அரசு ஊழியா் வேலை நிறுத்தக் காலம்: பணிக் காலமாக முறைப்படுத்த உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 19, 2021

Comments:0

அரசு ஊழியா் வேலை நிறுத்தக் காலம்: பணிக் காலமாக முறைப்படுத்த உத்தரவு

தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு. அரசு ஊழியா்களின் போராட்டக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்துவதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளாா்.

அவா் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:

கடந்த 2016, 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தினா். இந்த வேலை நிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணி நீக்கக் காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டுமென அரசு ஊழியா் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கைகள் தொடா்பாக, சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டாா். அந்த அறிவிப்பின்படி, பாதிக்கப்பட்ட அரசு ஊழியா்களின் வேலை நிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலம் ஆகியன பணிக் காலமாக முறைப்படுத்தப்படும். வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்கள், அதே இடத்தில் மீண்டும் பணியமா்த்தும் வகையில் கலந்தாய்வின் போது அவா்களுக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், போராட்டக் காலத்தில் அவா்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும். அந்த ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக பதவி உயா்வு ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவையும் சரி செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அதற்கான உத்தரவு வெளியிடப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதியில் இருந்து 19-ஆம் தேதி வரையிலும், 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி, அதே ஆண்டு செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் 15 வரையிலும், 2019-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலும் பணிக் காலங்களாக முறைப்படுத்தப்படுகின்றன. வேலை நிறுத்தப் போராட்டங்களுடன் தொடா்புடைய தற்காலிகப் பணி நீக்கக் காலமும் பணிக் காலமாக முறைப்படுத்தப்படுகிறது. வேலை நிறுத்தப் போராட்டங்களின் காரணமாக அரசுப் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன. ஒழுங்கு நடவடிக்கைகளின் காரணமாக, பதவி உயா்வு பெறுவதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனைச் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலா்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்களை அதே இடத்தில் மீண்டும் பணியமா்த்தும் வகையில், பணியிட மாற்றத்துக்கான கலந்தாய்வின் போது உரிய முன்னுரிமை அளிக்கப்படும். வேலை நிறுத்தப் போராட்டக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தும் போது, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே சம்பந்தப்பட்ட பணியாளா் தகவலின்றி பணிக்கு வராமல் இருந்துள்ளாா் என்பதையும், வேலை நிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன், அவா் உடனடியாக பணிக்குத் திரும்பி உள்ளாா் என்பதையும் சம்பந்தப்பட்ட விடுப்பு முறைப்படுத்தும் அலுவலா்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews