கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அலைமோதல்: `மெரிட்’ இருந்தும் `சீட்’ இல்லை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 03, 2018

Comments:0

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அலைமோதல்: `மெரிட்’ இருந்தும் `சீட்’ இல்லை


கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் சேர அதிக ஆர்வம் காட்டுவதால் பல கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு மெரிட் இருந்தும் சீட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் பொறியியல் கல்லூரிகள் மீது ஆர்வம் அதிகம் இருந்தது. அப்போது ஏராளமான புதிய பொறியியல் கல்லூரிகளும் தோன்றின.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை தோராயமாக 650ஐ கடந்தது. இந்திய அளவில் தமிழகத்தில் ஏராளமான பொறியியல் பட்டதாரிகள் தோன்றினார்கள். அவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகள் தேடிவந்தன. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பொறியியல் கல்வி மீதான ஆர்வம் குறைந்து வருகிறது.அதே நேரத்தில் மீண்டும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளை பயில மாணவர்கள் விரும்பத் தொடங்கினர். இதனால் இக்கல்லூரிகளில் இடம் பிடிக்க போட்டி அதிகரித்துள்ளது. பல கல்லூரிகளில் 2 ஷிப்ட் முறை அறிமுகப்படுத்திய பின்னரும் 2 ஷிப்டுகளிலும் சேர்ந்து பயில மாணவர்கள் அலைமோதுகின்றனர்.

தனியார் பள்ளிகளில் 2ம் ஷிப்ட் சுயநிதி பிரிவாக செயல்படுகிறது. இதில் பயில கல்விக்கட்டணம் முதல் ஷிப்டை விட சில மடங்கு அதிகமாக உள்ளது. இந்த சீட்டுகளை முதலில் நிரப்ப சில கல்லூரிகள் ஆர்வம் காட்டுகின்றன. ஆயினும் இதில் இடம் கிடைத்தாலும் பரவாயில்லை என்ற மனப்பான்மையுடன் இப்பிரிவிலும் ஏராளமானோர் விண்ணப்பிக்கின்றனர்.

இந்த ஆண்டு பல அறிவியல் கலைக்கல்லூரிகளில் பிளஸ்2 ரிசல்ட் வந்த 2 நாட்களுக்குள் 4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விண்ணப்பங்கள் குவிந்தன. தோராயமாக 65 இருக்கைகளுக்கு 500 முதல் 600 பேர் போட்டிபோடும் நிலை உருவானது. குறிப்பாக பி.காம், பிஎஸ்சியின் முக்கிய பாடப்பிரிவுகள் மற்றும் பிஏ ஆங்கில இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளில் இடம் பிடிக்க போட்டி கடுமையாக இருந்தது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் போட்டி மேலும் அதிகமாக உள்ளது. இங்கு கலை அறிவியல் பட்டம் பெற அதிக செலவு கிடையாது.

பெற்றோர் ஆசிரியர் கழக நிதி, போன்றவைகளுக்காக சில கல்லூரிகளில் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் பெறப்படுகிறது. இங்கு பாடப்பிரிவுகளில் மட்டுமின்றி அரசு மாணவர் விடுதிகளில் சேரவும் போட்டி உள்ளது. இதனால் ஒற்றை சாளரமுறையில் மாணவர்களின் மதிப்பெண், இடஒதுக்கீட்டு பிரிவு உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி சேர்க்கை நடத்துகின்றனர். இவ்வாறு பல கோணங்களில் மாணவ மாணவிகள் சேர்க்கை நடத்தும் நிலையில் போட்டி அதிகமாக இருப்பதால் உச்சபட்ச மதிப்பெண் எடுத்தவர்கள்கூட அவர்கள் விரும்பும் கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்காமல் திண்டாடும் நிலை உள்ளது.

95 சதவீதத்திற்குமேல் மதிப்பெண் எடுத்தவர்கள் நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் சில பாடப்பிரிவுகளுக்கு இருக்கிற சீட் எண்ணிக்கையை விட அதிகமானோர் விண்ணப்பித்து இருந்ததால் மதிப்பெண் மெரிட் உள்ள அவர்களுக்கு அந்த கல்லூரியில் இடம் கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போட்டி அதிகமாக இருப்பதால் பரிந்துரைகள், சிபாரிகள் எடுபடுவதில்லை.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில் கலை அறிவியல் படிப்பு மீதான இந்த ஆர்வம் மேலும் சில ஆண்டுகளுக்கு தொடரலாம். அதற்கேற்ப உயர்கல்வித்துறையினர் கண்காணித்து உரிய கல்வி வசதிகளை மேம்படுத்தவேண்டும் என்றனர்.

சீட் எண்ணிக்கை உயருமா?

கலை அறிவியல் படிப்புகளுக்கு போட்டி அதிகமாக இருப்பதால் அதிக மதிப்பெண் எடுத்தும் ஏழை மாணவ-மாணவிகள் சீட் கிடைக்காமல் அல்லாடுகின்றனர். இவர்கள் தனியார் கல்லூரிகளில் அதிக பணம் கொடுத்து சேர வசதியில்லாத நிலையில் உள்ளனர். எனவே போட்டி அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான சீட் எண்ணிக்கையை அரசு உயர்த்தி உத்தரவிடவேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews