன்பாட்டுக்காகவே இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், தலைமை ஆசிரியரின் பதில் விநோதமாக இருந்தது.
இது சம்பந்தமாக எடப்பாடி மாவட்டக் கல்வி அலுவலர் விஜயாவைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர், ``செயல்பாட்டில் இல்லைபோலத்தான் தெரிகிறது. இதுகுறித்து விசாரித்துவிட்டுத் தகவல் சொல்கிறேன்” என்றார். இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை. வான் அறிவியல் தொழில்நுட்பக் காட்சிக்கூட பொறுப்பு அலுவலர் மற்றும் ஆசிரியரான தினேஷிடம் பேசினோம். அவர், ``கடந்த ஆறுமாத காலமாகக் காட்சிக்கூடம் பயன்படுத்துவது குறித்துத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்தக் காட்சிக்கூடம் பலரது முயற்சியில் கிராமப்புற மக்களுக்கு மட்டுமன்றி, அனைத்துப் பகுதி மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்ற கனவில்தான் கொண்டுவரப்பட்டது. பயன்பாட்டில் இல்லாமல் இருந்தால், இது வேறு இடத்திற்கு மாற்றப்படும் நிலை ஏற்படும் என்று பலமுறை தலைமை ஆசிரியரிடம் முறையிட்டிருக்கிறேன். தலைமையாசிரியர் அனுமதியளித்து சக ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும்" என்றார்.
இந்தக் காட்சிக்கூடம் சம்பந்தமாக, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் (08.05.2019 ) கேள்வி எழுப்பப்பட்டது. அவரிடமிருந்து பல மேசைகளுக்குக் கேட்கப்பட்ட கேள்விகள் அத்தனையும் சென்றுவிட்ட நிலையில், தற்போது வரையில் பதில் கிடைக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கோரிக்கை பெற்ற 30 நாள்களுக்குள் விண்ணப்பதாரருக்குத் தகவல் அளிக்க வேண்டும். ``சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்” எனக் காட்சிக்கூடத் திறப்பு விழாவில் பேசிய ஆட்சியர் ரோகிணியைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர், "பெரும்பாலும் அப்படியிருக்க வாய்ப்பு இல்லை. என்னவென்று விசாரிக்கிறேன்" என்றார். இந்தியாவிலேயே முதல்முறையாக நிறுவப்பட்ட தொழில்நுட்பக் காட்சிக்கூடம் மற்றும் முதலமைச்சர் மாவட்டம் என்ற அந்தஸ்தை உடைய மாவட்டத்தில், கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் அத்துறை சறுக்கலில் இருக்கிறது. நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews