TRB போட்டி தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 07, 2021

Comments:0

TRB போட்டி தேர்வுகளை நடத்துவதில் சிக்கல்

TRB போட்டி தேர்வுகளை நடத்துவதில் சிக்கல்
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து விவகாரத்தால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டி தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில், 10.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை வன்னியர் சமூகத்தினருக்கு வழங்க, அ.தி.மு.க., ஆட்சியின் போது, கடந்த பிப்ரவரியில் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் முடிந்து, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்துக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டில் இந்த சட்டத்தின்படி, மாணவர் சேர்க்கையை நடத்தி, வன்னியர் சமூக மாணவர்களுக்கு உயர்கல்வியில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுசட்டம் முறையாக கொண்டு வரப்பட வில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு சட்டத்துக்கான அரசாணையை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே இந்த வழக்கு நீதிமன்றத்தில் வரும் போது, வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டு, மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்கள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. வழக்கின் இறுதி முடிவு, ஒதுக்கீடு செல்லாது என்பதால், தற்போது மாணவர் சேர்க்கையும், உள் ஒதுக்கீட்டில் மேற்கொண்ட பணி நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டிய சிக்கல் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில், அடுத்து மேற்கொள்ளப்படும் மருத்துவ மாணவர் சேர்க்கை, மருத்துவ இணை படிப்புகளுக்கான சேர்க்கை ஆகியவற்றில், வன்னியருக்கான உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே அறிவிக்கப்பட்ட அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு போன்றவற்றை நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, அரசு தரப்பில் இடைக்கால தடை பெற்றால் மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் மேற்கொள்ள முடியும்.இது குறித்து, அரசு தெளிவுபடுத்த வேண்டுமென தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews