TNPSC: தமிழகத்தின் ‘வியாபம்’? - சிறப்பு தலையங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 27, 2020

Comments:0

TNPSC: தமிழகத்தின் ‘வியாபம்’? - சிறப்பு தலையங்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019 செப்டம்பரில் நடத்திய ‘குரூப்-4’ தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. ராமேஸ்வரத்திலும் கீழக்கரையிலும் தேர்வு எழுதியவர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக டிஎன்பிஎஸ்சியின் விசாரணையில் தெரியவந்து 39 தேர்வர்கள் வெற்றிபெற்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 99 தேர்வர்கள் தேர்வாணையத் தேர்வுகளை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. ஆனால், முறைகேட்டில் தொடர்புடைய இடைத்தரகர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில் வேறு மையங்களில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று டிஎன்பிஎஸ்சி அளித்திருக்கும் அவசர விளக்கம் விநோதமாக இருக்கிறது. தமிழகத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் முக்கிய இலக்காக இருக்கின்றன. ‘குரூப்-1’ மற்றும் ‘குரூப்-2’ நிலையிலான தேர்வுகளை எழுதும் மாணவர்கள் விரிவாக விடையளிக்கும் எழுத்துத் தேர்வுகளில் விடைத்தாள்கள் எந்த அடிப்படையில் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன என்று நீண்ட நாட்களாகவே கேள்விகளை எழுப்பிவருகின்றனர். எழுத்துத் தேர்வுகளில் வென்று நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்ளும் தேர்வர்கள், எழுத்துத் தேர்வில் தம்மைவிடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களிடம் நேர்முகத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழக்க நேர்வதையும் அவர்கள் கேள்விக்கு உட்படுத்துகின்றனர். தேர்வர்களின் இந்தக் கேள்விகள் போட்டித் தேர்வு நடைமுறைகளின் இயல்புகளில் ஒன்றாகவே இருக்கிறது என்பதால் அவற்றுக்குப் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இதுவரையிலும் எழவில்லை.
தேர்வர்களின் கடைசி வாய்ப்பு விரிவான விடையளிக்கும் எழுத்துத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் இல்லாதவை ‘குரூப்-2ஏ’, ‘குரூப்-4’ தேர்வுகள். கொள்குறி (objective) வகையில் மட்டுமே வினாத்தாள் அமைந்திருக்கும். எனவே, சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. மதிப்பெண்கள் அடிப்படையில் வேலைவாய்ப்பு உறுதி. எனவே ‘குரூப்-1’, ‘குரூப்-2’தேர்வுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் ‘குரூப்-2ஏ’ மற்றும் ‘குரூப்-4’ தேர்வுகளைத் தங்களது கடைசி வாய்ப்புகளில் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்நிலையில், தற்போது கொள்குறி வினாத் தேர்வுகளும் தங்களது நம்பிக்கையை இழந்திருக்கின்றன. ‘குரூப்-4’ தேர்வுகளில் முறைகேடுகளுக்குப் பின்னணியில் இருந்த இடைத்தரகர்கள் கடந்த ‘குரூப்-2ஏ’ தேர்வில் வென்றவர்கள் என்பதால் அந்தத் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்குமோ என்ற நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன. விசாரணைகள் முடியாதிருக்கும் நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அவசர அவசரமாக வேறு எந்த மையத்திலும் முறைகேடுகள் நடக்கவில்லை என்று அறிவித்திருப்பது மோசமான அணுகுமுறை. 5,000-க்கும் மேற்பட்ட மையங்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதிய தேர்வு இது. வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலான மதிப்பெண்களோடு தேர்வர்கள் வென்றுள்ளனர் என்றபோதே டிஎன்பிஎஸ்சி விழித்துக்கொண்டிருக்க வேண்டும். காலம் தாமதித்தேனும் டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்றாலும் ‘குரூப்-4’ தேர்வு குறித்து அதை எழுதிய மாணவர்களிடையே அவநம்பிக்கையும் மனச்சோர்வும்தான் ஏற்பட்டிருக்கின்றன. பெரிய எண்ணிக்கையில் தேர்வர்களைக் கொண்ட ‘குரூப்-4’ தேர்வுகளை மீண்டும் நடத்த வேண்டுமா என்று டிஎன்பிஎஸ்சி யோசிக்கிறது என்றே தோன்றுகிறது.
மறுதேர்வுக்கு முன்னுதாரணம் உண்டு சில வருடங்களுக்கு முன்னர், டிஎன்பிஎஸ்சி நடத்திய ‘குரூப்-2’ தேர்வின்போது வினாத்தாள்கள் கசிந்தது கண்டறியப்பட்டது. தேர்வு நாளன்றே விசாரணைகள் தீவிரமடைந்தன. வினாத்தாள்கள் மின்னஞ்சல் வழியாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டது தெரியவந்தது. அந்த முறைகேட்டில் தொடர்புடைய போட்டித் தேர்வு பயிற்சி மையம் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. தேர்வு ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு மறுதேர்வும் நடத்தப்பட்டது. அதே மறுதேர்வு நடைமுறையைத் தற்போதும் தேர்வாணையம் பின்பற்றலாம். ‘குரூப்-2’ வினாத்தாள் கசிந்தபோதே தேர்வாணையம் தன்னுடைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்தால் தற்போதைய முறைகேடுகள் நடந்திருப்பதற்கான வாய்ப்பு உருவாகியிருக்காது என்பதையும் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். எனினும், அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தேர்வு மையங்களில் தேர்வு தொடங்குவதற்கு முன்பு வினாத்தாள்கள் பிரிக்கப்படுவதும், தேர்வு முடிந்து விடைத்தாள் கட்டுகள் முத்திரையிடப்படுவதும் கேமராக்களில் பதிவுசெய்யப்பட்டன. தேர்வு அறைகளுக்குள் குறுக்கும் நெடுக்குமாக கேமராக்கள் வலம் வந்தன. தேர்வு மையங்கள் படப்பிடிப்புத் தளங்களைப் போல காட்சியளித்தன. ஆனால், கடைசியில் தேர்வு மையத்துக்கு வெளியே முத்திரையிடப்பட்ட விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டுத் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு முன்பே இவை கவனிக்கப்படவில்லையா என்ற கேள்வியை டிஎன்பிஸ்சி எதிர்கொண்டிருக்கிறது.
மேஜிக் பேனா? சில மாணவர்கள், ‘குரூப்-4’ தேர்வில் எழுதிய கொஞ்ச நேரத்தில் அழிந்துவிடும் தன்மையுடைய மையைக் கொண்ட மேஜிக் பேனாக்களைப் பயன்படுத்தி விடையளித்தார்கள் என்று கூறப்படுகிறது. கொள்குறி அடிப்படையில் வினாத்தாள்கள் அமையும்போது விடைத்தாள்கள் நம்பகமான வகையில் மதிப்பிடப்படுவது அவசியம். பல்கலைக்கழக மானியக் குழுவின் ‘நெட்’ தேர்வு கொள்குறி வினாக்களாக மாறியபோது மாணவர்கள் பேனாக்கள் எடுத்துவர அனுமதி மறுக்கப்பட்டதோடு பதில்களைக் குறிப்பதற்குத் தேர்வு மையத்திலேயே பேனாக்கள் வழங்கப்பட்டன. டிஎன்பிஎஸ்சியும் இந்த முறையை யோசிக்கலாம். இரண்டு ரூபாய் பெறுமதியான பால்பாய்ன்ட் பேனாவைத் தேர்வர்களுக்குக் கொடுப்பது ஒன்றும் பெரிய நிதியிழப்பை ஏற்படுத்திவிடாது. பென்சிலைப் பயன்படுத்தி விடைகள் குறிக்கப்பட்டுவந்த நடைமுறையை மாற்றி, பால்பாய்ன்ட் பேனாவுக்கு மாறிய டிஎன்பிஎஸ்சி இதைக் குறித்தும் யோசிக்கலாம். தேர்வு முறைகேடுகளைக் களைய கணினிவழித் தேர்வுகள் ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகின்றன. ஆனால், கணினிவழித் தேர்வுகளும் உரிய கண்காணிப்புகளோடு நடத்தப்பட்டால்தான் நம்பிக்கையைப் பெற முடியும். பாடத்திட்ட மாற்றங்களிலும் தேர்வுகளை விரைந்து நடத்தி முடிவுகளை வெளியிடுவதிலும் டிஎன்பிஎஸ்சி சமீப காலங்களில் காட்டிவரும் ஆர்வமும் முயற்சிகளும் பாராட்டத்தக்கது. அதே அளவுக்குத் தேர்வுகளை நம்பிக்கையோடும் நடத்தி முடிக்க வேண்டியது அவசியம். ‘குரூப்-4’ தேர்வு அதை எழுதிய தேர்வர்களிடம் முழு நம்பிக்கையை இழந்துவிட்டது. மறுதேர்வு நடத்துவது ஒன்றுதான் தீர்வு. குறைந்தபட்சம், விசாரணைகள் முடியும் வரைக்கும் பணி நியமனங்களையாவது நிறுத்திவைக்க வேண்டும். தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டவர்கள் ஏற்கெனவே பணியில் சேர்ந்துவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கும் எந்தவொரு முயற்சியும் மேன்மேலும் இந்த முறைகேடுகளை ஊக்குவிக்கவே செய்யும்.
ஆன்மப் பரிசோதனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட நூற்றுக்கும் சற்று மேற்பட்ட மாணவர்களோடு இந்தப் பிரச்சினை முடிந்துவிடக் கூடியதல்ல. அவர்களுக்கு இடைத்தரகர்களாகச் செயல்பட்ட நான்கைந்து பேர்களைக் கைதுசெய்வதோடு இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டிவிடவும் கூடாது. இரண்டு வட்டாட்சியர்களும் ஒருசில அலுவலக உதவியாளர்களும் சேர்ந்து இந்த முறைகேட்டைச் செய்துவிட முடியும் என்பது நம்புவதற்குரியது அல்ல. இந்தப் பின்னணியில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பெரும் பின்னணி இருந்தாக வேண்டும். மனச்சாய்வுகளுக்கும் அழுத்தங்களுக்கும் வாய்ப்பு இல்லாமல் விசாரணை தொடரும்பட்சத்தில், மத்திய பிரதேச ‘வியாபம்’போல தமிழகத்திலும் நீண்ட காலமாகத் தொடர்ந்துவரும் மாபெரும் ஊழல் வெளிச்சத்துக்கு வரலாம். இருபது தொடங்கி முப்பது வயது வரையிலான காலகட்டம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிக முக்கியமானது. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தங்கள் திறமையும் முயற்சிகளும் ஒரு அரசுப் பணியைப் பெற்றுத் தந்துவிடும் என்று அரசு நூலகங்களில் ஆண்டுகளைச் செலவிடும் ஏழை இளைஞர்களிடம் தேர்வாணையம் நம்பிக்கையை இழந்துவிட்டது. இழந்த நம்பிக்கையை விரைந்து பெறுமா? டிஎன்பிஎஸ்சி ஆன்மப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரமிது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews