ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் சென்னை செல்ல அனுமதி மறுப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 05, 2017

Comments:0

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் சென்னை செல்ல அனுமதி மறுப்பு!


ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், சிவகங்கையிலிருந்து சென்னையில் நடக்கும் பேரணிக்குச் செல்ல வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, சிவகங்கையில் அரசு ஊழியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நாளை மாபெரும் பேரணி நடத்துகின்றனர். இந்தப் பேரணிக்கு, போலீஸ் அனுமதிகொடுக்க மறுத்திருந்தது. இருந்தபோதிலும் நேற்று இரவு பல்வேறு நிபந்தனைகளோடு போலீஸ், அனுமதி வழங்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், சிவகங்கையைச் சேர்ந்த கூட்டமைப்பினர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரியிடம், அனுமதி கேட்டு முன்பே விண்ணப்பம் கொடுத்திருந்தார்கள்.

இன்று வரை அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாததால், சிவகங்கையில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது சங்க நிர்வாகிகள் பேசும்போது, "சிவகங்கையிலிருந்து 15 பேருந்துகளில் அரசு ஊழியர்கள் செல்ல அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், நான்கு பேருந்துகளுக்கு மட்டுமே அனுமதி அளித்திருக்கிறார்கள். மற்ற பேருந்துகளுக்கு அனுமதிகொடுக்க மறுத்து வருகிறார், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி. அனுமதி வழங்காததைக் கண்டித்து, மதியம் 12.30 மணியில் இருந்து 2.00 மணி வரை போராட்டம் நடத்திவருகிறோம். தற்போதுதான் அனுமதி வழங்குவதாக அதிகாரிகள் சொல்லி, எட்டுப் பேருந்துக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருக்கிறார்கள். காரணம் கேட்டால், போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டுகிறார்கள். ஆக, எங்களுடைய போராட்டக் கூட்டத்தைக் குறைக்க அரசு பல வழிமுறைகளை ஆயுதமாக எடுத்துவருகிறது. அதையும் மீறி நாங்கள் கோட்டையை நோக்கி பேரணியில் கலந்துகொள்வோம். போகும் வழியில் போலீஸை வைத்து வாகனங்களை இரவு நேரங்களில் தடுத்து நிறுத்த திட்டமிட்டிருப்பதாகவும் எங்களுக்குத் தகவல்வருகிறது. அதையும் எதிர்கொள்வோம்'' என்கிறார்கள் உறுதியோடு.


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews