நடப்பாண்டில் 8,87,992 பேர் 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ள நிலையில் வேலை வாய்ப்புகளில் தடுமாறும் தமிழகம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 04, 2019

நடப்பாண்டில் 8,87,992 பேர் 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ள நிலையில் வேலை வாய்ப்புகளில் தடுமாறும் தமிழகம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 8,87,992 பேர் 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர். 44.8 சதவிகிதம் பேர் உயர்கல்வியில் சேருவார்கள். இவர்கள் படித்து முடித்துவிட்டு என்ன வேலை செய்யப்போகிறார்கள் என்பதே நம்முன் எழுந்து நிற்கும் மிகப்பெரிய கேள்வி? ஏனெனில், தமிழகத்தில் மத்திய, மாநில அரசு வேலைகளையும், தனியார் துறை மட்டுமல்லாமல் கூலி வேலைகளையும் வெளிமாநிலத்தவர்களே ஆக்கிரமித்துவருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. இந்நிலை தொடர்ந்தால் தமிழர்களின் வேலைவாய்ப்பு என்னவாகும் என கல்வியாளரும் சமூக செயற்பாட்டாளருமான சு.மூர்த்தி நம்மிடம் பகிர்ந்துகொண்ட கருத்துகளைப் பார்ப்போம்…
‘‘வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் இன்று தமிழர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 45 சதவீதத்தினர் உயர்கல்வி கற்கும் நிலைக்கு உயர்ந்துள்ளனர். ஆனால், கற்றவர்களுக்குத் தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகளே கேள்விக்குறியாகியுள்ளன. தமிழகத்தில் சுமார் ஒரு கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளார்கள். ஆனால், படித்த படிப்புக்கேற்ற வேலையும் இல்லை. ஊதியமும் இல்லை.

மற்றொரு புறம், தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே துறை, பி.எச்.இ.எல். (பெல்), ராணுவத் தொழிற்சாலைகள், வருமான வரி உற்பத்தி அலுவலகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பெட்ரோலியத் தொழிலகங்கள் போன்றவற்றில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகப் பணியமர்த்தப்படுகிறார்கள்.’’ என்று வேதனையோடு தெரிவிக்கிறார் சு.மூர்த்தி.

‘‘தமிழகத்தில் உள்ள ஓர் அமைப்பு ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம். ரயில்வே துறையில் 2012-2013-ல் 82% வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் 18% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 2013-2014-ல் 83% வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் 17% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
தமிழக வருமானவரித் துறையில் 2012-ல் சேர்க்கப்பட்ட 384 பேரில் 28 பேர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 356 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 2014-ல் சேர்க்கப்பட்ட 78 பேரில், 75 பேர் வெளிமாநிலத்தவர். 3 பேர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டிலுள்ள உற்பத்தி வரி அலுவலகங்களில், 2012-ல் சேர்க்கப்பட்ட 224 பேரில் 221 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதேபோல்தான் ஆவடி, திருச்சி, அரவங்காடு போன்ற இடங்களில் உள்ள பாதுகாப்புத்துறையின் தொழிற்சாலைகளில் 50 சதவிகிதத்துக்கு மேல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். திருச்சி, ராணிப்பேட்டை, திருமயம் ஆகிய இடங்களில் உள்ள பி.எச்.இ.எல். தொழிற்சாலைகளில் வெளிமாநிலத்தவரையே அதிகமாகச் சேர்க்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக்குகளில் இருந்த 1058 விரிவுரையாளர் பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால், 2017 ஜூன் 16ஆம் தேதி அன்றும், 2017 ஜூலை 28ஆம் தேதி அன்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 2017 செப்டம்பர் 16ஆம் நாள் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வுகளில் ஏறத்தாழ 100 பேருக்கும் மேற்பட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளே இதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. எடுத்துக்காட்டாக மூன்று ஆண்டுகளில் ரயில்வே பணிக்கு எடுக்கப்பட்ட 1799 பேரில் 1613 பேர் வடமாநிலத்தைச் சேர்ந்தவராகவும் 186 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். அவ்வாறே சேலம் ரயில்வே கோட்டத்தில் கலாசி போன்ற சாதாரண வேலைக்கு 80 சதவிகிதம் கேரளாவிலிருந்தும் 11 சதவிகிதம் ஏனைய மாநிலத்திலிருந்தும் 09 சதவிகிதம் தமிழ்நாட்டிலிருந்தும் எடுத்த நிகழ்வும் கலக்கத்தை உண்டாக்குகிறது.
சமீபத்தில் திருச்சி கோட்டத்தில் 1765 பேரில் 1600 பேர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகரித்துவருகின்றனர் என்பது உண்மை’’ என்று புள்ளிவிவரங்களோடு பட்டியலிட்டார் வேலைவாய்ப்பில் நிகழும் கொடுமைகளை ‘‘சமீபகாலமாக தமிழக அரசு வெளியிடும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் வெளிமாநில மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பிற மாநில சாதிச் சான்றிதழ் பெற்று இருப்பவர்களும் பொதுப்பிரிவினராகவே கருதி அனுமதி அளிக்கப்படுகிறது.

2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாநில அரசின் தேர்வுகளை வெளிமாநிலத்தவர்களும் வெளிநாட்டினரும் எழுதலாம் என்ற வகையில், விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்திருக்கிறது. தமிழக அரசுப் பணியில் 9351 காலிப் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்புகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் எழுத வாய்ப்பளிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களைவிடவும் அதிக எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்கள்தான் வேலைவாய்ப்பை பெற்றுவரும் நிலையில், தற்போது தமிழக அரசுப் பணி வாய்ப்புகளும் தமிழக இளைஞர்களுக்கு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு நடத்தும் தேர்வுகள் பல இந்தி மற்றும் ஆங்கிலமொழியில் மட்டும் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் தமிழக இளைஞர்கள் பாதிப்புக்கு ஆளாகும் நிலையும்உள்ளது. தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடுவது போன்ற முறை கேடுகளும் நடைபெறுகின்றன. இதன் காரணமாக உச்சநீதிமன்றமே சில தேர்வுகளை ரத்து செய்துள்ளது. பிற மாநிலங்களில் அவரவர் மாநிலத்தவர்களுக்கே வேலை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் வெளிமாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வேலை பெறுவதைத் தடுப்பதற்கு சரோஜினி மஹிஷி தலைமையில் ஆணையம் அமைத்து, அதன் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வராகப் பொறுப்பேற்றவுடனே மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் சொந்த மாநிலத்தவர்களுக்கே 70 சதவிகிதம் வழங்க சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்தார்.பிற மாநில முதல்வர்களுக்கு அவரவர் மாநில மக்களின், இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பற்றிய அக்கறை தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கும் வரவேண்டும். தற்போது உள்ள நிலையே நீடித்தால் வந்தவரால் வாழ்விழந்த தமிழர்களாக நாம் மாறிவிடுவோம்’’ என்ற எச்சரிக்கை வார்த்தைகளோடு முடித்தார் சமூக செயற்பாட்டாளர் சு.மூர்த்தி.

Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews