அனைத்துப் பள்ளிகளிலும் மதிய உணவு இடைவேளையை அதிகரிக்க வேண்டும்: ராமதாஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 26, 2021

Comments:0

அனைத்துப் பள்ளிகளிலும் மதிய உணவு இடைவேளையை அதிகரிக்க வேண்டும்: ராமதாஸ்

அனைத்துப் பள்ளிகளிலும் மதிய உணவு இடைவேளையை அதிகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த சில நாட்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கரோனா அச்சம் காரணமாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த மாணவர்களுக்குப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவது மகிழ்ச்சியளிப்பது மட்டுமின்றி மன அழுத்தத்தையும் போக்கும். அதே நேரத்தில் பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் அதிகரித்து வரும் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டைப் போக்க ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்களிடம் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு பெரும் குறையாக உருவெடுத்துள்ளது. பள்ளிக்கல்வி பயிலும் வயதில் உள்ள மாணவ, மாணவியரில் 46 விழுக்காட்டினர் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல், இளம் வயதில் பலரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதர்களின் உடல் நலனில் மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் இந்த இரு வகையான குறைபாடுகளும், பள்ளிப் பருவத்து உணவுப் பழக்கம் செம்மையாக இல்லாததன் காரணமாகத்தான் ஏற்படுகின்றன.

பள்ளிக்கூடங்களில் பெரும்பான்மையான மாணவ, மாணவியர் மதிய உணவை முழுமையாகவும், முறையாகவும் உட்கொள்வதில்லை. இதற்கான காரணம் மதிய உணவு இடைவேளை நேரம் பெருமளவில் குறைக்கப்பட்டதுதான். ஒரு காலகட்டத்தில் மதிய உணவு இடைவேளை என்பது குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரமாக இருந்தது. அந்த நேரத்தில் மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவையோ அல்லது பள்ளிகளில் வழங்கப்படும் மதிய சத்துணவையோ நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, அதன் பின்னர் சிறிது நேரம் விளையாடிவிட்டு வகுப்புகளுக்குச் செல்ல முடியும். அதனால், மாணவர்கள் தங்களுக்குத் தேவையான அளவு உணவை உட்கொள்வது மட்டுமின்றி, சிறிது நேரம் விளையாடுவதன் மூலம் உணவு செரிப்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், இப்போது அப்படியில்லை.

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை உணவு இடைவேளை சராசரியாக 40 நிமிடங்களாகவும், தனியார் பள்ளிகளில் 30 நிமிடங்களாகவும் குறைக்கப்பட்டு விட்டது. அதுமட்டுமின்றி, தனியார் பள்ளிகளில் உணவு இடைவேளையின் ஒரு பகுதி பாடம் நடத்துவதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள நேரத்தில் மதிய உணவை உண்பதும், வழக்கமாகச் செய்ய வேண்டிய பிற பணிகளை நிறைவு செய்து வகுப்புகளுக்குச் செல்வதும் சாத்தியமல்ல. அதனால், பெரும்பான்மையான மாணவ, மாணவியர் தங்களின் மதிய உணவின் ஒரு பகுதியை மட்டுமே சாப்பிடுகின்றனர்; பலர் உணவு சாப்பிடாமல் பட்டினியாக வகுப்புக்குச் செல்கின்றனர். பெரும்பான்மையான குழந்தைகளின் சத்துக்குறைவுக்கு இதுவே காரணம். உணவை முழுமையாக உட்கொள்ளும் குழந்தைகள்கூட அதை முறையாக உட்கொள்வதில்லை என்பதுதான் வருத்தமான உண்மையாகும். உணவை அவசர, அவசரமாக உட்கொள்ளக் கூடாது. உணவை வாயிலிட்ட பிறகு 25 முறையாவது மென்று அதன்பிறகுதான் விழுங்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, நமது வாயில் சுரக்கும் உமிழ்நீர் இன்சுலின் செய்யும் வேலையில் பாதியைச் செய்து விடுகிறது. அவ்வாறு செய்தால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், பள்ளிகளில் மதிய உணவு உட்கொள்ளப் போதிய நேரமில்லாததால், உணவை மெல்லாமலேயே குழந்தைகள் விழுங்குகின்றனர். இத்தகைய வழக்கத்தால் பின்னாளில் ஏதோ ஒரு கட்டத்தில் அவர்களை நீரிழிவு நோய் தாக்குகிறது.

இன்றைய கல்வி முறை இயந்திரமயமாக மாறி விட்டதுதான் அனைத்துத் தீமைகளுக்கும் காரணமாகும். பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டத்தில் விளையாட்டு, உடற்பயிற்சி, நீதி போதனை, கைத்தொழில் பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், கல்வி என்பது மதிப்பெண்கள் சார்ந்ததாகவும், அதனடிப்படையில் கிடைக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் சார்ந்ததாகவும் மாறிவிட்டதால் மாணவர்கள் மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாக மாற்றப்பட்டு விட்டனர். அதற்கான வெகுமதியாக நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு, பலவகையான நோய்கள் ஆகியவற்றை அவர்கள் அனுபவிக்கின்றனர். இந்த நிலையை மாற்ற அரசு, பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர் ஆகியோர் இணைந்து பாடுபட வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாகத் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் குறைந்தது ஒரு மணி நேரம் மதிய உணவு இடைவேளை விடப்படுவதும், ஒரு நாளைக்கு ஒரு பாடவேளையாவது விளையாட்டு/ உடற்பயிற்சிக்கு ஒதுக்கப்படுவதையும் அரசும், பள்ளி நிர்வாகங்களும் உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன் வாரத்திற்கு ஒரு பாடவேளையாவது நுண்ணூட்டச் சத்து மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகள் குறித்து மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். பெற்றோரும் தங்களின் பிள்ளைகளுக்கு உடனடி உணவுகளைத் தயாரித்து வழங்காமல், காய்கறிகள், பருப்பு , சிறுதானியங்கள் நிறைந்த உணவுகளைப் பள்ளிகளுக்கு கொடுத்தனுப்ப வேண்டும். அதன் மூலம் மாணவ, மாணவியரின் நலவாழ்வை உறுதி செய்ய வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews