மேல்நிலை வகுப்புகளுக்கு திடீரென மாற்றப்பட்ட வினாத்தாள் வடிவமைப்பு: கணித ஆசிரியர்கள் அதிர்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 13, 2019

மேல்நிலை வகுப்புகளுக்கு திடீரென மாற்றப்பட்ட வினாத்தாள் வடிவமைப்பு: கணித ஆசிரியர்கள் அதிர்ச்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
தமிழகத்தில் மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டிருப்பது கணித ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. மேலும் மொத்த மதிப்பெண்கள் 600 ஆக குறைக்கப்பட்ட நிலையில், பிளஸ் 1 பொதுத் தேர்வு புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் முதல் முறையாக நடைபெறுகிறது.
செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கு 90 மதிப்பெண்களுக்கும், செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கு 70 மதிப்பெண்களுக்கும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கு ஒரு மதிப்பெண்ணில் 20 கேள்விகளும், குறு வினாக்கள் பிரிவில் 2 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும், சிறு வினாக்களுக்கு 3 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும், பெரு வினாக்கள் 5 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும் என 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெறும். செய்முறைத் தேர்வு இல்லாத கணித பாடத்துக்கு ஒரு மதிப்பெண் வினாக்கள் 20 இடம் பெற்றுள்ள நிலையில், இந்த 20 வினாக்களும் கொள்குறி வகையில், அதாவது சரியான விடையைத் தேர்வு செய்து பதிலளிக்கும் வகையில் இடம் பெற்றிருந்தன.இந்த வினாத்தாள் வடிவமைப்பு முறையில்தான் அரையாண்டுத் தேர்வு, திருப்புதல் தேர்வுகளின் வினாக்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் 3-ஆம் தேதியிட்டு அனுப்பியுள்ள உத்தரவில், அனைத்து பாட வினாத்தாள்களின் வடிவமைப்பு முறையை வரையறுத்துள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள விதத்தில்தான் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கான முதல் 20 மதிப்பெண்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பில், கொள்குறி வகை வினாக்களுக்கு பதிலாக, சரியானவற்றைப் பொருத்துக, கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியான- தவறான இணைகளைக் கண்டறிக, கூறப்படும் கருத்துக்கான காரணத்தை எழுதுவது, சரியான - தவறான வாக்கியங்களைத் தேர்வு செய்வது என்பது போன்ற வடிவ வினாக்கள் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திடீர் அறிவிப்பால் செய்முறைத் தேர்வு இல்லாத பாட ஆசிரியர்கள், குறிப்பாக கணிதப் பாட ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்கிறார் தமிழ்நாடு கணித முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில நிறுவனத் தலைவர் வி.விஜயகுமார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:பிளஸ் 1 தேர்வு புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.
வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதற்கான மாதிரிகள் கூட ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. கல்வியாண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட பழைய முறைப்படிதான் ஆசிரியர்கள் பாடம் நடத்தியுள்ளனர். மேலும், இதே அடிப்படையில்தான் அரையாண்டுத் தேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. மார்ச் மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வழக்கமாக செப்டம்பர் மாதத்திலேயே தயாரிக்கப்பட்டிருக்கும்.இந்த நிலையில், 20 ஒரு மதிப்பெண் வினாக்கள் பகுதியில் கொள்குறி வகை வினாக்களுக்கு பதிலாக ஐ.ஐ.டி., ஜே.இ.இ. கணிதத் தேர்வுகளில் கேட்கப்படுவதைப் போன்ற வடிவமைப்பில்தான் வினாக்கள் இருக்கும் என்று தேர்வுத் துறை கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இது தொடர்பாக கணித ஆசிரியர்களுக்கே வெள்ளிக்கிழமைதான் (ஜனவரி 11) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மாதிரி செய்முறைத் தேர்வுகளும் மூன்றாவது வாரத்தில் இருந்து செய்முறைத் தேர்வுகளும் நடைபெற உள்ளன. பொங்கல் விடுமுறைக்கு பிறகு வெறும் 10 நாள்களே உள்ள நிலையில், வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டதை கணித ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு எப்படி விளக்கி, அதற்குப் பயிற்சிஅளிக்க முடியும் என்று தெரியவில்லை.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் ஏற்கெனவே பயிற்றுவித்த வினாத்தாள் வடிவமைப்பு முறையிலேயே பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றார்.இது தொடர்பாக மாநிலக் கல்வியியல், ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு கல்வியாண்டின் தொடக்கத்திலேயே திட்டமிடப்பட்டதுதான். ஆனால் தேர்வுத் துறையின் புதிய உத்தரவில் வினாத்தாள் வடிவமைப்பில் மாறுதல் ஏற்பட்டிருப்பதாகக் கூறுவது தொடர்பாக ஆராய்ச்சி நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடமும், தேர்வுத் துறையிடமும் விசாரித்து பதிலளிப்பதாகத் தெரிவித்தனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews