இனிதான் கவனம் தேவை! | கரோனா நோய்த்தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை குறித்த தலையங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 07, 2021

Comments:0

இனிதான் கவனம் தேவை! | கரோனா நோய்த்தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை குறித்த தலையங்கம்

தமிழகத்தின் 16-ஆவது சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. சுமார் 72% அளவிலான தமிழக சராசரி வாக்குப்பதிவு கணிசமானதுதான் என்பதை மறுப்பதற்கில்லை. மீதமுள்ள சுமார் 28% வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவில்லை என்பது வேதனையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. மொத்த வாக்காளர்களில் கால் பங்குக்கும் அதிகமானோர் வாக்களிக்காமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். இயலாமை காரணமாக இருந்தால் ஏற்புடையது. களத்தில் இருக்கும் எந்த வேட்பாளர்களையும் ஏற்றுக்கொள்ள மனமில்லாததும், போட்டியிடும் அரசியல் கட்சிகள் மீதான அவநம்பிக்கையும்தான் காரணமென்றால், அது ஜனநாயகக் குறைபாடு. கொள்ளை நோய்த்தொற்று குறித்த அச்சமும், வெயிலின் வெப்பம் காரணமாகவும், வாக்களிப்பதற்கு மெனக்கெடத் தயாராக இல்லாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. கொள்ளை நோய்த்தொற்று கடந்த ஆண்டைவிட அதிவேகமாகப் பரவி வருகிறது. உலக அளவில் 13.23 கோடி பேர் இதுவரை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். நோய்த்தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை இந்தியாவிலும் மிக மோசமாக இருக்கிறது. இந்தியாவில் நேற்றைய காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 96,982 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு தெரிய வந்திருக்கிறது. இதுவரை 1,68,06,049 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,05,547. மார்ச் முதல் வாரத்தில் 3,000 பேருக்கு தொற்று என்றால், இப்போது அதுவே ஒன்பது மடங்கு அதிகரித்திருக்கிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. மிக அதிகமான பாதிப்பு மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகியவை என்றால், தமிழ்நாடும் நோய்த்தொற்று பாதிப்பின் பிடியிலிருந்து தப்பவில்லை. இந்தியாவில் இதுவரை 6.3 கோடி பேருக்கும், தமிழ்நாட்டில் 33.35 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தினசரி சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய அரசு ஏப்ரல் 3-ஆம் தேதி தமிழகத்திற்கு மட்டும் 13.16 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பியிருக்கிறது. அதிவேகமாக பரவிவரும் நோய்த்தொற்றை எதிர்கொள்ள, அதைவிட வேகமாக தடுப்பூசி போடப்படுவதை உறுதிப்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. ஆனால், கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலின் தாக்கமும் வேகமும் குறைந்தபாடில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் தமிழ்நாட்டில் நோய்த்தொற்றுப் பரவலின் வேகத்தை கணிசமாக அதிகரித்திருக்கக்கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மாநில அமைச்சராக இருந்த துரைக்கண்ணு, மக்களவை உறுப்பினராக இருந்த எச். வசந்தகுமார், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன், தமாகா துணைத் தலைவர் ஞானதேசிகன், அமமுக பிரமுகர் வெற்றிவேல் உள்ளிட்டோர் இதுவரை கொவைட் 19-க்கு ஆளாகி உயிரிழந்திருக்கிறார்கள். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே ஏற்பட்ட பாதிப்புகள் இவை. மாநில அமைச்சர்களான காமராஜ், கே.பி. அன்பழகன், நிலோபர் கபீல், தங்கமணி, கே.சி. வீரமணி, செல்லூர் ராஜு ஆகியோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள். தேர்தல் பிரசாரத்தின்போது தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே. சுதீஷ், மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் மட்டுமல்லாமல், வேட்பாளர்கள் பலரும் நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள். இவற்றிலிருந்து நோய்த்தொற்றின் கடுமை என்ன என்பதை நாம் சற்று உணர வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் வளர்ச்சி அடைந்த பல மேலை நாடுகள் மிகப் பெரிய பாதிப்பை இரண்டாவது அலை நோய்த்தொற்றில் எதிர்கொள்கின்றன. அப்படியிருக்கும்போது அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் நோய்த்தொற்றுப் பரவலின் பாதிப்பு மிகமிகக் கடுமையாக இருக்கக்கூடும். மத்திய - மாநில அரசுகளின் விரைந்த செயல்பாடு மட்டுமே நோய்த்தொற்றுப் பரவலை தடுத்துவிட முடியாது. தேர்தல் பிரசாரத்தில் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுக்கூட்டங்களை தவிர்த்து பரப்புரைகளை காணொலி மூலம் நடத்தும் துணிச்சலும், பொதுமக்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படக் கூடாது என்கிற அக்கறையும் அரசியல் கட்சிகளுக்கும் இருக்கவில்லை, மக்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வுடன் செயல்படவில்லை. தமிழகம் இன்னொரு பிரச்னையை இப்போது சந்திக்கிறது. நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில் அதை எதிர்கொள்ளப் போதுமான அளவில் நமது மருத்துவமனைகளும், மருத்துவப் பணியாளர்களும் இப்போது தயாராக இல்லை. முடிவுகள் வெளியாவதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்வதால், அமைச்சரவை எந்த முடிவையும் துணிந்து எடுக்க முடியாது. அதிகாரிகளும் தன்னிச்சையாக முடிவெடுக்கத் தயங்குவார்கள். அதிகரித்துவரும் நோயாளிகளை எதிர்கொள்ள முடியாமல் அரசு மருத்துவமனைகள் தடுமாறுகின்றன என்கிற நிஜநிலைமை பயமுறுத்துகிறது. தடுப்பூசி மட்டுமே தீர்வாகாது. மக்கள் விழிப்புணர்வுடனும், பொறுப்புணர்வுடனும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம்தான் கொள்ளை நோய்த்தொற்றின் கோரப்பிடியில் இருந்து தப்ப முடியும்!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews