தனியார் பள்ளிகளைவிட, தான் பணிபுரியும் அரசுப் பள்ளியை சிறப்பாக மாற்றிய ஆசிரியரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார், பள்ளிக் கல்வித்துறை அதிகாரி உதயச்சந்திரன்.
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது பொய்யாமணி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார் பூபதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பள்ளிக்கு இவர் வந்தபோது எந்த வசதியும் இல்லாமல் இருந்திருக்கிறது. சக ஆசிரியர்கள், ஊர் மக்களின் துணையோடு பள்ளியில் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறார்.
ஊர் முழுக்க மரக்கன்றுகள், பள்ளி வளாகத்தில் இயற்கை காய்கறித் தோட்டம், மாந்த் தோட்டமதாகியவற்றை அமைத்திருக்கிறார்.
ஸ்பான்ஸர்களைப் பிடித்து, ஏ.சி வகுப்பறை, ஏ.சி கணினி ஆய்வகம், ஸ்மார்ட் கிளாஸ் ரூம், பள்ளி வளாகம் முழுக்க வைஃபை வசதி, நவீன தரைதளங்கள், பியூரிஃபைடு வாட்டர், நவீன டாய்லெட் வசதி என்று எல்லா வகையிலும் சிறப்பாக மாற்றியிருக்கிறார்.
இதற்காக, சமீபத்தில் இந்தப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழும் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில், இதுவரை ஏழு பள்ளிகளுக்குத்தான் இந்த தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை, பள்ளியில் நடக்கும் நல்ல மாற்றங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டுவந்திருக்கிறார், ஆசிரியர் பூபதி.
அதைப் பார்த்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரி உதயச்சந்திரன், பூபதியை சென்னைக்கு அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
இதுகுறித்து ஆசிரியர் பூபதியிடம் பேசினோம்,
``எங்கள் பள்ளியை வெகுவாகப் பாராட்டினார். 'உங்கள் முயற்சிக்கு மாணவர்கள், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பு தருகிறார்களான்னு கேட்டார். '100 சதவிகிதம் ஒத்துழைக்கிறார்கள்'னு சொன்னதும், மகிழ்ந்தார். நீங்கள் செய்வது நல்ல முயற்சி. பொய்யாமணி பள்ளி, அரசுப் பள்ளிகளுக்கெல்லாம் அடையாளம். நீங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ரோல்மாடல்.
இதுபோல தொடர்ந்து செயல்படுவதுதான் முக்கியம்' என்று பாராட்டியதோடு, நாமக்கல் வரும்போது எங்கள் பள்ளிக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார். அவரது பாராட்டு எனக்கு நோபல் பரிசு கிடைச்சாப்புல இருக்கு. இந்தப் பாராட்டு தந்த தெம்பில் பொய்யாமணி பள்ளியை இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டுபோகப் பாடுபடுவேன்" என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.