தளர்வும் தீர்வும்! : கரோனா 3-வது அலை விழிப்புணர்வு குறித்த தலையங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 07, 2021

Comments:0

தளர்வும் தீர்வும்! : கரோனா 3-வது அலை விழிப்புணர்வு குறித்த தலையங்கம்

"உலகிலுள்ள கடைசி மனிதன் வரை அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி போடப்படும்வரை கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று அபாயம் தொடரும்' என்று ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியிருப்பது உண்மையிலும் உண்மை. உலகிலுள்ள பல நாடுகளிலும் மூன்றாவது, நான்காவது என்று தீநுண்மித் தொற்றின் புதிய உருமாற்றங்கள் உருவாகி அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. கொவைட் 19 உருவான இடமென்று கருதப்படும் சீனாவின் வூஹான் நகரிலும் பரவலாக நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது என்கிற தகவல், மருத்துவ உலகத்தையே உலுக்கி இருக்கிறது.

சர்வதேச அளவில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் கவலையளிக்கும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் வாராந்திர சராசரி பாதிப்பு எண்ணிக்கை 40,000 அளவில் உயர்ந்திருக்கிறது. சில மாநிலங்களில் தினசரி பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, கேரளம் கவலையளிக்கும் விதத்தில் கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பால் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாகக் கேரள அரசு அறிவித்திருக்கும் சில விதிமுறைகள் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பையும், விமர்சனத்தையும் எழுப்பி இருக்கின்றன. கடைகளுக்கோ, பொது இடங்களுக்கோ செல்லும்போது மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழோ, ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழோ கொண்டு செல்ல வேண்டும் என்கிற அறிவிப்பு அனைவரையும் ஆத்திரப்படுத்தி இருக்கிறது.

கடந்த மே மாதம் முதல், முழு பொது முடக்கம் இல்லை என்றாலும், தளர்வுகள் முழுமையாக அகற்றப்படவில்லை. நடுவில் பக்ரீத் பெருநாளுக்காக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் விளைவுதான், இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு கேரளத்தில் நோய்த்தொற்றுப் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. விரைவிலேயே ஓணம் பண்டிகை வர இருக்கும் நிலையில் வர்த்தகர்கள் தளர்வுகளை எதிர்பார்க்கக் கூடும். அதற்காகத்தான் அரசு முன்கூட்டியே சில விதிமுறைகளை அறிவித்திருக்கிறது என்று தோன்றுகிறது. கேரள அரசு கடுமையான நிபந்தனைகளை விதிக்க முற்பட்டிருப்பதில் வியப்பில்லை. தேசிய அளவிலான கொள்ளை நோய்த்தொற்று அதிகரிப்புக்கு முக்கியமான காரணமாக இருப்பதே கேரளம்தான். கடந்த சில வாரங்களாக, தினசரி புதிய பாதிப்புகள் சுமார் 20,000 என்கிற அளவில் இருக்கும்போது, இதுபோன்று விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதில் நியாயம் இருக்கிறது. தொழிலாளர் சங்கங்களும், வர்த்தக நிறுவனங்களும் பொது முடக்கம் அறிவிப்பதற்கு எதிராக இருக்கும் நிலையில், இதுபோன்ற முடிவுகளை எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.

தடுப்பூசி போடுதல், பரிசோதனை மேற்கொள்ளுதல், குறைவான மரண விகிதம், நோயாளிகளைக் கண்டறிதல், முகக் கவசம் அணிதல் போன்ற எல்லா அடிப்படை முன்னேற்பாடுகளிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது கேரளம். அந்த மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பும் சரி, மருத்துவமனை வசதிகளும் சரி, ஏனைய எல்லா இந்திய மாநிலங்களை விடவும் சிறப்பாக இருக்கின்றன. அப்படி இருந்தும் நோய்த்தொற்றின் பரவல் கட்டுக்குள் வராமல் அதிகரித்து வருகிறது எனும்போது, மூன்றாம் அலை தொடங்கினால் ஏனைய பகுதிகளில் நிலைமை என்னவாகும் என்கிற அச்சம் எழுகிறது.

கேரளத்தில் இதுவரை 43% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விகிதம் 18%தான். அதனால், மக்கள்தொகையில் 57% பேர் பாதிப்புக்கு உள்ளாகும் சாத்தியம் காணப்படுகிறது.

இரண்டாவது அலையை எதிர்கொள்வதில் ஏனைய எல்லா மாநிலங்களை விடவும் கேரளம் மிகவும் திறமையாக செயல்பட்டது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல், நோயாளிகள் மருத்துவமனைகளில் வரிசையில் காத்திருப்பது இல்லாமல், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தவிக்காமல் இரண்டாவது அலையின்போது கேரளம் சிறப்பாக செயல்பட்டதை அனைவருமே பாராட்டினார்கள். பிறகும் ஏன் நோய்த்தொற்றுப் பரவல் இப்போது அதிகரிக்கிறது என்பதற்கு சரியான காரணம் சொல்ல முடியவில்லை. சோதனையில் 10%-க்கும் அதிகமான பாதிப்புகள் காணப்படும் மாவட்டங்களில் கூட்டம் கூடுவதையும், மக்கள் வெளியில் செல்வதைக் கட்டுப்படுத்துவதன் மூலமும்தான் நோய்த்தொற்று பரவாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று மத்திய சுகாதாரத் துறை செயலர் மாநிலங்களை அறிவுறுத்தி இருக்கிறார். கேரளம் மட்டுமல்லாமல், மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, ஒடிஸா, அஸ்ஸாம், மிúஸாரம், மேகாலயம், ஆந்திரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் டிபிஆர் எனப்படும் சோதனை பாதிப்பு விகிதம் அதிகமாகக் காணப்படுகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வுப்படி, 46 மாவட்டங்களில் டிபிஆர் 10%-க்கும் அதிகமாகவும், 53 மாவட்டங்களில் 5% முதல் 10% அளவிலும் காணப்படுகிறது. தேசிய அளவிலான டிபிஆர் 5%. முறையான கண்காணிப்பும், கட்டுப்பாடும் இல்லாவிட்டால், திடீரென பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் நிறையவே இருக்கிறது.

மிக எளிதிலும், விரைவாகவும் பரவும் கொவைட் 19-இன் டெல்டா உருமாற்றத் தீநுண்மியின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எதிர்ப்பு சக்தி குறையும்போது டெல்டா உருமாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பு எப்படி இருக்கும் என்று இப்போதே கணிக்க முடியவில்லை. பக்கத்து வீடு பற்றி எரியும்போது நாம் நிம்மதியாக இருந்துவிட முடியாது. அதனால், கவனமாகவே இருப்போம். எதற்கும் தயாராகவே இருப்போம்!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews