தமிழகத்தில் தேய்ந்துவரும் சத்துணவு திட்டம்: கலவை சாதம் வழங்குவதில் சிக்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 24, 2019

Comments:0

தமிழகத்தில் தேய்ந்துவரும் சத்துணவு திட்டம்: கலவை சாதம் வழங்குவதில் சிக்கல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சத்துணவில் ஒரு மாணவனுக்கு காய்கறி, மளிகை, விறகு என ரூ.1.80 பைசா ஒதுக்கீடு செய்த நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக கலவை சாதம் வழங்குவதில் அமைப்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இத்தொகையை உயர்த்தித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்தக் கூடாது என்பதற்காகவும், பள்ளிக்கு மாணவர்கள் வருகையை ஊக்கப்படுத்தவும் இலவச மதிய உணவுத் திட்டத்தை, கடந்த 1955ம் ஆண்டு காமராஜர் கொண்டு வந்தார். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில், எட்டயபுரத்தில் முதன்முதலாக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் 1982ம் ஆண்டு, ஊரகப் பகுதியில் உள்ள பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டு, நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
தொடக்கத்தில் 2 வயது முதல் 9 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு ஆரம்பப் பள்ளிகளில் சத்துணவு வழங்கப்பட்டது. இதன் பிறகு 1984ம் ஆண்டு 15 வயது வரைக்கும் என நீடிக்கப்பட்டது. இப்போது, 10ஆம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. 1989ம் ஆண்டு சத்துணவில் முட்டை வழங்கும் திட்டமும், 2001ம் ஆண்டு பயறு வகைகள், உருளைக் கிழங்கு, 2013ம் ஆண்டு வாரத்தில் நான்கு நாட்கள் கலவை சாதம், ஒரு நாள் சாம்பார் சாதமும் வழங்குகிறது. அதோடு, தினசரி ஒரு முட்டை, வாரத்தில் ஒருநாள் கொண்டைக்கடலை அல்லது பச்சைப்பயறு 20 கிராம் வழங்கப்படுகிறது.தமிழகத்தில் தற்போது 44 ஆயிரம் சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், 60 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கும்உணவு வழங்கப்படுகிறது. சத்துணவு மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எரிபொருள் செலவு, மளிகை செலவு, காய்கறி செலவு ஆகியவற்றை சேர்த்து ரூ.1.30 காசு, 6 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு காய்கறி 80 பைசா, மளிகை 40 பைசா, விறகு 48 பைசா என ரூ.1.70 காசு வழங்கப்படுகிறது. இவ்வாறு சத்துணவு மையங்களில் நபர் ஒருவருக்கு ரூ.1.70 காசுகள் என தமிழக அரசு வழங்கும் நிலையில், சில சத்துணவு மைய பணியாளர்கள் தங்களது சொந்தப் பணத்தை செலவழித்து மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல மாநிலங்கள் சத்துணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் படிப்படியாக அத்திட்டம் தேய்ந்து வருவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் கல்வியாளர்கள்.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘’பல பகுதிகளில் சத்துணவை பிள்ளைகள் சாப்பிடுவதே இல்லை. வாங்கி கீழே கொட்டுகிறார்கள். ருசியே இல்லாமல் தண்ணீரைப் போல இருக்கிறது சாப்பாடு. சத்துணவை கண்காணிக்க பல்வேறு குழுக்கள் இருக்கின்றன. ஆனால் எதுவும் செயல்பாட்டில் இல்லை. கல்வி உரிமைச் சட்டப்படி அமைக்கப்படும் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உண்டு. ஆனால் எந்தப் பள்ளியிலும் முறையாக அந்தக் குழு அமைக்கப்படவில்லை’’ என்றனர். சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையியில், ‘’வாரம் முழுவதும் முட்டை, வாரத்தில் ஒருநாள் கலவை சாதம், கொண்டைக் கடலை, உருளைக் கிழங்கு என பல்வேறு நிலைகளில் சத்துணவு திட்டத்தை அரசு மேம்படுத்தியுள்ளது. ஆனால், அவற்றுக்கான செலவுத் தொகையை மட்டும் நபர் ஒருவருக்கு ரூ.1.70 காசுகள் என்ற நிலையில் வைத்துள்ளது. இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இத் தொகையை நபர் ஒருவருக்கு ரூ.3 ஆக உயர்த்த வேண்டும். சத்துணவு ஊழியர்களின் எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் நிதி இல்லை என்ற வார்த்தை மட்டுமே பதிலாக கிடைக்கிறது’’ என்றார்.
25 கிராமில் ‘புல்லட் முட்டை’ சப்ளை சத்துணவு மையங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், உப்பு, பயறு, கொண்டைக்கடலை போன்ற பொருட்கள் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் இருந்து வருகின்றன. இதில், ஒவ்வொரு மூட்டையிலும் சராசரியாக 5 கிலோ வரை எடை குறைவாக உள்ளது. புகார் செய்தாலும் நடவடிக்கை இல்லை. 45 நாளுக்கான பொருட்களை ஸ்டாக் வைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், பொருட்கள் தரமில்லாமல் வருவதால் ஒரு வாரத்திலேயே பூச்சி பிடித்து விடுகின்றன. கெட்டும் வீணாகி விடுகின்றன. ஒரு மாணவனுக்கு 150 கிராம் அரிசி தருகிறார்கள். மூன்று வேக்காடு போட்டால்தான் அரிசியை வேக வைக்கவே முடியும். பருப்பும் தரமற்றதாக இருக்கிறது. எவ்வளவு வேக வைத்தாலும் விழித்துக்கொண்டே கிடக்கிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டையின் எடை 40 கிராம் இருக்க வேண்டும். ஆனால் 25 கிராம் எடை கொண்ட புல்லட் முட்டைகள்தான் சப்ளை செய்யப்படுகிறது. முட்டை, உற்பத்தியாகும் இடத்திலிருந்து பள்ளிக்கு வர 20 நாட்களுக்கு மேலாகிவிடுகிறது. இதனால் அதில் பல முட்டைகள் கெட்டுப் போகின்றன.
அமைப்பாளர்களின் கோரிக்கைகள் என்ன? ஒரு குழந்தைக்கு காய்கறிக்கு 82 பைசாவும், மளிகைப் பொருள்களுக்கு 40 பைசாவும், எரிபொருள் வகைக்காக 48 பைசாவும் அரசு மானியம் வழங்கப்படுகிறது. கலவை சாதத்துக்கு காய்கறி வகைகளில் தக்காளி, கேரட், பீன்ஸ், பல்லாரி, உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.மல்லி, வத்தல், கடுகு, புளி, வெந்தயம், சீரகம், காயம், மிளகு போன்ற மளிகைப் பொருள்களைப் பயன்படுத்தி, கலவை சாதம் தயாரித்து வழங்க வேண்டும். சந்தையில் காய்கறி, மளிகைப் பொருள்களின் விலை ஏற்றத் தாழ்வுடன் காணப்படுவதால் அரசு வழங்கும் மானியம் போதுமானதாக இல்லை. ஒரு மாணவனுக்கு காய்கறி, மளிகைப் பொருள்கள், எரிபொருள் என குறைந்தது ரூ.3 வழங்கினால் தான் தரமான சத்துணவு வழங்க முடியும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews