கல்வி வளர்ச்சி நாளில் தணியுமா குழந்தைகளின் கல்விப்பசி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 12, 2021

Comments:0

கல்வி வளர்ச்சி நாளில் தணியுமா குழந்தைகளின் கல்விப்பசி?

தேசிய புள்ளியியல் அலுவலகம் 2017-18 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட குடிமக்களின் சமூக நுகர்வு குறித்த தேசிய மாதிரி ஆய்வு, தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் 11.6%, நகர்ப்புறங்களில் 24.7% என ஆக மொத்தம் 18.1% வீடுகளிலும் மட்டுமே கணினிகள் உள்ளன. அதேபோன்று கிராமப்புறங்களில் 14.4%, நகர்ப்புறங்களில் 24.8% என மொத்தம் 19.6% வீடுகளில் மட்டுமே இணையதள வசதிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக 27% ஊரக மற்றும் நகர்ப்புற 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே முறையே கணினி, இணைய வசதிகளைப் பயன்படுத்தி வருவது தெரிகிறது.

இதுதவிர, தமிழ்நாடு உள்ளிட்ட 23 மாநிலங்களில் கொரோனா காலத்தில் கடந்த ஏப்ரல் 2020 இல் ஆய்வு மேற்கொண்ட ஸ்மைல் பவுண்டேசன் இந்தியா என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம், 56% மாணவர்களிடம் அறிதிறன் பேசி இல்லாத காரணத்தால் இணைய வழிக்கல்வி பெற முடியாத நிலை உள்ளதாகத் தெரிவிக்கிகிறது. இந்த உண்மையை புரிந்து கொண்டு கடந்த ஆட்சியில் தொலைக்காட்சி வாயிலாகக் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கல்வி நிகழ்ச்சிகள் பல்வேறு திட்டமிடல்கள் மூலம் வழங்கப்பட்டு வருவது அறிந்ததே. இதற்கான காணொலி பாடத்திட்டம் உருவாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை, மாநில, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் போன்றவை கடும் முயற்சி மேற்கொண்டு பெருந்தொற்றுக் காலத்திலும் இருபால் ஆசிரியர்களின் பங்களிப்புகள் அளப்பரியவை. எளிமை, இனிமை, புதுமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இக்காணொலிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பு.

எனினும், ஏழை, எளிய, விளிம்பு நிலையில் காணப்படும் பள்ளிக் குழந்தைகளிடம் இவை போதுமான தாக்கத்தை ஏற்படுத்தாதது வருத்தத்தைத் தருகிறது. வயிற்றுப் பிழைப்புக்காக குடும்பத்துடன் விவசாய வேலைகள், கால்நடை மேய்த்தல், மீன்பிடித்தல், கட்டிட வேலைகள் முதலானவற்றிற்காக செல்வது இக்காலத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கற்றலில் சராசரி மற்றும் அதற்கு கீழேயுள்ள மாணவ மாணவியரிடையே இத்தகைய நோக்கும் போக்கும் மிகுதியாகக் காணப்படுகிறது. நன்கு படிக்கும் மாணவர்களிடம் மட்டுமே கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஓரளவிற்கு சென்று சேருகின்றன.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே, தமிழ்நாடு முதலமைச்சருக்கான பொருளாதார வல்லுநர் குழுவினரின் ஜூலை 10 அன்று கூட்டிய முதல் காணொலிக் கூட்டத்தில் மேனாள் RBI ஆளுநர் அவர்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடுசெய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது நெருக்கடியான காலகட்டத்தில் நாடு இருந்தாலும் அதிகம் பாதிக்கப்பட்ட இனமாக மாணவ சமுதாயம் உள்ளது. கல்வி கிடைக்காமல் குடும்ப வறுமையைப் போக்க மீண்டும் குழந்தைத் தொழிலாளர்களாக உருவெடுக்க அவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர். மேலும், இணையவழிக் கல்வி நடைமுறையில் மாணவச் சமூகத்தினரிடையே ஒருவித சமச்சீரற்ற நிலையைத் தோற்றுவித்ததன் காரணமாகவே, பல்வேறு விரும்பத்தகாத வேதனை மிகுந்த நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. தொலைக்காட்சி வழிக் கல்வி ஓரளவிற்கு அனைத்து வகை மாணவர்களுக்கும் உரியதாக உள்ளதை மறுப்பதற்கில்லை.

எனவே, செயற்கைகோள் மூலம் இயங்கும் கல்விக்கான அலைவரிசைகளை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் அவற்றிற்குரிய இணையத்திறனை அதிகரிப்பதுடன், தனியார் தொலைக்காட்சிகளிலும் தங்குதடையின்றி மாணவர்கள் தம் கற்றலை மேம்படுத்திக் கொள்ள கற்பித்தலுக்கான நேரத்தைப் போதிய வகையில் கட்டாயம் ஒதுக்கித் தர ஒன்றிய, மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டியது இன்றியமையாதது. எதிர்வரும் ஜூலை 15 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடும் வழக்கம் இருந்து வருகிறது. அந்நன்னாளை மேலும் மெருகேற்றும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கல்வியைக் கசடற மட்டுமல்லாமல் தடையறக் கற்க தமிழ்நாடு அரசு இணைய வசதியுடன் கூடிய எளிய கைக்கணினியை வழங்கி உதவிடுதல் வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தொலைக்காட்சி வழிக் கல்வியை தக்க செய்தி வழியாகக் கற்கவும் கற்றலில் ஏற்படும் சிக்கல்களுக்கு தத்தம் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் உரையாடல் துணைக்கொண்டு தீர்வு காணவும் வழியேற்படும். பள்ளிக்கல்வித்துறை பள்ளிப் பிள்ளைகளின் கல்விப் பசியைப் போக்குமா?

முனைவர் மணி கணேசன்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews