மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை குறைத்ததால் இழப்பீடாக தமிழகத்துக்கு ரூ.5,600 கோடி ஏன் வழங்க கூடாது?- மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 22, 2021

Comments:0

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை குறைத்ததால் இழப்பீடாக தமிழகத்துக்கு ரூ.5,600 கோடி ஏன் வழங்க கூடாது?- மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

தமிழக எம்.பி.க்கள் எண்ணிக்கையை 41-ல் இருந்து 39 ஆக குறைத்ததால், கடந்த 14 தேர்தல்களில் ஏற்பட்ட இழப்புக்கு மத்தியஅரசு இழப்பீடாக தமிழகத்துக்கு ஏன் ரூ.5,600 கோடி வழங்க கூடாதுஎன உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தென்காசி நீண்ட காலமாக தனி தொகுதியாக இருப்பதால் அதைபொது தொகுதியாக மாற்றக் கோரிஉயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதைவிசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:

தென்காசி தொகுதியில் வசிக்கும் பட்டியலின, பழங்குடியினத்தவர் மக்கள்தொகை பிற சமூகத்தினர் எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பதன் அடிப்படையிலேயே, அது தனி தொகுதியாக மறுவரையறை செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. எனவே, மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல. இருப்பினும், இந்த வழக்கில் முக்கியமான ஒரு விஷயத்தை இந்தநீதிமன்றம் ஆராய விரும்புகிறது. தமிழகத்தில் கடந்த 1962-ல் மக்களவைக்கு 41 எம்.பி.க்கள் இருந்துள்ளனர். தமிழகமும், ஆந்திராவும் மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதன் காரணமாக, தமிழகத்தில் 41 ஆக இருந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 39 ஆகவும், ஆந்திராவில் 42 ஆக இருந்த எம்.பி.க்கள்எண்ணிக்கை 40 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல் அதிகாரம் வெகுவாக பறிபோய் இருக்கிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் அரசியல் அதிகாரம் சமமாகபிரித்து அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மாநிலங்களின் உரிமை, ஜனநாயகம் காக்கப்படும். மக்கள்தொகையை கட்டுப்படுத்த தவறிய உத்தர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகம். அதேநேரம், மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதால் தமிழகத்தில் 1967 முதல் 2019 வரை நடந்த 14 மக்களவை தேர்தல்களில் தலா 2 எம்.பி.க்கள் என மொத்தம் 28எம்.பி.க்கள் மூலம் கிடைத்திருக்க வேண்டிய உரிமை, பலன்களை தமிழகம் இழந்துள்ளது.

ஒரு ஓட்டின் முக்கியத்துவம்
கடந்த 1999-ல் வாஜ்பாய் அரசுஒரு ஓட்டில் கவிழ்ந்ததை யாரும் மறக்க முடியாது. ஒரு ஓட்டு என்பதுஒரு ஆட்சியையே கவிழ்க்கும் அல்லது உருவாக்கும் வல்லமைபடைத்தது. ஆனால், தமிழகத்துக்கான 2 எம்.பி.க்களை குறைத்தது ஏன் என்று எந்த அரசியல் கட்சியும் கேள்வி எழுப்பவில்லை. மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதன் மூலமாக தொகுதி மறுவரையறை என்ற பெயரில் எம்.பி.சீட்டுகளின் எண்ணிக்கையை குறைத்தால், அது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். ஒரு எம்.பி. மூலமாக மாநிலத்துக்கு வளர்ச்சிப் பணிகளுக்காக 5 ஆண்டுகளில் ரூ.200 கோடி கிடைக்கும் என தோராயமாக கணக்கிட்டால், கடந்த 1967 முதல் 2019 வரை நடந்த 14 தேர்தல்களில் 2 எம்.பி.க்களை இழந்து தமிழகம் சந்தித்த இழப்புக்கு மத்திய அரசு ஏன் ரூ.5,600 கோடியை இழப்பீடாக தமிழகத்துக்கு வழங்கக்கூடாது. இனி வரும் தேர்தல்களில் மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து தமிழக எம்.பி.க்கள் எண்ணிக்கையை குறைக்க ஏன் தடை விதிக்க கூடாது. மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைத்தால், அதற்கு பதிலாக ஏன் மாநிலங்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்த கூடாது என மத்திய அரசு 4 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த வழக்கில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, இந்தியகம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளையும் எதிர்மனுதாரர்களாக தாமாக முன்வந்து சேர்க்கிறோம். அவர்களும் இதுதொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறுநீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews