'என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்' என்ற தலைப்பில் அஞ்சல் துறை நடத்தும் கடிதப் போட்டி: ரூ.50,000 முதல் பரிசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 26, 2018

'என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்' என்ற தலைப்பில் அஞ்சல் துறை நடத்தும் கடிதப் போட்டி: ரூ.50,000 முதல் பரிசு


பொதுமக்கள் மத்தியில் குறைந்துவிட்ட கடிதம் எழுதும் பழக்கத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கில், என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்' என்னும் தலைப்பில் கடிதம் எழுதும் போட்டியை இந்திய அஞ்சல் துறை நடத்துகிறது. பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு முதன்முறையாக அகில இந்திய அளவில் கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டது.

மகாத்மா காந்திக்கு எழுதும் கடிதம்' என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில், அகில இந்திய அளவில் 5 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் 4 பிரிவுகளில் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

நிகழாண்டுக்கான கடிதப் போட்டி, இந்திய அஞ்சல் துறை சார்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டது. ரபீந்திரநாத் தாகூரின் ஆமார் தேஷேர் மாதி' என்ற பெங்காலி மொழி தேசபக்திப் பாடலின் அடிப்படையில் என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்' என்ற தலைப்பு தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது. 

போட்டிக்கான கடிதத்தை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதலாம். கடிதத்தை, முதன்மை அஞ்சல் துறைத் தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உறையின் மேல், அஞ்சல் துறைக் கடிதப் போட்டி என்று தவறாமல் குறிப்பிட வேண்டும். 4 பிரிவுகளில்: இந்தப் போட்டி 4 பிரிவுகளாக நடைபெறும். 18 வயது வரையில், இன்லாண்டு லெட்டர் பிரிவு (உள்நாட்டு கடிதம்), என்வலப்பிரிவு (கடித உறை) என்ற இரண்டு பிரிவுகளும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இன்லாண்டு லெட்டர் பிரிவு (உள்நாட்டு கடிதம்), என்வலப் பிரிவு (கடித உறை) ஆகிய இரண்டு பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறும்

கடிதத்தின் அளவு: என்வலப் பிரிவில் எழுதுவோர் ஏ-4 அளவு வெள்ளைத் தாளில் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். இன்லாண்டு லெட்டர் பிரிவில் எழுதுவோர் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அஞ்சலகங்களில் விற்கப்படும் கடித உறை அல்லது வேறு உறைகள், தேவையான அளவு அஞ்சல் தலை ஒட்டப்பட்டவை மற்றும் இன்லாண்டு கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கூரியர் மூலம் அனுப்பப்படும் தபால்களோ, நேரில் தரப்படும் கடிதங்களோ ஏற்கப்பட மாட்டாது. 

ரூ.50,000 பரிசு: மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ.25,000-மும், இரண்டாவது பரிசாக ரூ.10,000-மும், மூன்றாவது பரிசாக ரூ.5,000-மும் வழங்கப்படும். அகில இந்திய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாவது பரிசாக ரூ.25,000, மூன்றாவது பரிசாக ரூ.10,000 அளிக்கப்படும். 

வயது சான்றிதழ் அவசியம்: இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஆர்.ஆனந்த் கூறியது: இந்தப் போட்டிக்கான கடிதங்களை செப்டம்பர் 30 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். போட்டியில் பங்கு பெறுவோர், கடிதத்தின் மேல், 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1 -ஆம் தேதியன்று, தங்களின் வயது 18 -க்கு மேல், 18 -வயதுக்குகீழ் என்று சான்றளிக்கிறேன்' என்று வாசகத்தை எழுதி கையெழுத்திட வேண்டும். வெற்றி பெறும் போட்டியாளர்களின் வயதுச் சான்றிதழ் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பரிசுக்கு பரிந்துரைக்கப்படும். 

கட்டுரைகள் புலமை வாய்ந்த நபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் படித்து, சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்வர். கடிதம் எழுதும் போட்டியில் கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து மொத்தம் 99,513 பேர் பங்கேற்றனர். இதில், சென்னை மண்டலத்தில் மட்டும் 29, 407 பேர் பங்கேற்றனர். இவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் 3 பேர் வீதம் மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாநில அளவில் பரிசு தொகை வழக்கப்பட்டது. மேலும், அகில இந்திய அளவில் 12 பேரின் கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களில் நாகை மாவட்டத்தை சேர்ந்த சௌந்தரராஜன், ரங்கநாயகி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றனர் என்றார் அவர்

👍Join Our WhatsApp Group👇Click Here


Total Pageviews