அரசு பள்ளிக்கு 2.15 கோடி ரூபாய் செலவழித்த சென்னை தொழிலதிபர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 09, 2025

Comments:0

அரசு பள்ளிக்கு 2.15 கோடி ரூபாய் செலவழித்த சென்னை தொழிலதிபர்!

school%20image


அரசு பள்ளிக்கு 2.15 கோடி ரூபாய் செலவழித்த சென்னை தொழிலதிபர்! Chennai businessman spends Rs 2.15 crore on government school!

தான் படித்த பள்ளிக்கு 2.15 கோடி ரூபாய் செலவழித்து, பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகளை செய்து கொடுத்துள்ள சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

பெரம்பலுார் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி, 61. சென்னை அசோக்நகரில் குடும்பத்துடன் வசிக்கும் இவர், 'வெரிடாஸ் பவுண்டேஷன்' என்ற நிதி நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன், உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சொந்த கிராமத்துக்கு வந்தார். அப்போது, தான் படித்த லாடபுரம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு நேரில் சென்றார். அப்போது, 1980ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டும், பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், இதனால், 166 மாணவ - மாணவியரே தற்போது அங்கு படிப்பதையும் அறிந்தார்.

தொடர்ந்து தன் சொந்த செலவில், வெரிடாஸ் பவுண்டேஷன் வாயிலாக, நம்ம ஸ்கூல்; நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ், தேவையான அடிப்படை வசதிகளை பள்ளிக்கு செய்து தர முடிவு செய்தார். சிதிலமடைந்த பள்ளி மேற்கூரை, சுற்றுச்சுவர், விழா மேடை, கலையரங்கம், குளிர்சாதன ஆய்வகம், கழிப்பறை, சிசிடிவி கேமரா, கண்கவர் கார்டன், விளையாட்டு மைதானம், காய்கறி தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளார். இதற்காக, 2.15 கோடி ரூபாய் செலவழித்துள்ளார்.

இவரது முயற்சியில் பளபளப்பாகியுள்ள அரசு பள்ளி கட்டமைப்பை, பெரம்பலுார் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேற்று திறந்து வைத்தார். அருள்மணியை கிராம மக்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அருள்மணி கூறியதாவது:

நான், 1976ல் லாடபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். ஊருக்கு வந்தபோது, பள்ளி குறித்தும், அதில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் உறவினர்கள் வாயிலாக அறிந்தேன்.

என் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து, பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தேன். குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் உள்ள ஐ.ஆர்.எம்.ஏ., இன்ஸ்டிடியூட்டில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றுள்ளேன்.

நான் வாழ்வில் உயர்ந்ததற்கு அடித்தளமாக இருந்தது இந்த ஆரம்பப் பள்ளி தான். படித்த பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததை பாக்கியமாக நினைக்கிறேன். இதில், பாராட்டும் அளவுக்கு ஒன்றும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews