நீட் மரணங்களைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்காத அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். தமிழகத்தில், விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் அருந்தியும், திருச்சியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கிலிட்டும் தற்கொலை செய்துகொண்டனர்.
இதுவல்லாமல் ஹைதராபாத்தில் மாணவியும், டெல்லியில் மாணவரும் தற்கொலை செய்துகொண்டனர். மேலும், தமிழகத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்திகா மற்றும் அஷ்டலெட்சுமி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வால் தமிழகத்தில் நடந்த மரணங்களைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
அரசு தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் மரணங்களைத் தவிர்த்திருக்க முடியும்; உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு நீட் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை; ஆகவே அரசு அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
வழக்கறிஞர் சூரிய பிரகாசத்தின் இந்த முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு வரும் 12ஆம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.