மருத்துவ மேற்படிப்புக்கான மதிப்பெண் வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 18, 2018

Comments:0

மருத்துவ மேற்படிப்புக்கான மதிப்பெண் வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


மருத்துவ மேற்படிப்புக்கான மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு எடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 மருத்துவ மேற்படிப்பிற்கான சேர்க்கைக்கு தொலைதூரம் மற்றும் எளிதில் அணுக முடியாத கிராமப்புறங்கள் மற்றும் கடினமானப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு  சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது.


 இதில் எவை தொலைதூரப் பகுதி, எவை எளிதில் அணுகமுடியாத பகுதி, எவை கடினமானப் பகுதி என்பதை வரையறை செய்து தமிழக அரசு கடந்த மார்ச் 23ம் தேதி அரசாணை பிறப்பித்தது.



இந்த அரசாணையின் மூலம் நகர்ப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களும் பலன் அடைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இந்த அரசாணை புவியியல் அமைப்பு ரீதியாக வகைப்படுத்தப்படவில்லை.  மாறாக அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையை வைத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது.


 இதனால் உண்மையிலேயே தொலைதூர மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் பாதிப்படைவர் எனக்கூறி இந்த அரசாணையை எதிர்த்து அரசு மருத்துவர்களான பி.ப்ரவீன், எம்.மகேஷ் உள்ளிட்ட சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.



தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை விடுமுறை கால சிறப்பு அமர்வில் நீதிபதிகள் வி.பார்த்திபன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.


 மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் வழக்கறிஞர் ரிச்சர்டு வில்சனும், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சி.மணிசங்கர் மற்றும் டி.என்.ராஜகோபாலனும் ஆஜராகி வாதிட்டனர். 


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ தொலைதூர பகுதிகள் மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகள் ஆகியவற்றில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கும் மருத்துவ மேற்படிப்புக்கான சலுகை மதிப்பெண்கள் வழங்குகின்ற வகையறை விதிகள் செல்லும்.  


அதாவது அரசாணைப்படி மாவட்ட, தாலுகா அரசு மருத்துவமனைகளில் விபத்து  மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, தாய்-சேய் நலம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு (சீமாங்க்), என்ஐசியு, எஸ்என்சியு போன்ற குழந்தைகள் நலப்பிரிவுகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் இத்தகைய சலுகை மதிப்பெண்களைப் பெற முடியாது.


இவ்வாறு சலுகை வழங்குவது என்பது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே இந்த வகைப்பாட்டினை மட்டும் நாங்கள் ரத்து செய்கிறோம்.


எனவே, இந்தாண்டு 2018-19 மருத்துவ மேற்படிப்பு சேர்க்கைக்கு தனி நீதிபதி ரத்து செய்த அரசாணையில் மேற்குறிப்பிட்ட இந்த வகைப்பாட்டினை மட்டும் நாங்கள் ரத்து செய்கிறோம்.  மற்றபடி அந்த அரசாணை செல்லும்.


இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்கவும், சலுகை மதிப்பெண்கள் வழங்குவதற்கு ஏற்ற பகுதிகளைக் கண்டறியவும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து முடிவு செய்ய வேண்டும்’’ என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.



No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews