வினாத்தாள் அமைப்பு
70 மதிப்பெண்களுக்கான விலங்கியல் பாடத்தின் கருத்தியல் வினாத்தாள் 4 பகுதிகளாக அமைந்துள்ளது. ஒரு மதிப்பெண்களுக்கான முதல் பகுதியில் 15 வினாக்கள் உள்ளன. 2 மதிப்பெண்களுக்கான பகுதியில் கொடுக்கப்பட்ட 9 வினாக்களில் இருந்து 6-க்குவிடையளிக்க வேண்டும். இவற்றில்ஒன்று கட்டாய வினாவாக அமைந்திருக்கும். 3 மதிப்பெண்களுக்கான பகுதியும், 9-ல் இருந்து நன்கறிந்த 6வினாக்களுக்கு பதில் அளிப்பதாகவும்,அவற்றில் ஒன்று கட்டாய வினாவாகவும்அமைந்துள்ளது. ஐந்து மதிப்பெண்பகுதியானது ‘அல்லது’ வகையிலான 5 வினாக்களுடன் அமைந்திருக்கும்.
ஒரு மதிப்பெண் பகுதியில் ’பொருத்துக, கூற்று மற்றும் காரணம், தவறான இணையை கண்டுபிடி, தவறான அல்லது சரியான கூற்றை கண்டுபிடி’ உள்ளிட்ட வினாக்கள் இடம்பெறும்.ஒரு மதிப்பெண் பகுதிக்கு விடையளிக்கையில், உடனடியாக விடைநினைவுக்கு வரவில்லையெனில், கொடுக்கப்பட்ட விடைகளில் தொடர்பற்றதை ஒவ்வொன்றாக நீக்குவதன் மூலமும் சரியான விடையை அடையாளம் காணலாம்.
2 மதிப்பெண் பகுதி வினாவுக்கு 30 வார்த்தைகளுக்குள் விடையளிக்க வேண்டும் என்பதால், அதற்குள் அனைத்துக் கருத்துக்களையும் உள்ளடக்கி சுருக்கமாக எழுதிப் பயிற்சி பெற்றால் மட்டுமே முழு மதிப்பெண் பெறலாம். ’ஏன், எவ்வாறு, எப்படி, எதனால்’ என்பதாக இரு மதிப்பெண் வினாக்கள் அமைந்திருக்கும் என்பதால், வினாவின் நோக்கத்தை புரிந்துகொண்டு விடைஅளிக்கத் தொடங்குவது நலம்.கவனக்குறைவால் மிக எளிமையான வினாக்களுக்குக் கூடதவறாக விடையளித்துவிட வாய்ப்பாகிறது.
5 மதிப்பெண் பகுதியில் ’அல்லது’ வகையிலான இரு வினாக்களில் தனக்கு உகந்ததை தேர்வு செய்வதில் முன்பயிற்சியும், தெளிவும் அவசியம். பக்கங்களில் நீளும் வினாக்களைவிட பாயிண்டுகளில் விரைவாக முடிக்கவல்ல வினாக்களுக்கு முன்னுரிமைதரலாம். இதனால் முழு மதிப்பெண் உறுதியாவதுடன், நேர விரயமும் தடுக்கப்படுகிறது. 3 மதிப்பெண் போலவே 5மதிப்பெண் பகுதியிலும், உயர் சிந்தனைக்கான வினாக்களை சற்று கவனமாக அணுக வேண்டும். உதாரணமாக, ‘மாதவிடாய் சுழற்சியை விவரி’ என்ற வினாவினை, ’திருமணமான ஒரு பெண் பாதுகாப்பற்ற பாலுறவாலும் தான் கருத்தரிக்கவில்லை என்பதனை இனப்பெருக்க மண்டலத்தின் செயல்பாடுகளால் உறுதி செய்கிறாள். அச்செயல்பாடுகளின் நிகழ்வுகளை விவரி’என்பதாகவும் கேட்கலாம். எனவே வினாவினை பல முறை வாசித்து பொருளுணர்ந்து, உரிய விடையினை அடையாளம் கண்ட பிறகே விடையளிக்கத் தொடங்க வேண்டும்.
விலங்கியலின் கருத்தியல் தேர்வின்தேர்ச்சிக்கு 15 மதிப்பெண்கள் பெற்றாலே போதும். கூடுதலாக உழைத்தால் தேர்ச்சிக்கு அப்பால் அதிக மதிப்பெண்களைப் பெறுவதுடன்,போட்டித் தேர்வுகளுக்கு அடிப்படையான விலங்கியலில் விரிவான அறிவு பெறுவதும் சாத்தியமாகும்.
அலகு 1-ன் 3 பாடங்கள் மற்றும்அலகு 5-ன் 3 பாடங்கள் ஆகியவை ஒப்பீட்டளவில் எளிமையானவையாகும். இவற்றுக்கு உரிய நேரம் ஒதுக்கி முழுமையாக படிப்பதுடன் முறையாக எழுதிப் பார்ப்பதன் மூலம் 20 முதல் 30 மதிப்பெண்கள் வரை உறுதி செய்யலாம். அவை உறுதியானதும், கூடுதலாக அலகு 2-ன் கடினமற்ற 4 மற்றும் 6-ஆம்பாடங்களில் கவனம் செலுத்தலாம். இவற்றுடன் அலகு3-ன்பாடங்களில் காணப்படும், ‘இம்முனோகுளோபுலின் அமைப்பு, ஹெச்ஐவி அமைப்பு, எய்ட்ஸ் அறிகுறி, எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கை, உயிரி உரங்கள், உயிரி வாயு’ உள்ளிட்ட எளிய பாடக் கருத்துக்களையும் படித்தால் உயர் மதிப்பெண்கள் சாத்தியமாகும்.
முழு மதிப்பெண் எடுப்பதை லட்சியமாகக் கொண்ட மாணவர்கள் பாடநூல்முழுமைக்கும் வாசித்து பாடக் கருத்துக்களை முழுமையாக புரிந்துகொள்வது அவசியம். இந்த வாசிப்பினை பல முறை மேற்கொள்வதுடன் தேவையான இடங்களில் ஒப்பீடுசெய்தும் திருப்புதல் மேற்கொள்வது பாடத்தின் முக்கியக் கருத்துகள் மனதில் தங்குவதற்கும் உதவும். அவ்வாறு வாசிக்கும்போது குறிப்புகள் எடுப்பதும், அக்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு திருப்புதல் செய்வதும் சிறப்பான பலன்களைத் தரும்.
உயர் சிந்தனை வினாக்கள் மற்றும்சில நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களைமையமாகக் கொண்ட மறைமுக வினாக்கள் ஆகியவற்றை மனப்பாடம் செய்வது முழு மதிப்பெண் தராது.புரிந்துகொள்வதும் அதன் அடிப்படையில் தேவையான திருப்புதல்கள் மேற்கொள்வதுமே பாடக்கருத்துக்களை மனதில் பதியச் செய்யும். இவ்வாறு ஆழப் புரிந்துகொள்வதால், வினாக்களைசற்றே திருகிக் கேட்டாலும் சரியான முறையில் விடையளிக்க ஏதுவாகும்.
- பாடக் குறிப்புகள் வழங்கியவர்:
பொ.ஜெயராஜ்,
முதுகலை ஆசிரியர் (விலங்கியல்),
அரசு மேல்நிலைப்பள்ளி,
கொல்லங்கோடு,
கன்னியாகுமரி மாவட்டம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.