சம வேலைக்கு சம ஊதியம் - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 05, 2025

Comments:0

சம வேலைக்கு சம ஊதியம் - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

7040


சம வேலைக்கு சம ஊதியம் - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேலான இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை. இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் தலைமை வகித்தார். தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதுகுறித்து அமைப்பின் பொதுச்செயலாளர் ராபர்ட் கூறும்போது, “தமிழகத்தில் 2009-ல் திமுக ஆட்சியில் ஒரே பதவிக்கு இருவேறு அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சம்பள முரண்பாடு கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த முரண்பாட்டை களையக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். திமுக ஆட்சிக்கு வந்தால் சம்பள முரண்பாடுகள் களையப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இதுவரை இந்த பிரச்சினைக்கு முடிவு எட்டப்படவில்லை.

நீண்ட போராட்டத்துக்கு பிறகு இதுதொடர்பாக ஆய்வு செய்ய 2023 ஜனவரி 1-ல் 3 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்தக்குழு இதுவரை 3 முறை மட்டுமே கூடி கருத்துகளை கேட்டுள்ளது. ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டிய இந்த பிரச்சினை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது. இப்போது நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் சம்பள முரண்பாடை களைவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்ட போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்” என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews