முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய இடங்களை மாணவர்கள் கைவிடுவது தொடர்பான இறுதி முடிவை அந்தந்தக் கல்லூரிகளே எடுக்கலாம் என்று மத்திய சுகாதார சேவை இயக்ககம் அறிவித்துள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டு கட்ட கலந்தாய்வு நிறைவடைந்து விட்டன
. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் அந்தந்தக் கல்லூரிகளுக்கே மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த நிலையில் அகில இந்திய இடங்களைப் பெற்று அந்த இடங்களை கைவிட விரும்பும் மாணவர்கள் தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார சேவை இயக்ககத்தின் மருத்துவ கல்வி கலந்தாய்வுக் குழு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைப் பெற்ற மாணவர்களில் சிலர், எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜிப்மர், சண்டிகர் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய கல்லூரிகளிலும் முதுநிலை இடங்களைப் பெற்றுள்ளனர்.
எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் பிற கல்லூரிகளில் பெற்ற இடங்களைக் கைவிடுவது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டு கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த பின்னர், அதில் பெற்ற இடங்களைச் சமர்ப்பிக்க அனுமதி இல்லை.
அகில இந்திய அளவில் தயாரிக்கப்பட்ட தகுதிப்பட்டியலின் அடிப்படையிலேயே இந்த இடங்கள் நிரப்பப்பட்டன.
எனவே, மாணவர்கள் இடங்களைக் கைவிடுவது தொடர்பான இறுதி முடிவை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அந்தந்த கல்லூரிகளே எடுத்துக் கொள்ளலாம்.
இது தொடர்பாக எழும் புகார்கள், சட்டச் சிக்கல்கள் அனைத்தையும் கல்லூரிகளே கையாள வேண்டும். மத்திய சுகாதாரத் துறையோ, மத்திய சுகாதார சேவை இயக்ககமோ இதற்கு பொறுப்பாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.