மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்பு துவக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 17, 2021

Comments:0

மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்பு துவக்கம்!

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால், ஆறு மாதங்களுக்கு பின், மருத்துவக் கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் துவங்கின.தமிழகத்தில், கொரோனா தொற்று இரண்டாவது அலை, பிப்ரவரியில் பரவத் துவங்கியது. இதையடுத்து, மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டன.தற்போது, தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து, ஆறு மாதங்களுக்கு பின், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளிலும், நேரடி வகுப்புகள் நேற்று துவங்கப்பட்டன.

48 மணி நேரத்துக்கு முன், எடுக்கப்பட்ட பரிசோதனையில், தொற்று இல்லை என்ற சான்றுடன், மாணவர்கள், முகக்கவசம் அணிந்து, கல்லுாரிக்கு வந்தனர். மேலும், சமூக இடைவெளி பின்பற்றி, வகுப்பறைகளில் அமர்ந்தனர். மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியில் நேற்று ஆய்வு செய்தார்.பின், அவர் அளித்த பேட்டி:மருத்துவக் கல்லுாரிகளுக்கு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இல்லையென்றால், பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும் என, மாணவர்களிடம் அறிவுறுத்திள்ளோம். கொரோனா தொற்று, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், சற்று அதிகமாக உள்ளது. திருமண நிகழ்வு உள்ளிட்ட, ஒரு சில மதம் சார்ந்த நிகழ்வு நடப்பது சவாலாக உள்ளது. 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் குடியிருப்பில், ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு, மற்றவர்களுக்கு பரவுகிறது. அது போன்ற இடங்களில், கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். பணி செய்யும் இடங்களில் தொற்று ஏற்பட்டால், அந்த நபர்களின் குடும்பத்தினர்களும் பாதிக்கப்படுகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 32 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை, 100க்கு குறைவாகவே உள்ளது. தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கேரளா மாநிலத்தில் தொற்று அதிகம் என்பதால், தமிழக எல்லையில் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த, மக்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்னோர் அலைக்காக, மக்கள் காத்திருக்காமல், தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.தற்போது, அரசிடம் 12 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. இன்னும் 6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews