1 முதல் 8-ம் வகுப்பு வரை திறப்பு எதிரொலி: பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 24, 2021

Comments:0

1 முதல் 8-ம் வகுப்பு வரை திறப்பு எதிரொலி: பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு

நவம்பர் 1-ந்தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நவம்பர் 1-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து சென்னை புறநகர் பகுதிகளான பரங்கிமலை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பல்லாவரம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் அரசு விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? கண்காணிப்பு கேமிரா, அவசர கால கதவு, குழந்தைகள் அமரும் வகையில் இருக்கைகள், முதலுதவி பெட்டிகள், பிரேக் போன்ற வாகன விதிமுறைகள் சரியாக உள்ளதா? என்பதை கண்டறிய மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து துறை முலம் வருவாய் துறை, போக்குவரத்து போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை இணைந்து ஆய்வு செய்தது.

அதன்படி தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார், போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன், தாம்பரம் தீயணைப்பு அலுவலர் ஆகியோர் இணைந்து பள்ளி வாகனங்களை பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்கு வந்த 40 பள்ளி வாகனங்களில் 10 வாகனங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதேபோல் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் தலைமையில் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தாம்பரம் வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் பள்ளி வாகனத்தின் உள்புற பகுதியில் ஏதேனும் பழுது உள்ளதா?, பள்ளி வாகனத்தில் முதலுதவி பெட்டிக்குள் இருக்கும் மருந்துகள் காலாவதி ஆகாமல் உள்ளனவா? என ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் பள்ளி வாகனத்தில் உள்ள தீயணைப்பான் கருவியை எவ்வாறு உபயோகபடுத்த வேண்டும்? என அதன் டிரைவர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் பயிற்சி அளித்தனர். ஆய்வின்போது வட்டார போக்குவரத்து முதல் நிலை ஆய்வாளர் தேவனேஸ்வரி மற்றும் இளநிலை ஆய்வாளர் மணிபாரதி உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பூந்தமல்லி, ஆவடி, திருவேற்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் தனியார் பள்ளிகள் சார்பில் 293 வாகனங்கள் உள்ளன. அதில் முதல்கட்டமாக நேற்று 125 வாகனங்கள் திருவேற்காடு காடுவெட்டி அருகே உள்ள மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது. பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, பூந்தமல்லி தாசில்தார் சங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பள்ளி வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளதா? என்பது உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 12 வாகனங்களில் குறைபாடுகள் இருந்ததால், அவற்றை நிவர்த்தி செய்துவிட்டு மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி தகுதி சான்றிதழ் பெறும்படி அறிவுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews