அரசு பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் விடுப்பு எடுத்தால் அவர்கள் மீது வகுப்பு ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாகத்தை சீர்திருத்தும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை எடுத்த இந்த நடவடிக்கை காரணமாக தற்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளை முறைப்படுத்த களம் இறங்கியுள்ளனர்
முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் காலை 9 மணிக்கே பள்ளிக்கு வர வேண்டும், அடிக்கடி விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்
மேலும், உயர் வகுப்புகளான 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு, இடைப் பருவ தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக மாணவ மாணவியருக்கு பயிற்றுவிக்கும் முயற்சிகளை தொடங்கியுள்ளது
இதையடுத்து, உயர் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி மாணவர்கள் பள்ளிக்கு வரும் நாட்கள் குறைவாக இருந்தது தெரியவந்தது. அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவ மாணவியரை பள்ளிக்கு தொடர்ச்சியாக வரவழைக்கும் முயற்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்
இது தவிர மாணவர்கள் விடுப்பு எடுக்க நேரிட்டால் பள்ளித் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் தான் விடுப்பு எடுக்க வேண்டும். அதையும் மீறி அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை பள்ளி இறை வணக்க கூட்டத்திலும், வகுப்பு ஆசிரியர் மூலமாகவும் தெரிவிக்க வேண்டும். அதிக விடுப்பு எடுக்கும் மாணவர்களின் பெற்றோரை அழைத்துப் பேசி தேவையான நேரத்தில் அந்த மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.