விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் கட்டும் பணியில் ஈடுபட்ட 8ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மின்சாரம் தாக்கி பலி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 23, 2021

Comments:0

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் கட்டும் பணியில் ஈடுபட்ட 8ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் கட்டும் பணியில் ஈடுபட்ட 8ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் வருகைக்காக கொடி கட்டிய சிறுவன் பலி..! சந்தேக மரணம் என வழக்குப் பதிவு அமைச்சர் பொன்முடிக்காக வைக்கப்பட்ட பேனரும், உயிரிழந்த சிறுவனின் உடலை பார்த்து கதறி அழும் தாயும்


விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் பொன்குமார் என்பவரது இல்ல திருமண விழா நடைப்பெற்றது. இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அவரை வரவேற்க தி.மு.க. சார்பில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து தி.மு.க. கட்சி கொடிகள் அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் பணிகளில் 10 க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருந்தனர். அதில் விழுப்புரம் ரஹீம் லே- அவுட் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகனான விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயதே ஆன தினேஷ் என்ற சிறுவனும் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அச்சாலையில் மின் பகிர்மான கழகம் செயல்பட்டு வருவதால் அங்கு அதிக அளவிலான உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. அப்போது பணியில் ஈடுபட்டு இருந்த சிறுவன் நடவு செய்த கொடி கம்பம், மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் தூக்கி வீசப்பட்டான். இந்த திடீர் விபத்தால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் சிறுவன் படுகாயம் அடைந்தான். சிறுவனை உடன் பணி புரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரழந்தான். நெடுஞ்சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடஙகளில் பேனர் கொடி கம்பங்கள் வைப்பதால் இதுப்பின்ற விபத்துக்கள் ஏற்படுவதோடு உயிரழப்புகளும் ஏற்படுவதை தடுக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பேனர்கள் வைக்கவும், கொடி கம்பங்கள் வைக்கவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் கலாசாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. காவல் துறை மற்றும் அதிகாரிகள் அலட்சியத்தால் சிறுவன் பலியானது அனைவரது மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், உயிரின் மதிப்பு என்பது ஆட்சிக்கு ஆட்சி மாறுவதில்லை. சுபஸ்ரீ க்கு ஆதரவாக வாய் பேசியவர்கள் தற்போது எங்கே? குழந்தைகள் நல வாரியம் தலையிட்டு சம்பத்தப்பட்ட தி.மு.க.வினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்படாததால் பள்ளி செல்ல வேண்டிய வயதில் கூலி வேலைக்கு செல்லும் சிறுவர்களின் நிலை உயிரை பறிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளதற்கு அரசு பதிலளிக்க வேண்டும் எனவும், இது போன்ற பிரதான சாலைகளில் இது போன்ற வரவேற்பு பேனர், கொடி கம்பங்கள் நட மாவட்ட நிர்வாகம், காவல்துறை இனியும் அனுமதி வழஙகாமல் இருந்தால், இது போன்ற உயிரிழப்புகள் நடக்காமல் இருக்கும் என்றனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தாய் லக்ஷ்மி ஏகாம்பரம் அளித்த புகாரின் அடிப்படையில், தற்போது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது . அதில் அமைச்சரின் வருகைக்காக சாலையோரத்தில் தி.மு.க. கொடிக்கம்பங்கள் நடப்பட்டன. இதில் கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வந்தார். உதவிக்காக பக்கத்து வீட்டில் உள்ளவரின் 13 வயது மகனை அழைத்து சென்றுள்ளார். அப்போது கட்சிக் கம்பம் ஊன்றியபோது உயர்மின் கம்பி உரசி சிறுவன் தூக்கி வீசப்பட்டான்
இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானான் என பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விழுப்புரம் மேற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews