குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றால், காய்ச்சல், உடம்புவலி மட்டுமல்லாமல் வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகிய அறிகுறிகள் ஏற்படும். உங்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சந்தேகம் வந்தால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.
கொரோனா இரண்டாவது அலையில் குழந்தைகளுக்கும் கொரோனா தொற்றிக்கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னால் நடிகை சமீரா ரெட்டி தன் இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ``பையனுக்கு 5 வயது, பெண்ணுக்கு 2 வயது. நன்றாக இருந்த குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
கூடவே குழந்தைகள் சோர்வாகவும் இருந்தார்கள். டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் இருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. முதலில் பயந்துவிட்டேன். அதன்பிறகு டாக்டர் சொன்னபடி சிகிச்சை அளிக்கப்பட்டது. கூடவே சத்தான உணவுகளையும் கொடுத்தேன். தைரியமும் என்னுடைய பாசிட்டிவ் அணுகுமுறையும்தான் என்னையும் என் குழந்தைகளையும் கொரோனாவில் இருந்து மீட்டது’’ என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
குழந்தைகளுக்கு கொரோனா வருவது தொடர்பாக, குழந்தைகள் நல மருத்துவரும் குழந்தைகள் குடல்நல மருத்துவருமான தனசேகர் கேசவலுவிடம் பேசினோம்.
``கொரோனா முதல் அலையின்போது குழந்தைகள் பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை. ஆனால், இந்த இரண்டாவது அலையில் குழந்தைகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. சென்ற வருடம் முழுக்க மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 குழந்தைகளுக்குத்தான் சிகிச்சை அளித்தேன். ஆனால், இந்த வருடம் கடந்த இரண்டு வாரங்களிலேயே 50 குழந்தைகளுக்குச் சிகிச்சை அளித்துவிட்டேன்.
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றால், காய்ச்சல், உடம்புவலி மட்டுமல்லாமல் வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகிய அறிகுறிகள் ஏற்படும். உங்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சந்தேகம் வந்தால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள். குழந்தைகளுக்கு கொரோனா வராமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் சொல்கிறேன்.
முதல் வழி பிள்ளைகளை வெளியே விடாதீர்கள். -
இரண்டாவது வழி, பெற்றோர்கள் கவனமாக இருப்பது. அதாவது, சென்ற வருடம் இந்நேரம் கிட்டத்தட்ட எல்லோரும் வொர்க் ஃப்ரம் ஹோமில் இருந்தார்கள். ஆனால், இந்த வருடம் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். வெளியில் சென்றுவிட்டு வருபவர்கள் குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழையுங்கள்.
குளியலறை வீட்டுக்குள் இருக்கிறது என்றால், குளித்த பிறகு குழந்தைகளைத் தொடுங்கள். கைகளில் சானிடைசர் அப்ளை செய்திருக்கிறேன். அதனால் பிள்ளைகளைத் தொடலாம் என்று நினைக்காதீர்கள். வெளியில் சென்றபோது அணிந்திருந்த மாஸ்க்கைகூட கழற்றாமல் பிள்ளைகளைத் தூக்குவது, கொஞ்சுவது என்று இருந்தீர்களென்றால், நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்குக் காரணமாக இருந்துவிடுவீர்கள், கவனம்.
இதைத் தவிர, வெளியில் சென்றபோது அணிந்திருந்த உங்கள் உடைகளை கிருமிநாசினியும் கல் உப்பும் கலந்த தண்ணீரில் ஊறவைத்துத் துவைத்துவிடுங்கள். இந்தத் துணிகளைத் தொடுவதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு கொரோனா பரவாது.
மே ஒன்றாம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது அரசாங்கம். தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். லண்டன் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் தற்போது அங்கு கொரோனா தொற்றாளர்கள் ஐ.சி.யு வரை செல்லாமல் இருக்கிறார்கள்.
முன்னெச்சரிக்கையாக இருங்கள். நடந்த பிறகு, வருத்தப்படாதீர்கள். இது மூன்றாவது வழி.
மற்றபடி, குழந்தைகளுக்கு வழக்கம்போல ஆரோக்கியமான உணவுகளைக் கொடுங்கள். காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் கொடுங்கள். பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்கிறார் டாக்டர் தனசேகர் கேசவலு.
Search This Blog
Thursday, May 06, 2021
Comments:0
`குழந்தைகளைத் தொற்றும் கொரோனா... தடுக்கும் 3 வழிகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.