தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர்களின் துயரக் கதை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 28, 2021

Comments:0

தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர்களின் துயரக் கதை!

“என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவ்வளவு விரக்தியாக இருக்கிறது. எம்.இ., படித்திருக்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாகத் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருக்கிறேன். என்னுடைய மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா? மூவாயிரம் ரூபாய். என் வீட்டில் நான் ஒருவன்தான் சம்பாதிக்கக்கூடியவன். அப்பா, அம்மாவுக்கு வயதாகிவிட்டது. தம்பி கல்லூரி முடித்து இரண்டு வருஷமா வேலை தேடிக்கொண்டிருக்கிறான். நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்தை மாதம் மூவாயிரம் ரூபாயை வைத்து எப்படிச் சமாளிப்பது?”


கரோனா காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகள் எப்படிச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள கல்லூரி ஆசிரியர்கள் சிலரைச் சந்தித்துப் பேசினேன். அதில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவருடைய கதைதான் இது. இது அவருடைய கதை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் பெரும்பாலான உதவிப் பேராசிரியர்களின் கதையும்கூட.

“நான் பணியில் சேரும்போது என்னுடைய மாத ஊதியம் ரூ.18 ஆயிரம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் என்னுடைய ஊதியம் ரூ.15 ஆயிரமாகக் குறைக்கப்பட்டது. என்ன காரணம் என்று கேட்கிறீர்களா? கல்லூரியில் அட்மிஷன் குறைந்துவிட்டது. அதனால், சம்பளத்தைக் குறைத்துவிட்டார்கள். பி.இ. முடித்துவிட்டுப் பல நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்த என் நண்பர்கள் இன்று சராசரியாக 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாத ஊதியம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன் எங்களிடம் கல்வி பயின்று தொழில்நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் மாணவர்களின் தொடக்க ஊதியம் எங்களின் ஊதியத்தைவிடப் பல மடங்கு அதிகம்.”

எப்படி அவருடைய ஊதியம் ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரத்துக்கு வந்தது என்று நான் அவரிடம் கேட்டேன். “கரோனா முதல் அலையில் மோடி நாடு தழுவிய ஊரடங்கு கொண்டுவந்தார் அல்லவா, அதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பே பள்ளி, கல்லூரிகளை மூட ஆரம்பித்துவிட்டார்கள். மார்ச்சுக்கு அப்புறம் இரண்டு மாதம் செமஸ்டர் காலகட்டம். ஜூன் மாதத்துக்குப் பிறகு இணையம் வழியாக மாணவர்களுக்கு வகுப்பெடுக்கத் தொடங்கினோம். இப்போது வரை தினமும் காணொளி வழியாக மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறோம். கல்லூரி நிர்வாகத்துக்கு இது வசதியாகிவிட்டது. ‘நீங்கள்தான் கல்லூரிக்கு வரவில்லையே. உங்களுக்கு எப்படி முழுச் சம்பளம் தர முடியும்’ என்று சம்பளத்தைப் பாதியாகக் குறைத்தார்கள். ரூ.15 ஆயிரத்திலிருந்து என்னுடைய சம்பளம் ரூ.7 ஆயிரத்து ஐநூறாகக் குறைந்தது. சரி... சில மாதங்களுக்குத்தான் இப்படி இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், ஒரு வருடம் ஓடிவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 600-ஐத் தாண்டும்.

இந்த வருடம் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 60. சில துறைகளில் இரண்டு மாணவர்கள்தான் இருக்கிறார்கள். இதைக் காரணம் காட்டி, கல்லூரி நிர்வாகம் எங்கள் சம்பளத்தை இன்னும் குறைத்துவிட்டது. அப்படித்தான் என்னுடைய சம்பளம் ரூ.7 ஆயிரத்து ஐநூறிலிருந்து ரூ.3 ஆயிரமாக மாறியது. எனில், எங்களுக்கான ஒரு நாள் ஊதியம் எவ்வளவு என்று கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். நூறு ரூபாய். ஒரு தனிமனிதரின் மூன்று வேளை உணவுக்குக்கூட இந்தத் தொகை போதாது. இதனால், பல ஆசிரியர்கள் கல்லூரி வேலையை விட்டு விலகி, வேறு வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். உதவிப் பேராசிரியர்களுக்கு வேறு துறையில் வேலை தேடுவதில் என்ன சிக்கல் என்றால், கல்லூரியில் பணியாற்றிய அனுபவத்தைத் தொழில் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்கள் ஆசிரியர் வேலையைத் தவிர்த்து வேறு வேலைகளுக்குச் செல்வது மிகவும் சிரமமானது. இதனால், பலர் சிறு வியாபாரங்களை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர். அமேசானின் டெலிவரி நபராக, கரோனா நோயாளிகளைக் கவனித்துக்கொள்பவராக எனக் கிடைக்கும் வேலைகளைச் செய்ய வேண்டிய சூழலுக்குள் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்” என்றார் அவர்.

பொறியியல் கல்லூரி ஆசிரியர்களின் நிலைமை மட்டுமல்ல... தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரின் நிலையும் இவ்வாறாகவே உள்ளது. நாடு முழுவதுமாக உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் யுஜிசி என்றழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு உட்பட்டும், பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ என்றழைக்கப்படும் தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்தியக் குழுவின் விதிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட வேண்டும். ஆசிரியர்களுக்கான ஊதியங்களை இக்குழுக்கள்தான் நிர்ணயம் செய்கின்றன. பொறியியல் கல்லூரிகளை எடுத்துக்கொண்டால், ஏஐசிடிஇ-ன் நிர்ணயத்தின்படி, ஒரு உதவிப் பேராசிரியரின் மாத ஊதியமானது அடிப்படை ஊதியம், சராசரி தர ஊதியம், கருணைத்தொகை, வீட்டு வாடகைப்படி சேர்த்து ரூ.60,000-க்கு மேல் வரும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மட்டுமே இந்த முறையான ஊதியம் தரப்படுகிறது. தவிர, தரத்தின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் குறிப்பிட்ட சில தனியார் கல்லூரிகள் ஏஐசிடிஇ நிர்ணயித்த ஊதியத்தை வழங்காவிட்டாலும், சற்று நியாயமான ஊதியத்தை வழங்குகின்றன. மற்ற கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கு மிகச் சொற்பமான ஊதியமே வழங்கப்படுகிறது.


ஒட்டுமொத்த அளவில் தனியார் கல்லூரிகளில் ஆசிரியர் தொழில் என்பது அமைப்புசாராத் துறைகளில் உள்ள தொழிலாளர்கள் நிலையைப் போலவே உள்ளது. பெரும் நிச்சயமின்மையில்தான் கல்லூரி ஆசிரியர்களின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. கல்லூரி ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினை என்பது அவர்களோடு மட்டும் முடிந்துவிடும் பிரச்சினை அல்ல. அது மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் அளவுக்குத் தீவிரமான பிரச்சினை என்பதை நாம் உணர வேண்டும். முறையாக ஊதியம் தராமல், கொத்தடிமைபோல் நடத்தப்படும் ஒரு ஆசிரியரிடமிருந்து எத்தகைய கற்பித்தலை நாம் எதிர்பார்க்க முடியும்? இந்தச் சூழலை மாற்ற தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கல்லூரி ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாகப் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். இல்லையென்றால், கல்லூரிகள் எதற்கும் பயன்படாத மாணவர்களை உருவாக்கும் பண்ணையாக மாறிவிடும்!

- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews