மாநிலப் பட்டியலுக்குத் திரும்புமா கல்வி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 24, 2021

Comments:0

மாநிலப் பட்டியலுக்குத் திரும்புமா கல்வி?

அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. புதிய தேசியக் கல்விக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்த கல்வியாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையைக் கடந்த ஆண்டு தமிழக முதல்வரிடம் முன்வைத்தார்கள். சாத்தியமா? அப்படியே சாத்தியமானாலும் அதனால் தற்போதைய நிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது?
2 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் இணைப்புப் பாடம் கற்பித்தல் ஒளிபரப்பு தொடக்கம்: மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது
மாநிலப் பட்டியலில் கல்வி இடம்பெற்றிருந்தபோது என்ன நடந்தது என்பதையும் பார்த்துவிடுவோம். ஒன்றிய-மாநில அரசுகளின் உறவு குறித்த ராஜமன்னார் குழு அறிக்கையின் மீதும் அது தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிக்கை மீதும் சட்ட மேலவையில் நடந்த விவாதத்தின்போது ம.பொ.சிவஞானம் முன்வைத்த கேள்விகளுள் இதுவும் ஒன்று: ‘ஆக்ரா பல்கலைக்கழகம் மத்திய அரசிடம் இருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகமும் அதனிடமே இருக்கிறது. டெல்லியில் ஒரு கல்வி அமைச்சகத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகச் சில பல்கலைக்கழகங்களை அரசு எடுத்துக்கொள்ள வேண்டுமா? மத்திய அரசிடம் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளை மாநில அரசுகள் நடத்த முடியாதா? ஆரம்பக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டிருக்கிற ஒரு மாநிலத்தில், ஒரே ஒரு கல்வி மந்திரிதான் இருக்கிறார். ஆனால், மத்தியிலோ ஒரு ஸ்டேட் மந்திரி; ஒரு டெபுடி மந்திரி. இத்தனை பேர் அங்கு தேவைதானா?’ கண்டுகொள்ளப்படாத கல்வி
மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து வகைவகையாகப் பரிந்துரைகளை அளித்த ராஜமன்னார் குழுவின் அறிக்கையில், கல்வித் துறை குறித்துக் கவனம் காட்டப்படவில்லை. சரி, அது கல்வி மாநிலப் பட்டியலில் இருந்த காலம் என்று விட்டுவிடலாம். கல்வி பொதுப் பட்டியலுக்கு மாறிய பின்பு ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைகளிலும்கூட கல்வித் துறைக்கு முக்கியக் கவனம் கொடுக்கப்படவில்லை. 1976-ல் நெருக்கடி நிலையின்போது அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 42-வது திருத்தத்தின்படியே கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாறியது. கல்வியுடன் வனம் மற்றும் வன விலங்குகள், பறவைகள் பாதுகாப்பும் பொதுப் பட்டியலுக்கு மாறின. வனங்கள் குறித்து தமது அறிக்கையில் தனி அத்தியாயம் ஒதுக்கிய சர்க்காரியா ஆணையம் கல்வித் துறையைக் கண்டுகொள்ளாதது ஆச்சரியம்தான். இத்தனைக்கும் மாநில அரசுகளுக்கு அந்த ஆணையம் அனுப்பிவைத்த கேள்விகளில் கல்வித் துறையைப் பற்றிய ஐந்து வினாக்களும் அடங்கியிருந்தன. கல்வித் துறை சார்ந்து ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை மேம்படுத்த மாநில அரசின் தரப்பில் என்னென்ன யோசனைகளை முன்வைக்கிறீர்கள் என்ற சர்க்காரியா ஆணையத்தின் கேள்விக்கு நேரடி பதிலைத் தவிர்த்தது தமிழ்நாடு அரசின் பதிலறிக்கை. அதற்குப் பதிலாக 42-வது திருத்தத்தின் முன்னும் பின்னும் கல்வித் துறையில் ஏற்பட்ட மாற்றங்களைப் பட்டியலிட்டது. மாற்றங்கள் என்னென்ன?
ஒன்றிய அரசின் பட்டியலில் 63 முதல் 66 வரையிலான இடுகைகள் இன்றும் அதே நிலையில் தொடர்கின்றன. அதன்படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், காவல் துறை சிறப்புப் பயிற்சிகள் மற்றும் உயர் கல்வியை ஒருங்கிணைத்தல் ஆகியவை ஒன்றியப் பட்டியலிலேயே தொடர்கின்றன. மாநில அரசின் பட்டியலில் இடம்பெற்றிருந்த 11-வது இடுகை நீக்கப்பட்டுப் பொதுப் பட்டியலில் சேர்ந்துகொண்டது. தொழிலாளர்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சி எப்போதும்போல இடுகை 25-ன்படி பொதுப் பட்டியலில்தான் நீடிக்கிறது.
அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் இலவச நீட் பயிற்சி: மீண்டும் தொடர பள்ளிக்கல்வித் துறை திட்டம்
மாநிலப் பட்டியலின் 11-வது இடுகையில் கல்வி இடம்பெற்றிருந்தபோதே அது ஒன்றிய அரசின் பட்டியலுக்குக் கட்டுப்பட்டுத்தான் இருந்தது என்பது தமிழக அரசின் வாதம். மாநில அரசின் தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகங்கள் ஆகியவை ஒன்றிய அரசின் இடுகைகள் 63-66 ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டவை. ஒன்றியப் பட்டியலின் இடுகை 66-ன்படி உயர் கல்வியை ஒருங்கிணைப்பதற்கான அதிகாரமானது மாநில அரசுகளை இணங்குவிப்பதற்கான அதிகாரமாகவும் இருந்தது. கல்வித் திட்டங்கள் அனைத்தும் பொதுப் பட்டியலில் இருந்த சமூக, பொருளாதாரத் திட்டமிடலுக்கு உட்பட்டதே. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1919-ல் இரட்டை ஆட்சியின் கீழும் 1935-ம் ஆண்டு சட்டத்தின் கீழும் கல்வித் துறையில் மாகாண அரசுகளுக்குக் கிடைத்த அதிகாரங்களும் சுதந்திர இந்தியாவின் அரசமைப்பில் குறைக்கப்பட்ட நிலையைத் தெளிவாகவே தனது பதிலறிக்கையில் தமிழக அரசு சுட்டிக்காட்டியிருந்தது. ஐந்தாண்டுத் திட்டங்களின் நிதி ஒதுக்கீடுகள், மத்திய அரசின் மானியங்கள் தவிர மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்ததால் கல்வி மாநில அரசின் பட்டியலில் இருந்தாலும் 1967 வரையில் அது பொதுப் பட்டியலில் இருந்ததைப் போலத்தான் நிர்வகிக்கப்பட்டுவந்தது என்பதே தமிழக அரசின் அனல் வீசும் பதில். காமராஜரின் சாமர்த்தியம்
மாநிலப் பட்டியலில் கல்வி இடம்பெற்றிருந்தபோதே அது ஒன்றிய அரசின் முழுமையான கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும்தான் இருந்தது. தவிர, நிதியாதாரங்களுக்காக ஒன்றிய அரசின் கருணையையும் எதிர்நோக்கிக் காத்திருந்தது. காமராஜரின் ஆட்சிக் காலத்தில் அன்றைய சென்னை மாநிலத்தின் பொதுக் கல்வி இயக்குநராகப் பொறுப்பு வகித்த நெ.து.சுந்தரவடிவேலுவின் ‘நினைவு அலைகள்’ அக்கால நிலையைத் தெளிவாக எடுத்துச்சொல்கிறது.
2 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் இணைப்புப் பாடம் கற்பித்தல் ஒளிபரப்பு தொடக்கம்: மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது
டெல்லியில் நடந்த அனைத்திந்திய பொதுக் கல்வி இயக்குநர்களின் கூட்டம் ஒன்றை நினைவுகூர்ந்துள்ளார் நெ.து.சு. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கல்விக்கான நிதித் தேவையை விவாதிப்பதற்கான கூட்டம் அது. கல்வியைப் பொறுத்தமட்டில், முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் பெயரளவிலேயே நின்றுவிட்டது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது கல்வித் துறைக்கு ரூ.1,000 கோடி அளவில் கேட்கப்பட்டது, ஆனால் கிடைத்தது ரூ.350 கோடி மட்டுமே என்று கூறியிருக்கிறார் நெ.து.சு. கல்வித் துறைச் செலவுகள் ஐந்தாண்டுத் திட்டத்தின் பகுதியாக இருந்ததால், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடியாத நிலையை அப்போது தமிழ்நாடு அரசு எதிர்கொண்டிருக்கிறது. காமராஜரின் தேர்ந்த அரசியல் சாமர்த்தியங்களால் அந்தத் திட்டம் பல கட்டங்களாக நிறைவேற்றப்பட்டது. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்தி, தகுதியான ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, பள்ளிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினார் காமராஜர். பட்டியல் என்னும் மாயை
ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் ஏழாவது அட்டவணையின்படி தத்தமது அதிகாரங்களுக்கு உட்பட்ட வகையினங்களுக்குச் சட்டம் இயற்றிக்கொள்ளலாம் என்கிறது கூறு 246. ஆனால், அடுத்தடுத்து வரும் கூறுகள் அதற்கு விதிவிலக்குகளாகவே அமைந்துள்ளன. கூறு 249-ன்படி, நாட்டின் நலன் கருதி மாநிலங்களவையில் வருகை தந்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாநிலப் பட்டியலில் உள்ள எந்தவொரு இடுகை குறித்தும் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசு பெற்றுள்ளது. கூறு 250-ன்படி, நெருக்கடி நிலைக் காலத்தில் மாநிலப் பட்டியலில் அடங்கியுள்ள இடுகைகள் குறித்துச் சட்டம் இயற்றிக்கொள்ளவும் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. இவை இரண்டும் கால வரம்புக்குட்பட்ட தற்காலிக ஏற்பாடுகள் மட்டுமே. என்றாலும், இத்தகைய சட்டங்கள் மாநில சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்களுடன் முரண்பட்டால், நாடாளுமன்றச் சட்டங்களே மேலோங்கி நிற்கும் என்கிறது கூறு 251. மாநிலப் பட்டியல் என்பதே ஒரு மாயை. அரசியல் சட்டத்தை மிகவும் மேலோட்டமாகப் படித்தாலே புரிந்துவிடக் கூடிய உண்மை அது. ஆனாலும், ஒரு மாநிலம் தனது குறைந்தபட்ச அதிகாரங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான தற்காலிக வாய்ப்பை ஏழாவது அட்டவணைதான் வழங்குகிறது.
அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் இலவச நீட் பயிற்சி: மீண்டும் தொடர பள்ளிக்கல்வித் துறை திட்டம்
கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை. ஆனால், கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவந்து விடுவதாலேயே மாற்றங்கள் நடந்துவிடும் என்று நம்புவதற்கில்லை. மாநிலக் கல்விக் கொள்கைக்கான குரல்களும் தமிழகக் கல்வியாளர்களிடம் வலுத்துவருகிறது. கொள்கையானது சட்டங்களாகவும் விதிமுறைகளாகவும் அரசாணைகளாகவும் வடிவம் பெற வேண்டும். சட்டம் இயற்றும் நிலையில், முரண்பாடுகள் எழுந்தால் ஒன்றிய அரசின் அதிகாரமே மேலோங்கி நிற்கும். எனவே, அடையாளரீதியான மற்றுமொரு வலுவான எதிர்ப்பு என்பதே இந்தக் குரல்களின் முக்கியத்துவம்.
- செல்வ புவியரசன், puviyarasan.s@hindutamil.co.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews