அமைச்ச்கங்கள், துறைகளின் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு,க.ஸ்டாலின் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 06, 2021

Comments:0

அமைச்ச்கங்கள், துறைகளின் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு,க.ஸ்டாலின் விளக்கம்

தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம் ‘நீர்வளத் துறை’ என்று அழைக்கப்படும். இத்துறை தமிழகத்தில் தங்குதடையின்றி உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிப்பதற்கும் அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் முக்கியத் துறையாகச் செயல்படும். மற்றத் துறைகளை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக இது இருக்கும். வேளாண்மைத் துறை என்கிற அமைச்சகம் ‘வேளாண்மை - உழவர் நலத்துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அரசின் நோக்கம் சாகுபடியைப் பெருக்குவது மட்டும் அல்ல, நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி நெற்கதிர்களை அறுவடை செய்யும் உழவர்களுடைய நலன்களையும் பேணிக் காப்பது .
சுற்றுச்சூழல் துறை என்பத்ய் ‘சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை’ என்று பெயர்மாற்றம் செய்யப்படுகிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளையும், ஆயத்த நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பரப்புரைகளையும், கட்டமைப்புகளையும் இந்த அமைச்சகம் செய்யும் மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதாலும், சுகாதாரம் என்பது துப்புரவை மட்டுமே குறிப்பது என்பதாலும் அத்துறைக்குப் பரந்துபட்ட நோக்கத்தில் ‘மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை’ என்று பெயர் சூட்டப்படுகிறது.
மீனவர்கள் நலமில்லாமல் மீன்வளத்தைப் பெருக்கி பயனில்லை என்பதாலும், மீனவர்களுடைய நல வாழ்விற்கான திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையாலும் மீன்வளத்துறை ‘மீன்வளம் - மீனவர் நலத் துறை’ என்று அழைக்கப்படுகிறது.
தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் காலப்போக்கில் மாறி இன்று திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே அத்துறை ‘தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது. சமூக நலத்துறை என்பது பெண்களுக்கு உரிமை வழங்குகிற பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய துறை. எனவே அதைக் குறிக்கும் பொருட்டும், அந்தத் திக்கில் செயல்படும் பொருட்டும் திட்டங்களைத் தீட்டும் நோக்கத்திலும் ‘சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை’ என்று வழங்கப்படவுள்ளது.
பணியாளர் என்கிற பதம் இன்று மேலாண் வட்டத்தில் அவர்களைப் பாரமாகக் கருதும் போக்கைச் சுட்டிக்காட்டுவதால் மனித வளமாகவே மதிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ‘மனித வள மேலாண்மைத் துறை’ என்று அழைக்கப்பட உள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews