தந்தை இறந்து விட்டதால் கல்லூரிப் படிப்பை தொடர இயலாமல் தவித்த 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு, திண்டுக்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர், கட்டணம் செலுத்தி கல்லூரியில் படிக்கத் தேவையான உதவியை வீடு தேடிச்சென்று கொடுத்துள்ளார். கொரோனா விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்ட மாணவனுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
திண்டுக்கல் நகரில் போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்திருந்த கொரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பணியில் குளக்காரன் பட்டியை சேர்ந்த ஜெகதீஷ் என்ற இளைஞர் தன்னார்வலராக ஈடுபட்டிருந்தார்.
மிகவும் ஆர்வத்துடன் கொரோனா பரவுதலைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜெகதீஷின் பணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரகாஷ் குமாரைக் கவர்ந்துள்ளது.
இளைஞர் ஜெகதீஷ் அழைத்து எதிர்கால கனவு குறித்து விசாரித்த போது, 12 ஆம் வகுப்பு வரை படித்த தனக்கு கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், தந்தை இறந்து விட்டதால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். அப்போதைக்கு அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர் பிரகாஷ்குமார், ஜெகதீஷுக்கு கல்லூரி கல்வி கிடைப்பதற்கு உதவ எண்ணியுள்ளார்.
இளைஞர் ஜெகதீஷிடம் கூட இது குறித்து தெரிவிக்காமல், தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ சமூகப்பணி என்ற பட்டப்படிப்பில் சேர்வதற்கான 3 வருட கல்விக்கட்டணத்தையும் ஜெகதீஷ் பெயரில் செலுத்திய காவல் ஆய்வாளர் பிரகாஷ் குமார், அது தொடர்பான ரசீதையும் கல்லூரியில் சேர்வதற்கான அனுமதியையும் வாங்கிக் கொண்டு வீடு தேடிச்சென்று வழங்கினார்.
இதுதவிர, ஜெகதீஷின் கல்வி செலவுக்கான தொகையையும் காவல் ஆய்வாளர் பிரகாஷ்குமார் வழங்கினார். தன் மகனின் கல்லூரிக் கனவை நிறைவேற்றிவைத்த காவல் ஆய்வாளருக்கு ஜெகதீஷின் தாய் சாந்தி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டார்.
வாகனங்களை மறிக்கும் வசூல் போலீசுக்கு மத்தியில், போக்குவரத்து காவல்துறையில் பிரகாஷ் போல உதவிக்கரம் நீட்டுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவமே சான்று.