நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் முடிவை எட்டாமல் தேங்கியிருக்கும் சூழலில் அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர்களின் நேர்முகத் தேர்வு முடிந்து 9 மாதங்கள் ஆகியும் முடிவை வெளியிடாமல் இருக்கிறது டி.என்.பி.எஸ்.சி. இதையடுத்து நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் எனவும், தேர்வு முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் விரைந்து அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் மைக்கேல் ஜெரால்டு, “குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் அரசுத் தரப்பிற்காக வாதிடுவதற்காக அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர்களை நியமனம் செய்கின்றனர். இந்தப் பதவிக்கு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து நிரந்தர நியமனம் செய்கின்றனர்.
கடந்த 2018-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 46 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்தது. இதற்காகக் கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த முதல்நிலைத் தேர்வுக்கு, பிப்ரவரி மாதம் முடிவு வெளியானது. தொடர்ந்து மே மாதத்தில் முதன்மைத் தேர்வு நடந்தது. அதன் முடிவுகள் கடந்த நவம்பரில் வெளியானது. மொத்தமுள்ள 46 பணியிடங்களுக்கு 97 பேர் தேர்வாகியிருந்தோம். இதில் 46 பேரைத் தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு ஆகியவை கடந்த டிசம்பர் மாதமே முடிவடைந்துவிட்டது.
அதற்குப் பின்பு, இட ஒதுக்கீடு, இனச்சுழற்சி, மதிப்பெண் அடிப்படையில் தேர்வானவர்களின் விவரங்களை அறிவிக்க வேண்டும். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இதைச் செய்திருக்க முடியும். ஆனால், இதுவரை இதற்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. கீழமை நீதிமன்றங்கள், மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள், குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் தேசிய நீதித்துறை தகவல் தொகுப்பேட்டின்படி 2 கோடியே 44 லட்சத்து 38,925 வழக்குகள் தமிழகத்தில் நிலுவையில் உள்ளன. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 40,330 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குமரி மாவட்டத்தில் 19,509 வழக்குகளும், தமிழகத்தில் குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 2,083 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், சிறப்புக் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், மகிளா, நில அபகரிப்பு, மாஜிஸ்திரேட் அளவிலான விரைவு மற்றும் மொபைல் நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்ட தரப்பில் ஆஜராவது இந்த அரசு வழக்கறிஞர் பணியில் முக்கியமான ஒன்று. இப்படி தமிழகத்தில் சுமார் 410 நீதிமன்றங்கள் உள்ளன. இப்படியான சூழலில் ஏற்கெனவே நீதிமன்றங்களில் நூற்றுக்கும் அதிகமான காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் வெறும் 46 பணியிடங்களுக்கு மட்டும் அறிவிப்பாணை வந்தது. அதுவும் ஒரே வாரத்தில் அறிவிக்க வேண்டிய முடிவுக்காக 9 மாதங்களாகக் காத்திருக்கிறோம்.
கரோனா சூழலில் நீதிமன்றங்கள் திறக்கப்படவில்லை. வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்குள் வழக்கு நடத்தவும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் இன்னும் அதிகளவு வழக்குகளில் தேக்கநிலை ஏற்படும். குற்றவாளிகளின் எண்ணிக்கையும் கூடும். நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்கவும், சமூக நீதி பரவலாக்கப்படவும் உதவி குற்றவியல் வழக்கறிஞர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளைத் தாமதமின்றி விரைந்து அறிவிக்கவேண்டும்”என்றார் அவர்.
இந்நிலையில் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் வழக்கறிஞர்கள் தமிழக அரசு, தமிழ்நாடு பார் கவுன்சில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியோருக்கு விரைந்து முடிவுகளை அறிவிக்கக்கோரி மனு அனுப்பியுள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.