திண்டுக்கல்லை சேர்ந்த கல்வியாளர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் இது பற்றி கூறுவது என்ன...
பள்ளிகளில் சமூக இடைவெளி அவசியம் என்பதே முக்கியமே. இதற்கு ஷிப்ட் முறையில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு பெற்றோர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விடைத்தாள்களை திருத்தும் மையங்களை கூடுதலாக அமைப்பது மிகவும் நல்லது. ஊரடங்கால் பாதித்த நாட்களை சரிசெய்ய, விடுமுறை நாட்களை குறைப்பது, விடுமுறை நாளிலும் ஆன்லைன் வகுப்புகளை தொடர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பள்ளிகளில் தினமும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். 10 வயதுக்கு கீழான மாணவர்களுக்கு நிலைமை சீரடைந்தபின் தாமதமாக வகுப்பு துவங்குவது நல்லது.
சி.துரைராஜ், மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, திண்டுக்கல்
பள்ளி திறப்பது தாமதமானால் மாணவர்களுக்கு கற்றலில் நாட்டமின்மை ஏற்படும். எனவே, தினமலர் நாளிதழில் கூறிய ஆலோசனைகள் வரவேற்க தக்கவையே. சமூக இடைவெளியை பின்பற்றி ஷிப்ட்' முறையில் பள்ளிகளை நடத்துவது அவசியமே. ஒரு ஷிப்ட் முடிந்ததும் வகுப்பறையில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை ரத்து செய்யலாம். விடைத்தாள் திருத்தும் மையங்களை உயர்த்துவதும், ஒரு விடைத்தாள் திருத்தும் மையத்தில் உள்ள ஆசிரியர்கள், கண்காணிப்பாளர் எண்ணிக்கையை குறைப்பதும் நல்லதே.
கே.காசிஆறுமுகம், முதல்வர், விவேகானந்தா வித்யாலயா, ஆயக்குடி
பள்ளிகள் செயல்படுவது குறித்து தினமலர் இதழில் வெளியானது சமூக அக்கறையுள்ள யோசனை. இதில்கூறியதுபோல தேர்வு, விழாக்கால விடுமுறைகளை தவிர்த்து பள்ளிகளை நடத்தலாம். பகுதி நேர வகுப்புகளில் மாணவர்களை ஆசிரியர்கள் நன்கு கண்காணிக்கலாம். தனியார் பள்ளிகளுக்கு பஸ் இயக்குவதில் இரட்டிப்பு செலவு ஏற்படும். எனவே, சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் மூலம் நோய் பரவினால் அதனை கட்டுப்படுத்துவது அரசுக்கு சிரமமாகிவிடும்.
தினமலர் நாளிதழில் வலியுறுத்தப்பட்ட 'ஷிப்ட்' முறை வகுப்பு நல்ல கருத்து. தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் போக்குவரத்து செலவு, அரசு பள்ளிகளுக்கு கூடுதல் பஸ்வசதி தேவைப்படும், என்றாலும் மாணவர் நலனுக்காக இது தவிர்க்க முடியாததே. தேர்வு விடுமுறை, பண்டிகைக்கான விடுமுறை நாட்களை குறைப்பது நல்ல யோசனையே. மாணவரிடையே சமூக இடைவெளி பராமரிக்க வகுப்பறைகளாக விசாலமாக்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு டேபிள், ஒரு சேர் வசதியை ஏற்படுத்த வேண்டும். கொரோனா பாதிப்பு நீங்கும் வரை பிரார்த்தனை, விளையாட்டுக்களை ரத்து செய்துவிடலாம்.
-ப. கோபிகண்ணன், மாணவர், என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, நத்தம்
கொரோனா வைரஸ் ஊரடங்கால், இனி கல்வி நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுமோ என்ற கவலை பெற்றோருக்கு ஏற்படுவது இயல்பே. இந்நிலையில் அதற்கான தீர்வு கிடைத்துள்ளது வரவேற்கத்தக்கது. மாணவர்களிடையே சமூகவிலகல் நடக்குமா என்ற நிலையில், 'ஷிப்ட்' முறை அதற்கு கைகொடுக்கும் என்பது சிறப்பான அம்சமே. இச்சூழலில் குழந்தைகளுக்கான கிண்டர் கார்டன் வகுப்புகளை ரத்து செய்யலாம். பிளஸ்2 மாணவர்கள் கல்லுாரியில் சேர விடைத்தாள் திருத்துவது, தேர்வு முடிவை தாமதமின்றி வெளியிடுவது அவசியம். அதற்கு விடைத்தாள் திருத்தும் மையங்களை அதிகரிப்பதை தவிர வேறுவழியில்லை.
---சே.ஆதவன், மாணவர், பாரத் வித்யா பவன் மெட்ரிக் பள்ளி, பழநி.
சமூக விலகலுக்காக வகுப்புகளை காலை, மாலை என பிரித்து நடத்துவதால் வீட்டில் படிக்க அதிகநேரம் கிடைக்கும். காலையில் பள்ளி ஆரம்பிக்கும் நேரமும், மாலையில் முடிக்கும் நேரமும் ஒரு மணிநேரம் அதிகரித்தால் 5 பாடப்பிரிவுகள் கிடைக்கும். இதனால் பாடங்களை பள்ளியில் படிக்கவும் வசதியாக இருக்கும். வீட்டுப்பாடங்களை அதிகம் செய்யலாம். வீட்டில் திரும்ப திரும்ப படிக்க நேரம் கிடைக்கும். காலை ஷிப்ட் ஆக இருந்தால் தினமும் காலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். மாலை வகுப்பாக இருந்தால் இரவில் அதிக நேரம் படிக்கலாம். கல்வியாண்டை சரிசெய்ய விடுமுறை இல்லாமல் செயல்படுவது முதலில் கடினமாக இருந்தாலும், பின் பழக்கமாகிவிடும்.
கல்வி நிறுவனங்களின் நிலைமை சீராகும் வரை, மின் கட்டணம், கட்டட வரியை தள்ளுபடி செய்யவேண்டும். வரும் கல்வியாண்டில் நோய் தொற்றில் இருந்து மாணவர்களை காக்க முகக்கவசம் அணிவது, சானிடைசரால் கைகளை சுத்தம் செய்வதில் கவனம் செலுத் த வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க 'ஷிப்ட்' முறை பலன்தரும். அதேசமயம் 40 பேர் படிக்கும் வகுப்பில் இருபது, இருபது பேராக வைத்து பாடம் நடத்தலாம். நிலைமை சீராகும் வரை, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று, வாகன வரியில் சலுகை வழங்க வேண்டும்
. டி. கயல்விழி, தாளாளர், பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி, கணவாய்பட்டி.
கொரோனாவின் பாதிப்பில் இருந்து எப்படி மீண்டு வருவோம் என்ற எதிர்கால திட்டம் எதுவும் இல்லாத நிலையில் பள்ளிகளை எவ்வாறு நடத்தலாம் என்ற புதிய கோணத்தில் தினமலர் கருத்து வரவேற்கத்தக்கது. கிராமங்களில் 'நெட்வொர்க்' பிரச்னை இருப்பதால் அதற்கான வசதியுடன் ஆன்லைன் வகுப்பு நடத்தினால் சிரமத்தை தவிர்க்கலாம். பெரியவர்களே சமூக இடைவெளியை கடை பிடிக்காதபோது, புரிதல் இல்லாத குழந்தைகளை கண்காணிப்பது சவாலாகத்தான் இருக்கும். இந்நிலையில் பள்ளிளை ஷிப்ட் முறைக்கு மாற்றலாம் என்ற புதிய யோசனை ஆறுதலாக உள்ளது. எதிர்காலத்தில் இதுவும் சாத்தியமாகும்.
இறைவணக்கத்தை வகுப்பறையில் நடத்தலாம். குழுவிளையாட்டுகளை நிறுத்தி வைக்கலாம். சனிக்கிழமை முழுவேலை நாளாக இயங்குவது, விடுமுறை நாட்களை தவிர்ப்பதால் கூடுதல் வேலைநாள் கிடைக்கும் என்பது அருமையான யோசனைதான். நோய் தொற்றால் சிவப்பு மண்டலத்தில் உள்ள பிளஸ் 2 விடைத் தாள்களை, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களுக்கு கொண்டு வந்துகூட சமூகவிலகலுடன் திருத்தும் பணியை மேற்கொள்ளலாம். ஷிப்ட் முறையை நகர்புறங்களைப் போல கிராமங்களிலும் சாத்தியப்படுத்த வேண்டும். புதிய கல்வி ஆண்டில் வேலை நாட்களுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை குறைக்கலாம்.
எஸ்.சந்தியாகு, தலைமையாசிரியர், புனித மார்செலின் மேல்நிலை பள்ளி,வங்கமனுாத்து
வரும் கல்வியாண்டில் பள்ளிகளை நடத்துவது தொடர்பாக தினமலர் நாளிதழில் வெளியான கட்டுரையில், மாணவர்களின் நலன் காக்க 'ஷிப்ட்' முறையில், சமூக இடைவெளியுடன் வகுப்பு நடத்துவது, தேவையற்ற விடுமுறைகளை தவிர்ப்பது போன்ற நல்ல யோசனைகளை முனைவர் எல்.ராமசுப்பு கூறி இருந்தார். அதேசமயம் பள்ளிக்கு வெளியே மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது சவாலாக இருக்கும். பெற்றோர் அதிக கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்களிடம் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, சானிடைசர் உபயோகிப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது என விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.