பிளஸ் 2 ஆல்- பாஸ் திட்டத்தால் தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 19, 2021

Comments:0

பிளஸ் 2 ஆல்- பாஸ் திட்டத்தால் தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

பிளஸ் 2 ஆல்- பாஸ் திட்டத்தால் தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

கரோனா ஊரடங்கால் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இவ்வாண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்கிறது. ஆன்லைனில் பாடமெடுத்தல், தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. தொடர் விடுமுறையாலும் கரோனா 2-வது அலை அச்சம் காரணமாகவும் பிளஸ் 2-க்கு ஆல்- பாஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, பத்தாம் வகுப்புத் தேர்வில் 50%, பிளஸ் 1 தேர்வில் 20 சதவீதம் மற்றும் பிளஸ்2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என, 100 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, தேர்ச்சி அறிவிக்கப் பட்டது. 12-ம் வகுப்பில், வகுப்புகளுக்கு வராத 1,656 மாணவர்கள் தவிர, 8,16,473 மாணவர்களும், 4,35,973 மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 60 சதவீதத்திற்கு அதிகமானோர் கலை, அறிவியல் கல்லூரி களில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர். தமிழகத்திலுள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் கடந்த ஆண்டைவிட, இவ்வாண்டு கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன எனக் கலை, அறிவியல் கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஏறக்குறைய முடியும் நிலையில், அரசுக் கல்லூரிகளில் இன்னும், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கவில்லை. ஓரிரு நாட்களில் தொடங்கும் என அரசுக் கல்லூரி முதல்வர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்துக் கல்லூரிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ’’கடந்த ஆண்டுகளைவிட, இவ்வாண்டு பிளஸ் 2 ஆல் பாஸ் திட்டத்தால் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. பொறியியல், பிற கல்லூரிகளில் சேருவதைவிட ஏதாவது கலை, அறிவியல் கல்லூரிகளில் டிகிரி படிக்கலாம் என்ற மனநிலையால் மதுரை மண்டலத்திலுள்ள 26 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. அரசுக் கல்லூரிகளில் ஒரு வகுப்புக்கு 40-50 மாணவர்கள் என்ற எண்ணிக்கை விகித்திற்கு 300-க்கும் மேற்பட்டோரும் , சிறுபான்மைக் கல்லூரிகளில் 60 பேருக்கு 500 பேரும் போட்டியில் உள்ளனர். எல்லாக் கல்லூரிகளிலும் வழக்கம்போல் பி.காம்., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ. ஆங்கிலம் போன்ற பாடப்பிரிவுகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

பெரும்பாலான கல்லூரிகளில் இரண்டாவது ஷிஃப்டிலும், பிகாம், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலப் பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுவதால் அவற்றில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர். குறிப்பாக மருந்து விற்பனைப் பிரதிநிதி, மொழிபெயர்ப்பு, தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணி வாய்ப்பால் ஆங்கிலப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து பெற்றோரும் சேர்க்கின்றனர். கரோனா அச்சத்தால் நடப்புக் கல்வியாண்டிலும் ஆன்லைன் வகுப்பே நீடிக்கலாம்’’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews