Reading proficiency test for government school students - Department of Elementary Education announcement - அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் பரிசோதனை - தொடக்கக் கல்வித் துறை அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வாசிப்பு திறனை ஏப்ரலில் சோதனை செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநிலத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன்படி தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனேகொள்ளு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி எங்கள் பள்ளி மாணவர்கள் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களை நன்றாக வாசிக்க தெரிந்தவர்கள் மற்றும் கணிதத்தில் அடிப்படை திறன்களின் அடைவு பெற்றுள்ளனர். எங்கள் பள்ளிக்கும் அமைச்சர் ஆய்வுக்கு வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று அமைச்சர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் மற்ற பள்ளிகளும் அழைப்பு விடுக்கவேண்டும் என்றும் அப்போது அவர் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் 4,552 பள்ளிகள் 2024 டிசம்பரில் அழைப்பு விடுத்தன. தற்போது இந்த பள்ளிகளில் 100 நாள் சவால் என்ற அடிப்படையில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை கற்பித்து, பொது வெளியில் சவாலை ஏப்ரல் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் மன்ற பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோர் முன் இதை நடைமுறைப்படுத்தும் வகையில் போதுமான அறிவுரைகளை அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதேபோல், மற்ற பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டும். இது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை நோக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒரு ஊக்குவிப்பாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.