தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 2 ஆயிரத்து 631 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பற்றாக்குறையாக உள்ளன. அந்த மாவட்டத்திற்கு விருப்பத்தின் பேரில் செல்பவர்களுக்கு மட்டும் நேற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதனால் சொந்த மாவட்டத்திற்கு மாறுதலாகிச் செல்ல வந்த ஆசிரிய ஆசிரியைகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நிரவல், பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கலந்தாய்வு கடந்த 11ம் தேதி துவங்கியது. கடைசி நாளான நேற்று தொடக்க கல்வி இயக்ககம் சார்பில், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதலாகி செல்வதற்கான கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் ஆன்லைனில் நடந்தது.
பாளையங்கோட்டை சேவியர் பள்ளி அரங்கில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்க ஏராளமான ஆசிரியர்கள் விருப்பமுடன் வந்திருந்தனர். கவுன்சலிங் தொடங்கும் முன் ஒட்டப்பட்ட அறிவிப்பு ஆசிரியர்களை அதிர்ச்சியடைய வைத்தது.kaninikkalvi. அதில், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் மற்றும் பள்ளியின் நலன் கருதி வெளி மாவட்டங்களில் இருந்து இந்த மாவட்டங்களுக்கு மட்டும் இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் வழங்கப்படும். மேலும் இந்த 8 மாவட்டங்களில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இக்கலந்தாய்வு மூலம் வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்கப்பட மாட்டாது.
ஆனால் மனமொத்த மாறுதல்கள் அனைத்து மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கும் வழங்கப்படும் என்ற தொடக்க கல்வி இயக்குனரின் அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. இந்த குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் மட்டும் 2 ஆயிரத்து 631 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அந்த பணியிடங்கள் உள்ள பள்ளிகள் பட்டியலை தனியாகவும் வெளியிட்டிருந்தனர். இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பல கிராமப்புற பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாதது இதன் மூலம் தெரியவந்தது.
இந்த கிராமங்களுக்கு பணியாற்றச் செல்ல ஆசிரியர்கள் தயங்குவதாலும், இங்கு பணியாற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரிய ஆசிரியைகள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு திரும்ப விரும்புவதாலும் குறிப்பிட்ட மாவட்டங்களில் காலியிடம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதாகவும், இதனாலேயே இந்த ஆண்டு கவுன்சலிங்கில் இவ்வாறு முடிவெடுத்திருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
அரசின் திடீர் முடிவால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆசிரிய ஆசிரியைகள் இந்த அறிவிப்பை கண்டு குமுறினர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 14 ஆண்டுகளுக்கு மேலாக தென்மாவட்டங்களை சேர்ந்த பல ஆசிரியைகள் தங்கள் குடும்பத்தை விட்டு விலகி வெளி மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர்.
Kaninikkalvi.
ஆனால் சீனியாரிட்டி முறை வரும் போது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு காரணம் சொல்லி தகுதி இருந்தும் சொந்த மாவட்டத்திற்கு பணி மாறுதல் தர அரசு மறுக்கிறது. இந்த முறை குமரி மாவட்டத்தில் 53 காலி பணியிடங்களும் நெல்லை மாவட்டத்தில் 49 காலிபணியிடங்களும் இருப்பதாக அறிகிறோம். ஆனால் 8 மாவட்டம் தவிர பிற மாவட்ட மாறுதலுக்கு முழுமையாக கலந்தாய்வு கிடையாது என அறிவித்திருப்பதில் நியாயம் இல்லை. அரசு புதியதாக ஆசிரியர்களை நியமிக்கும் போது காலியிடம் உள்ள மாவட்டங்களில் பணியமர்த்தலாம். அதை செய்யாமல் பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் தவிக்கும் பெண் ஆசிரியர்களுக்கு கூட தகுதி இருந்தும் மாறுதல் வழங்க மறுப்பது சரியல்ல என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.