எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்திலாவது ‘TET’தவிர்ப்பு ஆணை கிடைக்குமா? - AIDED ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 03, 2022

Comments:0

எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்திலாவது ‘TET’தவிர்ப்பு ஆணை கிடைக்குமா? - AIDED ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!

கடந்த பத்தாண்டுகளாக பரிதவித்து வரும் தங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்களித்து காக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:

அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் முறையாக பணிநியமனம் பெற்ற சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் மட்டும் கடந்த பத்தாண்டுகளாக தகுதித் தேர்வு (டெட் தேர்வு) நிபந்தனையால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களைப் போலவே 2012ம் ஆண்டு வரை தகுதித் தேர்வு நிபந்தனையுடன் பணியேற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவால் காப்பாற்றப்பட்டனர். அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நிபந்தனையை ரத்து செய்து, புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளிப்பதாக அறிவித்ததால் இவர்களும் காப்பாற்றப்பட்டனர்.

ஆனால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத சிறுபான்மையற்ற ஆசிரியர்களாகிய எங்களுக்கு ஒரு வார கால புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளித்து பாதுகாப்பதாக கடந்த ஆட்சியில் துறைசார்ந்த அப்போதைய அமைச்சர் உறுதியளித்தார். அது நிறைவேற்றப்படவில்லை. மாறாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எங்களது பணியை தற்காலிகமாக காப்பாற்றிக் கொண்டுள்ளோம். ஆசிரியர் தகுதித் தேர்வு ஒன்றையே காரணம் காட்டி, இதுநாள் வரை எங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, வளரூதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பணிப்பதிவேடு தொடக்கம், விடுப்பு அனுமதிப்பு, தகுதி காண் பருவம் நிறைவேற்றல், பணிவரன்முறை செய்தல் போன்ற வழக்கமான நடைமுறைகள் கூட ஆங்காங்கே அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஆட்சியாளர்களால் புரிதல் இல்லாத, துறைசார்ந்த ஒரு சில அதிகாரிகளால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்வா, சாவா என்ற வாழ்க்கைப் போராட்டத்துடன் நாட்களை நகர்த்தியபடி, ஆசிரியர் தகுதித்தேர்வு என்ற நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரியும் எங்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்திட வேண்டும். முதலமைச்சர் மனது வைத்தால் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து ஒரே ஒரு தவிர்ப்பு ஆணை மூலம் எங்களை விடுவித்து விடலாம். அவ்வாறு விடுவிக்கப்பட்டால் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக கடந்த ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபசாகிவிடும். நல்லதொரு அறிவிப்பினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வரும் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தில் வெளியிட வேண்டும் "

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 23/8/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் பெற்று , பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews