‘புளூவேல்’ ஆன்லைன் விளையாட்டால் விபரீதம் கை விரலை அறுத்துக் கொண்ட பள்ளி மாணவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 27, 2017

Comments:0

‘புளூவேல்’ ஆன்லைன் விளையாட்டால் விபரீதம் கை விரலை அறுத்துக் கொண்ட பள்ளி மாணவி

‘புளூவேல்’ ஆன்லைன் விளையாட்டால் விபரீதம் கை விரலை அறுத்துக் கொண்ட பள்ளி மாணவி
    
உப்பள்ளியில் ‘புளூவேல்‘ ஆன்லைன் விளையாட்டால் பள்ளி மாணவி தனது கை விரலை அறுத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவில் தற்போது ‘புளூவேல்‘ ஆன்லைன் விளையாட்டால் மாணவ–மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. தற்கொலை விளையாட்டு என்றழைக்கப்படும் இந்த விளையாட்டுக்கு மாணவ–மாணவிகள் அடிமையாகி இருப்பது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ‘புளூவேல்‘ விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தாலும், இந்த விளையாட்டு ஒழிந்தபாடில்லை. இந்தியாவில் இந்த விளையாட்டால் ஏராளமான மாணவ–மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்த விபரீத விளையாட்டானது, 50 நாட்களை இலக்காக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டளை பிறப்பிக்கப்படும். அந்த கட்டளைகளை செய்யும் மாணவர்கள் அதை புகைப்படம் எடுத்தோ, வீடியோ எடுத்தோ பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விளையாட்டில், கைகளை அறுத்துக்கொள்வது, மொட்டை மாடி விளிம்பில் நடப்பது, இரவில் தனியாக சுடுகாட்டுக்கு செல்வது போன்ற பயங்கரமான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. 50–வது நாள் கட்டளையானது தற்கொலை என்பதை அறியாத மாணவ–மாணவிகள் இறுதியில் தங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர்.

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி ராஜனநகர் பகுதியை சேர்ந்தவள் ஜிஜா பாய் (வயது 11). இவள் அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் ஜிஜா பாய் கடந்த 24–ந்தேதி திடீரென தனது கை விரலை அறுத்துக்கொண்டாள். இதுபற்றி அவள், ‘புளூவேல்‘ ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதாகவும், அதில் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்ற தனது கைவிரலை அறுத்துக்கொண்டதாகவும் தனது தோழிகளிடம் கூறியுள்ளாள். இதுகுறித்து ஜிஜா பாயின் தோழிகள் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர்.
இதுபற்றி ஆசிரியர்கள் ஜிஜா பாயிடம் கேட்டபோது, ‘தனது தந்தையின் செல்போனில் ‘புளூவேல்‘ விளையாட்டை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்தேன். அதில் வந்த கட்டளைக்கு ஏற்ப நான் எனது கை விரலை அறுத்துக் கொண்டேன்‘ என்று கூறினாள்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், ஜிஜா பாயிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், அவர்கள் ஜிஜா பாயின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர்கள், ‘புளூவேல்‘ ஆன்லைன் விளையாட்டின் விபரீதம் குறித்து விளக்கினர்.
மேலும், ஜிஜா பாயிடம் இனிமேல் இந்த விளையாட்டை விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தினர். ‘புளூவேல்‘ ஆன்லைன் விளையாட்டால் பள்ளி மாணவி கை விரலை அறுத்துக் கொண்டது கர்நாடகத்தில் முதல் சம்பவம் ஆகும். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அந்த தனியார் பள்ளி, அனைத்து மாணவ–மாணவிகளையும், அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து ‘புளூவேல்‘ விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டம் நடத்தியது. அந்த கூட்டத்தில், ‘புளூவேல்‘ விளையாட்டால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தற்கொலைகள் குறித்தும், அதை தவிர்க்க பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் ‘புளூவேல்‘ ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் எதிர்வினைகளுக்கு பெற்றோர்களின் அக்கறையின்மையே காரணம் என்றும், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? என்பதை அறிந்து அவர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews