ஆசிரியர்களை அச்சத்தில் வைத்திருக்கும் கலந்தாய்வு முறை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 22, 2022

Comments:0

ஆசிரியர்களை அச்சத்தில் வைத்திருக்கும் கலந்தாய்வு முறை!

ஆசிரியர்களை அச்சத்தில் வைத்திருக்கும் கலந்தாய்வு முறை!

ஆன்லைன் தவறுகளை முற்றிலும் சரிசெய்த பின்னரே கலந்தாய்வு நடத்த வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் பள்ளிக்கல்வித்துறையால் ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ள ஆசிரியர் கலந்தாய்வு பணிமாறுதல் தொடர்பாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் ஆசிரியர்களிடம் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தது முதல் பணி மூப்பு வெளியீடு வரை குழப்பங்களாகவே நடந்து வருகிறது.

பணி மாறுதலில் மலை சுழற்சி பற்றிய தெளிவின்மை இன்றுவரை தொடர்கிறது. கணவர் அல்லது மனைவி பணியாற்றுவது குறித்த முன்னுரிமையில் மாற்றம், மழலையர் வகுப்புகளுக்கு கட்டாய பணிமாற்றம் செய்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்காதது, முன்னுரிமைக்கு பணி ஏற்ற நாளை கருதாமல் பணி வரன்முறை செய்த நாளை கருதுவது, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமையினை பாடவாரியாக கணக்கிடுவது அதிலும் குறிப்பாக தமிழ்படித்த பட்டதாரி தலைமையாசிரியர்களை பின்னுக்கு தள்ளி இறுதியாக வைப்பது என பல குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. இவைகள் எல்லாம் கட்டாயம் மாற்றம் செய்ய வேண்டியவை.

இது குறித்து இயக்குனர்களிடம் பலமுறை தெரிவித்தும் தீர்வை எட்டுவதில் வேகமில்லை. சர்வ வல்லமை பொருந்திய மதிப்புமிகு ஆணையரை உடனுக்குடன் தொடர்பு கொள்வதில் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களால் பணிகள் தாமதமாகிறது. சங்க நிர்வாகிகளிடம் இருந்து வரும் தகவல்களை, கோரிக்கைகளை இயக்குனர்கள் உடனுக்குடன் வெளிப்படையாக ஆணையரிடம் கொண்டு செல்ல முடிகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டள்ளது. ஆசிரியர்களை பற்றிய அனைத்து தகவல்களும் ஆன்லைன் மூலம் தொகுக்கப்பட்டு, வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வினை நடத்தி முடிக்க வேண்டும் என்ற மதிப்புமிகு ஆணையரின் திட்டம் ஆசிரியர்களால் உச்சிமுகர்ந்து வரவேற்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்றாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடைபெற்று வரும் பல்வேறு குழப்பங்கள், பழம் பழுக்கும் கொத்தி தின்னலாம் என்று காத்திருந்து ஏமாந்த இலவம் மரத்துக்கிளியை போன்ற நிலையை உருவாக்கி ஆசிரியர்களுக்கு அதிருப்தியையும் அச்சத்தையுமே தந்துள்ளது. இது இலவங்காயல்ல. ரசித்து ருசிக்கும் கோவைப்பழம் என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் உணர்த்த வேண்டும். எனவே மதிப்புமிகு ஆணையரின் உயர்ந்த நோக்கம் நிறைவேறும் வகையில் கலந்தாய்வு விதிமுறைகளில் உரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். முன்னுரிமைப் பட்டியலில் சிறிய குறைகள் கூட ஏற்படாதவாறு பொறுமையுடன் சரி செய்ய வேண்டும். ஆசிரியர்கள் வேண்டும் கடைசி திருத்தங்கள் நிறைவேற்றப்படும் வரை பொறுமை காத்து அதன்பின்னரே கலந்தாய்வு நடத்த வேண்டும்.

இவைகள் எல்லாம் புதிய வழிமுறைகளை அமல்படுத்தும் போது ஏற்படுத்தும் சிக்கல்கள் தான் என்றாலும், அதனை சரிசெய்யத் தவறும் போது எதிர்மறை விளைவு ஏற்படுத்திவிடும். குறிப்பாக ஏற்கனவே பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு குளறுபடியும் சேரும்போது, ஆசிரியர்கள் இந்த அரசு மீது கொண்ட நம்பிக்கையும், அரசுக்கு ஆசிரியர்கள் மீது கொண்டுள்ள அன்பும் அக்கறை இவைகளையும் தாண்டி விமர்சனத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதை உணர்ந்து அதிகாரிகள் கடமையாற்ற வேண்டும் என பொறுப்புணர்வுடன் கேட்டுக் கொள்கிறோம்.

ந.ரெங்கராஜன்

பொதுச்செயலாளர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews