👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இப்போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அரசு பணிகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் 21 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வங்கிகளை தனியார் மயமாக்கவோ இணைக்கவோ கூடாது; வைப்பு தொகைகளுக்கான வட்டியை அதிகரிக்க வேண்டும்; வாராக் கடன்களை வசூலிக்க வேண்டும் என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உட்பட ஐந்து சங்கங்கள் இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்கின்றன. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் வெங்கடாசலம் கூறியதாவது: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஐந்து லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக சென்னையில் உள்ள காசோலை பரிவர்த்தனை மையத்தில் 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு லட்சம் காசோலைகள் தேங்கும்.
இதேபோல மும்பை மையத்தில் 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான 13 லட்சம் காசோலைகளும் டில்லி மையத்தில் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏழு லட்சம் காசோலை பரிவர்த்தனைகளும் பாதிக்கும். நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான 28 லட்சம் காசோலை பரிவர்த்தனைகள் முடங்கும். சென்னையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இன்று பஸ்கள் ஓடுமா?
மத்திய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் இன்றைய வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களும் பங்கேற்கின்றன.இதனால் அரசு அலுவலகங்களின் அன்றாட பணிகளும் பள்ளிகளும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. மேலும் அரசு போக்கு வரத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன. போக்குவரத்து விதிமீறல்களுக்கு 10 மடங்கு அபராதம் வசூலிப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து இந்த சங்கங்கள் இன்றைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
இதில் தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., மற்றும் கம்யூனிஸ்ட், காங். உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன. இதனால் இன்று காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை பஸ்கள் போக்குவரத்து பாதிக்கப்படும் என தெரிகிறது. ஆனால் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்றும் விடுமுறைகள் ரத்து செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளதால் 50 சதவீதத்துக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளம் 'கட்': மத்திய அரசு எச்சரிக்கை!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'இதில் பங்கேற்றால் சம்பள பிடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்' என மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
பல்வேறு மத்திய அரசு திட்டங்களை எதிர்த்தும் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் நாடு தழுவிய போராட்டத்துக்கு பாரதிய மஸ்துார் சங்கத்தைத் தவிர்த்து மற்ற மத்திய தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் வங்கி சங்கங்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. நாடு முழுவதும் 25 கோடி பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பர் என கருதப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி: ஊழியர்கள் சங்கங்கள் அமைப்பதற்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது மிகப் பெரிய ஒழுங்கீனம் என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கவும் தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில அமைப்புகள் விடுத்துள்ள அழைப்பை ஏற்று மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பள பிடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும். வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நாளில் அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் பணியில் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த விடுமுறை எடுக்கக் கூடாது. எந்தக் காரணங்களுக்காகவும் யாருக்கும் விடுமுறை அளிக்கக் கூடாது. மேலும் வேலைக்கு வருவோரை தடுக்கக் கூடாது. ஊழியர்களின் பாதுகாப்பை சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.