தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்: நர்சரி, மழலையர் பள்ளிகளுக்கு அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 12, 2022

Comments:0

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்: நர்சரி, மழலையர் பள்ளிகளுக்கு அனுமதி

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்: நர்சரி, மழலையர் பள்ளிகளுக்கு அனுமதி

சென்னை: தமிழகத்தில் தற்போது நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள், மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில், நர்சரி, மழலையர் பள்ளிகளைத் திறக்கவும், பொருள்காட்சிகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலில், கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழக முதல்வர் தலைமையில் இன்று (12-2-2022) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில், முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக 22-1-2022 அன்று 30,744 ஆக இருந்த நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11-2-2022 அன்று 3086 ஆக குறைந்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ – மாணவியர்களின் எதிர்காலம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை மீள திரும்புவதற்கு ஏதுவாகவும், தமிழ்நாடு அரசால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன.

மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், அனைத்து கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திடவும், குறைத்திடவும் பின்வரும் கட்டுப்பாடுகள் மட்டும் 16-2- 2022 முதல் 2-3-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும். 1. சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும்.

2. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

3. இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன. நர்சரி பள்ளிகள் (எல்கேஜி, யுகேஜி) மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (ப்ளே ஸ்கூல்) திறக்க அனுமதியளிக்கப்படுகிறது. பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.

கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews