மாணவர்களுக்கு ரூ.1,000 ரூபாய், பெற்றோருக்கு 10 ஆயிரம் ரூபாய்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 02, 2021

Comments:0

மாணவர்களுக்கு ரூ.1,000 ரூபாய், பெற்றோருக்கு 10 ஆயிரம் ரூபாய்!

மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களின் பெயர்களில் ரூ.1,000 வைப்புத்தொகை, குலுக்கலில் பெற்றோருக்கு ரூ.10,000 ஆயிரம் ஊக்க தொகை என தஞ்சையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்று அசத்தி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை, 55 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் வளர்ச்சிக்கு, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், முன்னாள் மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் இணைந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

தற்போது, 2021-2022 புதிய கல்வியாண்டில், மாணவர்கள் சேர்க்கை தொடங்கி உள்ளது, இதனையடுத்து முன்னாள் மாணவர்கள் 10 பேரும், தலைமையாசிரியர் சரவணனுடன் இணைந்து, புதிதாக சேரும் மாணவர்களுக்கு பரிசுகளும், சலுகைகளும் வழங்கி அரசு பள்ளியில் தங்களின் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.

அதற்காக இந்த கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களின் பெயரில், அஞ்சலகத்தில் ஆயிரம் ரூபாய் வைப்புதொகை வைத்தும், பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குலுக்கல் முறையில் 10 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்குவதாக அறிவித்தனர்.அதன்படி சேர்க்கை துவங்கிய சில தினங்களில் 14 மாணவர்கள் பள்ளியில் தற்போது சேர்ந்துள்ளனர். அவர்களின் பெயர்களில், அஞ்சலகத்தில் துவங்கிய கணக்கு புத்தகத்தை பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஜான்பாக்கியம் செல்வம், தலைமையாசிரியர் சரவணன் மற்றும் கிராம மக்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர். இதுகுறித்து தலைமையாசிரியர் சரவணன் கூறுகையில், 'பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மன அமைதிக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் மரங்களும், சேதபக்தியையும், பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளும் விதமாக தலைவர்கள், அறிஞர்கள் படங்கள், அவர்கள் கூறிய கருத்துகள், பொது அறிவுகள் சுவர் முழுவதும் எழுதப்பட்டுள்ளது.

தனியார் பள்ளியை நோக்கி செல்லுகிறவர்களின் கவனத்தை அரசு பள்ளியின் பக்கம் திரும்ப வேண்டும் என, பள்ளியின் முன்னாள் மாணவர் வை.கோவிந்தராசு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தார். நானும் எனது பங்குக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளேன். மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என பள்ளியில் புதிதாக சேரும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பெயரில் தலா 1,000 ரூபாய் வீதம் அஞ்சலகத்தில் வைப்பு வைக்கப்படும். மேலும் கற்றலுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அத்துடன் புதிதாக சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து முதலிடம் பெறும் நபருக்கு 10 ஆயிரம், இரண்டாம் இடம் பெறும் நபருக்கு 5 ஆயிரம், மூன்றாமிடம் பெறும் நபருக்கு 2,500 ரூபாய் ஊக்கதொகை வழங்கப்பட உள்ளது. தொலைத்தூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு வாகன வசதி, 10-ம் வகுப்பு பொது தேர்வில், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசும், 450க்கு மேல் மதிப்பெண் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் 11-ம் வகுப்பில் சேருவதற்கான கல்வி செலவும் வழங்கப்பட உள்ளது' என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews