Search This Blog
Wednesday, January 22, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நம் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைக் கல்வியை வழங்கிவரும் நிறுவனங்களில் முதன்மையானதாக விளங்குகிறது இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம். சர்வதேச அளவில் உள்ள பல பாடத்திட்டங்களை மாணவர்கள் வீட்டிலிருந்தே பயில இந்தப் பல்கலைக்கழகம் உதவுகிறது. நீண்டகால பாடங்கள் மட்டுமல்லாமல், பல குறுகியகால பாடத் திட்டங்களை வழங்குவதன் மூலம் மாணவர்கள் மட்டுமல்லாமல், பணியில் இருப்பவர்கள் தொடர்கல்வி பெறவும், தங்கள் பணிக்கான கூடுதல் உயர்கல்வியைப் பெறவும் இந்த நிறுவனம் பங்களித்து வருகிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி பள்ளி (School of Vocational Education and Training- SOVET) சில முக்கிய குறுகியகால பாடத்திட்டங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்று, நவீன அலுவலகப் பயிற்சிக்கான டிப்ளமா கோர்ஸ் (Diplome in Modern Office Practice- DMOP). இந்த டிப்ளமா கோர்ஸில், அலுவலகச் செயலாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களின் வழக்கமான நடைமுறைகள் கணினி உதவி மேலாண்மை நுட்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. நவீன அலுவலகச் சூழலில் செயலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒரு முக்கியமான மற்றும் பல்துறை விசயங்களைக் கையாள்பவர்களாக உள்ளனர். சிறந்த தகவல் தொடர்பு மற்றும் நிறுவனத் திறன்களுடன் அலுவலக மேலாண்மை மற்றும் நடைமுறைகள் குறித்த முழுமையான அறிவும் அவர்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய வணிகச் சூழலில், இதுபோன்ற பல திறமையான செயலாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களை பெரும்பான்மையான நிறுவனங்கள் தேடுகின்றன. இந்த நிலையில், எந்தவொரு வேலைவாய்ப்புத் துறையிலும் நுழைவுமட்டத்தில் அனைத்து திறன் கொண்ட பணியாளர்களை நவீன அலுவலகப் பயிற்சித் திட்டம் உருவாக்கும்.
ஆங்கில வழியில் பயிற்றுவிக்கப்படும் இந்த கோர்ஸில் பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். மாணவர்களின் திறன் அடிப்படையில் ஓராண்டில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் கோர்ஸை முடிக்கலாம். ஜூலை மற்றும் ஜனவரி மாதங்களில் சேர்க்கை நடைபெறுகிறது. கல்விக் கட்டணம் ரூ. 6 ஆயிரம். இதற்கான பாடத்திட்டம் 5 படிநிலைகளைக் கொண்டுள்ளது. சுய கற்றல் பொருள் (Self Learning Material) சுமார் 40 சதவீத பாடங்கள் அச்சிடப்பட்ட புத்தக வடிவத்திலும் (குறிப்பாக நடைமுறைக் கூறுகளைக் கொண்ட படிப்புகள்), 60 சதவீத பாடங்கள் மின் அஞ்சலில் பெறும் வகையில் மென்பொருள் பிரதிகளாகவும் (soft copies) வழங்கப்படும்.
Modern Office Practice பாடத்திட்டம் தனிப்பட்ட உதவியாளர், தனியார் செயலாளர், ஸ்டெனோகிராஃபர்கள், அலுவலக மேலாளர்கள், அலுவலக நிர்வாகிகள், நிர்வாக உதவியாளர்கள், முன்னணி முடிவு நிர்வாகிகள், தரவு நுழைவு ஆபரேட்டர்கள், கணினி ஆபரேட்டர்கள் மற்றும் சுய வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக இருக்கும். இதில் சேரவிரும்பும் மாணவர்கள் ignouadmission.samarth.edu.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
மேலும், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் ஜனவரி 2020 முதல் Certificate in Tourism Studies (CTS), Certificate in Arabic Language (CAL), Certificate in Russian Language (CRUL) என்ற 3 இணையதள சான்றிதழ் பாடத்திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாடத்திட்டங்கள் குறித்து பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாவது:
Certificate in Tourism Studies: அண்மைய ஆண்டுகளில் சுற்றுலா மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தும் ஒரு தொழிலாக வளர்ந்துள்ளது. சுற்றுலா திட்டத்தின் பல பகுதிகள் தொழில்முனைவோருக்கு தங்கள் சொந்த வியாபாரத்தை நிறுவுவதற்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன. என்றாலும், பெரிய அல்லது சிறிய அளவில் கூட சுற்றுலா குறித்த ஆய்வுகள் ஒரு கல்வித் துறையாக மிகவும் சிறப்பாக இன்னும் உருவாக்கப்படவில்லை. அதன் ஆய்வுக்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன. ஏராளமான தொழிலாளர்கள் பயனடையும் சுற்றுலாவின் பல்வேறு அம்சங்கள் முறையாக ஆய்வுசெய்யப்பட அவசியமுள்ளது. எதிர்காலத்தில் சுற்றுலாவின் ஏதேனும் ஒரு பகுதியில் தங்கள் வாழ்க்கையை உருவாக்க விரும்பும் அல்லது ஏற்கெனவே பல்வேறு மட்டங்களில் சுற்றுலா தொடர்பான பகுதிகளில் பணியாற்றும் நபர்களை மனதில் கொண்டு CTS திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கற்பிக்கப்பட்டும் இந்த கோர்ஸில் சேர்வதற்கான கல்வித் தகுதி பிளஸ் 2 அல்லது அதற்கு சமமானவை. திட்டத்தின் காலம்: குறைந்தபட்சம் 6 மாதங்கள், அதிகபட்சம் ஓராண்டு. தொடக்க வெளியீட்டு கட்டணம் முழு திட்டத்திற்கும் (தேர்வுக் கட்டணம் தவிர்த்து) ரூ. 1800.
Certificate in Arabic Language: இந்தத் திட்டம் ஆரம்ப அரபு மொழியின் அத்தியாவசிய அடிப்படைகளுடன் அறிமுகம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், படிப்படியாகவும், முறையாகவும் ஒரு குறிப்பிட்ட அளவிலான துல்லியம் மற்றும் நம்பிக்கையுடன் மொழியைப் பேசவும், எழுதவும், படிக்கவும் ஒரு திறனை ஊக்குவிக்கிறது. ஆங்கிலவழியில் கற்பிக்கப்படும். திட்டத்தின் காலம்- குறைந்தபட்சம் 6 மாதங்கள், அதிகபட்சம் ஓராண்டு. இதில் சேர 18 வயதுடையவராகவும், பிளஸ் 2 முடித்தவராகவும் இருக்க வேண்டும். தொடக்க வெளியீட்டு கட்டணம் முழு திட்டத்திற்கும் (தேர்வுக் கட்டணம் தவிர்த்து) ரூ. 1800.
Certificate in Russian Language: இது 16 கிரிடிட்டுகள் கொண்ட 6 மாத கோர்ஸ். ரஷ்ய இலக்கணம் மற்றும் ஒலிப்பியல் (Russian grammar and phonetics) ஆகியவற்றின் அடிப்படைகளை அறிமுகப்படுத்துவதே இந்த கோர்ஸின் நோக்கம். இதன்மூலம், மாணவர்கள் ரஷ்ய மொழியை நன்றாகப் படிக்க, எழுத, கேட்க மற்றும் பேச முடியும். இந்த கோர்ஸ் ரஷ்ய, ஆங்கில மொழிகளில் இணைந்து கற்பிக்கப்படும். இந்தப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் அவர்களின் அன்றாட தகவல்தொடர்புகளில் நம்பிக்கையுடன் ரஷ்ய மொழியை பேசவும் எழுதவும் உதவும்.
சேர்க்கைக்கான தகுதி: பிளஸ் 2. குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். திட்டத்தின் காலம்: குறைந்தபட்சம் 6 மாதங்கள்; அதிகபட்சம் ஓராண்டு. தொடக்க வெளியீட்டு கட்டணம் முழு திட்டத்திற்கும் (தேர்வுக் கட்டணம் தவிர்த்து) ரூ. 2500.
இந்தப் பாடத்திட்டங்களில் ஓர் ஆசிரியர் ஒவ்வொரு கற்பவருக்கும் நான்குவித அணுகுமுறைகளின் மூலம் வழிகாட்டுவார்கள். வழங்கப்படும் பாடங்கள் உயர் தரத்திலும், புரிந்துகொள்ள எளிதானதாகவும், கற்றல் உள்ளடக்கத்தில் 5 மணிநேர வீடியோக்கள் மற்றும் ஒரு கிரெடிட்டுடன் தொடர்புடைய பாடங்கள் ஆகியவை இருக்கும். இது கற்பித்தல்-கற்றல் செயல்முறையைப் பலப்படுத்தும். மாணவர்கள் நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்படுவர். மேலும், 24 × 7 ஆன்லைன் ஆதரவு கிடைக்கும் எனவும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது. இந்த கோர்ஸ்களில் சேர iop.ignouonline.ac.in Gu என்ற இணைய முகவரியில் பதிவுசெய்யலாம்.
- இரா.மகாதேவன்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
IGNOU - புதிய குறுகிய கால படிப்புகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.